அரண்மனை4
இயக்குனர் – சுந்தர் சி,
நடிகர்கள் – சுந்தர் சி, தமன்னா , ராஷி கண்ணா , யோகி பாபு,
இசை – ஹிப் ஹாப் தமிழா,
தயாரிப்பு – குஷ்பு சுந்தர்
ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் ஒருவன் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான், அந்த அரண்மனையில் உள்ள சில விலை உயர்ந்த பொருட்களை விற்கும் வியாபாரம் செய்து வருகிறான். அந்த அரண்மனையில் மற்றுமொறு சொந்தக்காரர் தனது பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார், இன்னிலையில் அந்த அரண்மனையில் வாழும் நாயகன் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறான், இதற்கு காரணம் ஒரு பேயாக இருக்கிறது , அது அந்த குழந்தைகளையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது, இதற்கான காரணம் என்ன எதற்காக அந்த பேய் இந்த குடும்பத்தை பழி வாங்க நினைக்கிறது என்பதே இப்படத்தின் மீதிக்கதை,
தமிழ் சினிமாவில் காஞ்சனா மற்றும் அரண்மனை படத்திற்கென மிகப்பெரிய ரசிகப்பட்டாளமே இருக்கிறது, மூன்று பாகங்களின் வெற்றியை கடந்து இப்போது நாங்காவது பாகம் வெளியாகியுள்ளது,, படம் முழுவதும் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கொண்டாடும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கிறது. குறிப்பாக வடநாட்டு மக்களை அச்சுறுத்தும் பாக் என்ற தீய சக்தியை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை ஏற்கனவே வெளியான மூன்று அரண்மனை படங்களில் இருந்து இதை சற்று வித்தியாசப்படுத்தியும் காட்டுகிறது.
படத்தில் இயக்குனர் சுந்தர்.சி கதா நாயகனாக நடித்துள்ளார். அவர் தான் ஏற்ற வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் வழக்கம் போல் வலம் வருகிறார்.இந்தப் படத்தில் அவருக்கு ரொமான்ஸ் காட்சிகள் அந்தளவு எடுபடவில்லை.
இந்தப் படத்தில் தமன்னா இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார் இந்தப் படத்தில் பல எமோஷனல் காட்சிகளில் அற்புதமாக நடித்துள்ளார், ஒரு பக்கம் தாயாகவும் பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மறு பக்கம் பேயாக நடித்து அனைவரையும் பயமுறுத்துகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதானாயகி ராஷி கண்ணாதான் ஆனால் அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. அவருக்கு தனி பாடல் கூட இல்லை. திடீரென்று பளிச்சென்று வருபவர், திடீரென்று மறைந்து விடுகிறார். ராஷி கன்னா ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் தான்.
யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் ஆகியோரது காமெடி அனைத்தும் மெய் மறந்து சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் அவ்வபோது இணையும் மறைந்த சேசுவின் காட்சிகள் காமெடி போனஸாக அமைந்திருக்கிறது.சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் என படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதிலும், க்ளைமாக்ஸில் வரும் அம்மன் பாடல் ஆக்ரோஷமாகவும், பக்தி மயமாகவும் அமைந்திருக்கிறது. திகில் மற்றும் கமர்ஷியல் ஜானர்களுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசை பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருப்பதோடு, படத்திற்காக செய்த செலவுகளை காட்சிகளில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தின் துவக்கம் முதல் இறுதிக் காட்சி வரை பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தை நகர்த்தி சென்றிருக்கிரார் இயக்குநர் சுந்தர்.சி. ஒரு பக்கம் பேயின் மிரட்டல் மறுபக்கம் நட்சத்திரங்களின் நகைச்சுவை விருந்து, என இரண்டையும் அளவாக கொடுத்து குழந்தைகளையும், பெண்களையும் தன்வசப்படுத்தும் இயக்குநர் மொத்த படத்தையும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தி சில இடங்களில் சினிமா ரசிகர்களையும் வியப்படைய செய்கிறார். இறுதிப் பாடல் காட்சி ஆட்டம் போட வைக்கும் அதிரடியான பாடலாக மட்டும் இன்றி இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்து தோன்றும் வகையில் ஆர்ப்பரிப்பாக இருக்கிறது,
இயக்குனர் சுந்தர் சி லாஜிக் மற்றும் நுனுக்கங்கள் என அனைத்தையும் ஓரம் கட்டி வைத்து விட்டு ரசிகர்களை ஒவ்வொரு இடத்திலும் என்டர்டெயின் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த அரண்மனை 4 கோடைகாலக் கொண்டாட்டம்.
கோடைக்கால விடுமுறையில் சிறுவர்களுடன் சேர்ந்து குடும்பமாக பார்க்க கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சுந்தர்.சி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
Rating 3/5