“ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம்
“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா
“சின்ன மக்கள் திலகம்” ; ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் புகழாரம்
”9 வருடமாக போராடிய என்னை இயக்குநராக்கியது ராமராஜனின் ராசியான கை தான்” ; கே.எஸ்.ரவிக்குமார்
“வனவாசம் முடிந்து வந்துள்ள ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இனி பட்டாபிஷேகம் தான்” ; இயக்குநர் பேரரசு
“ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்” ; இயக்குநர் பேரரசு
“இசைஞானியின் காம்பவுண்டுக்குள் என்னை அனுமதித்தவரே பவதாரணி தான்” ; சாமானியன் இயக்குநர் ராகேஷ் நெகிழ்ச்சி
நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது, “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.
இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். அவர் ஏன் இப்படி நடக்கிறார், இருக்கிறார் என்று யாரும் அவரை தவறாக நினைக்காதீர்கள். அந்த விபத்திற்கு பிறகு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. அவர் இப்போது நம்முடன் இருக்கிறாரே என்றால் அது அந்த ஆண்டவனின் அருள் தான். அவருடன் காரில் சென்றவர்கள் எல்லாம் விபத்தில் இறந்துவிட கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.
இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் வீட்டிலும் சில நாட்களுக்கு முன் சோக நிகழ்வு நடந்தது. பரவாயில்லை… ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம். இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான புருஷ லட்சணம் படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.
அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.
நடிகை வினோதினி பேசும்போது, “11 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றப் போகும் இந்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பூந்தமல்லி அருகில் அபார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்திய போது எதிர்பாராத விதமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதும் உடனடியாக அதற்கு மாற்றாக அதே போன்று ஒரு இடத்தை வளசரவாக்கத்தில் ஏற்பாடு செய்து இரவு பகலாக 72 மணி நேரம் தூங்காமல் பணியாற்றி காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ராகேஷ். அவர் ஒரு தயாரிப்பாளருக்கான இயக்குனர்” என்று கூறினார்
நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ராமராஜன் அண்ணனும் ஒன்றாக கலந்து கொண்டோம். எனக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது யார் வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியாத நிலையில் அவர் கையாலேயே அந்த விருதை பெற்றேன். அன்று அவர் கலர் கலராக உடை அணிந்ததை கிண்டல் பண்ணி பேசினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அந்த உடையை தான் ட்ரெண்டிங்காக அணிந்து வருகிறார்கள்” என்று பேசினார்.
நடிகை நக்ஸா சரண் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த முதல் படம் ‘சாமானியன்’. இந்த படத்தில் ராமராஜனின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். எம் எஸ் பாஸ்ர், ராதாரவி படம் முழுக்க எனக்கு வழிகாட்டியாக இருந்து நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.. இளையராஜா சாரின் பெயரை கேட்டாலே ஒரு பாசிட்டிவான அதிர்வு ஏற்படும். அவருடைய இசையில் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். முதல் படத்தில் மிகவும் அழுத்தமான, ஆழமாக கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநர் ராகேஷ் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று பேசினார்.
இயக்குநர் சரவண சுப்பையா பேசும்போது, “தயாரிப்பாளர் மதியழகன் இன்னும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தரும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக தொடர்ந்து பயணிப்பார். அதேபோல இயக்குநர் ராகேஷ் திறமையான ஒரு டெக்னீசியன். அவர் இந்த படத்தை எடுத்துக் கொண்ட விதம் ரொம்பவே புதிதாக இருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எனக்கு இது நான்காவது படம். ஒரு மேஜிக்கல் அசைவு இல்லாமல் எந்த படமும் என் நடக்காது. 25 வருடங்களுக்குப் பிறகு இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணைந்தது, 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் திரையில் தோன்றுவதற்கு காரணம், 7 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ராகேஷ் மீண்டும் இந்த படத்தை இயக்க காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் தான். ராகேஷ் என்னிடம் பேசும்போது, சிட்டிசனாகிய நீங்கள் இந்த சாமானியனை வாழ்த்த வேண்டும் என்றார். சாமானியனே ஒரு சிட்டிசன் தானே.. இந்த படத்தில் ராமராஜனுக்கு வழக்கமான கிராமத்து பெயராக இல்லாமல் சங்கர் நாராயணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் தன் தாத்தா பெயரை மனதில் வைத்து எழுதியதாக கூறினாலும் இயக்குனர் ராகேஷ் அதை படத்தில் வைத்திருப்பதற்காந காரணத்தை நீங்கள் படத்தில் பார்க்கும்போது செமையாக இருக்கும்” என்று கூறினார்.
நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது, “இந்த படத்தின் டீசர் வெளியீடு தி.நகரில் நடந்தபோது ராமராஜன் சாரை பார்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பருடன் அங்கே சென்றேன். அப்போது என்னை கவனித்த தயாரிப்பாளர் மதியழகன், சில நாட்கள் கழித்து என்னை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறி அழைத்து நடிக்க வைத்தார். சிறுவயது காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு இன்று அவர் எனது முகத்தைப் பார்த்து ஒரு பாடல் போடுகிறார் என நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.
நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது, “ராமராஜனின் ‘சோலை புஷ்பங்கள்’ படத்தில் நான் டப்பிங் பேசிய காலத்தில் இருந்து இன்று இந்த படத்தில் இணைந்து நடித்ததுவரை எல்லாரிடமும் ஒரே போல பழகக் கூடியவர் ராமராஜன். எனக்கு ஒரு சின்ன ஆசை. அது நிறைவேறும். நிறைவேறனும்.. இப்போது இங்கே இருக்கக்கூடிய மக்கள் திரள் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும். கரகாட்டக்காரன் படம் போல அதையும் மீறி இந்த படம் ஓட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ராமராஜன் மறுபடியும் இடைவெளி இல்லாமல் நடிக்க வேண்டும். மக்கள் நாயகன் என்கிற பட்டம் அவருக்கு மட்டும் தான்.. அதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனைல் ஏற்பட்டது. அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்
இயக்குனர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில் ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.
இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “23 வருடங்கள் கழித்து இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணையும் படம் ‘சாமானியன்’. அதை இயக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. புகை பிடிப்பது தவறானது என சென்ஸார் கார்டு போட வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு விதிமுறை வந்தது. ஆனால் தான் நடிக்க வந்த காலத்திலிருந்து சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என தன் மனதிற்குள்ளேயே ஒரு ரெட் கார்டு போட்டு வைத்திருப்பவர் ராமராஜன். பல சவால்கள் நிறைந்த சூழலில் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம். இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை. படம் துவங்க ஆரம்பித்த சமயத்தில் இருந்ததை விட, கேமரா ஓட ஓட 100 மடங்கு அதிக எனர்ஜியுடன் இருக்கிறார் ராமராஜன். அவர் அவர் ஒரு சாமானிய மக்களின் பிரதிநிதி. அவர் போட்டிருக்கும் சட்டை வேண்டுமானால் கலர் கலராக இருக்கலாம். அவர் மனது என்றும் வெள்ளைதான்.. விசுவாசம், நன்றி என்றால் அது ராமராஜன் தான்..
படப்பிடிப்பில் நடிகை நக்ஸா மீது அதிக டேக் வாங்குவதாக சிலநேரம் கோவப்பட்டு உள்ளேன். ஆனால் அனைத்தையும் பக்காவாக கற்றுக்கொண்டு தன்னை மோல்டு செய்து கொண்டு தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் மதியழகன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அது சரியாக இருக்காது, அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை போடுங்கள் என ராமராஜன் கூறிவிட்டார்.. காரணம் அவருக்கு கதாபாத்திரம் கொடுத்தால் படம் முழுவதும் வரும் நீளமான கதாபாத்திரம் கொடுங்கள் என்றார். மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது திண்டுக்கல்ல லியோனி சார் தனது மகன் லியோ சிவா நடிப்பதை பார்ப்பதற்காக படப்பிடிப்பிற்கு வந்தார். மகனது நடிப்பை பற்றி கேட்டபோது, நடிப்பு பற்றி எதுவும் சொல்லாததால் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் போய் எதுவும் சொல்லி கெடுத்து விடாதீர்கள் சார் என்று கேட்டுக் கொண்டேன். எம்.எஸ் பாஸ்கர் ஒரு காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 அடி உயர தண்ணீர் தொட்டிக்குள் மூச்சை பிடித்து முங்கியபடி நடித்தார். கே.எஸ் ரவிக்குமார் ஒரு நடிகராக, ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு புரொடக்சன் மேனேஜராகவே மாறி படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார். ராதாரவி சார் செட்டுக்கு வந்து விட்டாலே ஒருவித அமைதி வந்துவிடும். அதனால் அதிகம் நடிகர்களை வைத்து படமாக்கும் சமயங்களில் எப்படியாவது அவரின் கால்சீட்டை வாங்கி அவரை அழைத்து வந்து விடுவோம்.
இந்த நிகழ்ச்சி இங்கே இப்போது சாதாரணமாக நடந்துவிடவில்லை.. இந்தப்படத்தின் கதை வேறு ஒருவருடையது என்று புகார் கொடுத்திருக்கிறார்களே என்று எனக்கும் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மிகப்பெரிய அழுத்தம்.. ட்ரெய்லருக்கும் டீசருக்கும் சென்சார் சான்றுகளுக்காக விண்ணப்பித்தால் அங்கே ஏற்கனவே ஒருவர் சாமானியன் என டைட்டில் பதிவு செய்திருப்பதாக கோர்ட்டில் ஆர்டர் வாங்கி அங்கே கொடுத்து வைத்திருக்கிறார். அதையெல்லாம் உடைத்து எங்களிடம் தான் சாமானியன் டைட்டிலுக்கான ஆதாரம் இருக்கிறது என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்து 48 மணி நேரத்தில் ட்ரெய்லர் மற்றும் டீசருக்கான சென்சார் சான்றிதழை வாங்கியுள்ளோம். இந்த படத்தின் கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான்.. அதை உணர்வுகளுடன் சேர்த்து மனதை தொடும் விதமாக உருவாக்கி இருக்கிறோம்.. இதற்காக நந்தா பெரியசாமி உள்ளிட்ட குழுவினருடன் ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறோம். இப்படி பணத்தைக் கொட்டி படத்தை எடுத்து முடித்து கடைசி நேரத்தில் கதை என்னுடையது என்று யாரோ சொன்னால் மனது வலிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாக தான் கழிந்தது.
இந்தப் படத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது இசைஞானியின் இசை தான். மக்கள் நாயகன் ராமராஜனை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது அவரது பாடல்கள் தான்.. நான் ‘அம்மு’ என்கிற குறும்படத்தை எடுத்து விட்டு அதற்கு இசையமைப்பதற்காக இசைஞானியை தேடி தினசரி அவரது வீட்டு வாசலில் நின்றேன். அவர் பிஸியாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை தினசரி கவனித்த பவதாரணி ஒரு நாள் என்னை அழைத்து விவரம் கேட்டார். அப்பா பிஸியாக இருக்கிறார் என கூறியபோது, அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களாவது இசையமைத்துக் கொடுங்கள் என கேட்டேன். இரண்டு நாள் கழித்து அவரை சந்தித்தபோது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டென்.. என்னைவிட என்னுடைய அம்மாவிற்கு இந்த படம் பிடித்திருக்கிறது.. நீ இசையமைத்து கொடு என்று என்னிடம் சொல்லிவிட்டார் என பவதாரணி கூறினார். அப்படி பவதாரணி இசையமைத்து கொடுத்த அந்த ‘அம்மு’ படம் தான் எனக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட பிரிவில் கோல்ட் மெடல் பெற்று தந்தது.
பிறகு இளையராஜா சாரை சந்திக்க முடியாமல் போனாலும் இந்த சாமானியன் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது கூட பவதாரணி என்னிடம் ஒருவழியாக அப்பாவை பிடித்து விட்டீர்களே என்று கிண்டலாக கேட்டார். அந்த வகையில் என்னை இந்த காம்பவுண்டுக்குள் அனுமதித்தவரே பவதாரணி தான். ஆனால் இன்று அவர் இல்லை. இந்த படத்தில் மாண்டேஜ் பாடலைத் தவிர வேறு பாடல்களே இல்லையே, நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுக்களை தானே ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என கொஞ்சம் என் மீது கோபப்பட்டார் ராஜா சார். முழுப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கான இடம் இருக்கிறதே என்று என்னிடம் கூறினார். அவரே அருமையான ஒரு பாடலை எழுதி இசையமைத்து இதில் எப்படியும் ராமராஜன் உதட்டசைத்து பாடும் விதமாக படமாக்கு என்று கூறினார். அந்த பாடல் தான் கிளைமாக்ஸுக்கு முன்னதாக இந்த படத்திற்கு மிக பக்கபலமாக அமைந்துள்ளது. இந்த சாமானியனை எல்லோரும் தோளில் தூக்கி வைத்து கொண்டு செல்லுங்கள்” என்று பேசினார்.
திண்டுக்கல் ஐ லியோனி பேசும்போது, “மக்கள் நாயகன் ராமராஜனின் மிகப்பெரிய ரசிகன் நான். கலர் கலராக உடை அணிந்து கைகளை தூக்கி பாடல் காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் எம்ஜிஆருக்கு பிறகு யார் என்றால் அது ராமராஜன் தான். என்னுடைய மகன் லியோ சிவகுமார் மாமனிதன், அழகிய கண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக இந்த சாமானியன் படம் கிடைத்துள்ளது. அவருக்கு உங்கள் ஆதரவை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மக்கள் நாயகன் ராமராஜன் பேசும்போது, “2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ரசிகர்களின் தமிழக மக்களின் பிரார்த்தனை தான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கும் நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் ட்ரெய்லரையும் பாடல்களையும் நான் ஒரு டெக்னீசியனாகத்தான் பார்த்தேன். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம்.. ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த படத்தின் திரைக்கதை என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இந்த அளவிற்கு அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ். இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன். அவர் வராததால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.
கே எஸ் ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும்.. நான் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக வேலை பார்த்தார். நானும் 40 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்தென். அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார். இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர் மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை.. உயிரோடு இருக்கிறது என்று நினைக்க வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை. எனக்கு ஜோடி எம் எஸ் பாஸ்கர், ராதாரவி அண்ணன் தான்.. சரி ஒரு படம் தியாகம் பண்ணிவிட்டு போவோம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும் பாட்டு வேண்டும்.. இப்போது கூட ஆறு பாட்டுக்குளுடன் ஒரு படம் கொண்டு வா உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.
தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல.. தெய்வத்தாய் மகுடி வாசித்தால் பாம்பு ஆடும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணன் இளையராஜா ஆர்மோனியம் வாசித்தால் பாம்பேயே ஆடும். எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன். ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.
44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்றார்.