சாமானியன்
இயக்கம் – ஆர் ராகேஷ்
நடிகர்கள் – ராமராஜன் , ராதா ரவி, எம் எஸ் பாஸ்கர்,
இசை – இளையராஜா
தயாரிப்பு – மதியழகன்
ஒருவர் மதுரையில் இருந்து சென்னைக்கு சென்று அங்குள்ள தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு முனையில் அங்கிருப்பவர்களை சிறை வைக்கிறார். அந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தாலும், அவற்றை எடுக்காமல், வங்கியின் உதவி மேலாளரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் கேட்பவர், வங்கி மேலாளரிடம் ரூ.3.50 லட்சத்திற்கான மூன்றாண்டுகள் வட்டியை மொத்தமாக கேட்கிறார். அவரின் நிபந்தனைகள் மிக எளிமையானவையாக இருந்தாலும், இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காவல்துறை குழப்பமடைவதோடு, தமிழகமே இந்த விசயத்தை உற்று நோக்க ஆரம்பிக்கிறது. இந்த நிலையில், அவர் ஒரு இடத்தை குறிப்பிடுகிறார் , காவல்துறை அங்கு சென்று பார்க்கும் போது, மூன்று சமாதிகள் மட்டுமே இருக்க, இறந்து போனவர்களுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அவருடைய இத்தகைய செயலின் பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை,
நடிகர் ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு அசைக்க முடியாத நடிகராக வளம் வந்தவர் ஆனால் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்து சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் , ராமராஜனுக்கு என்று தனி டிரெண்ட் இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையில், சங்கரநாராயணன் என்ற கதையின் நாயகனான கச்சிதமாக பொருந்தியிருக்கறார், தனக்கு கொடுப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்
இந்தப் படத்தில் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி இருவரும் ராமராஜனுக்கு பக்கபலமாக இருப்பதோடு, தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கும் பலமாக பயணித்திருக்கிறார்கள். மற்றொரு கதையில் இளம் ஜோடிகளாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் மற்றும் லக்ஷா சரண் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். சொந்த வீடு என்ற கனவு நினைவான பிறகும், கடன் தொல்லையால் நிலைகுலைந்து போகும் இவர்களது வாழ்க்கை சிலரின் வாழ்வை எடுத்துக்காட்டுகிறது,
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், பல ஆண்டுகளுக்கு பின்னர் இவர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் இருக்கிறது, ஆனால் இளையராஜா – ராமராஜன் கூட்டணியின் பழைய பாடல்கள் சில இடங்களில் இடம்பெற்றிருப்பது கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வன் பெரிதாக மெனக்கெட்டு தனது வேலையை செய்யாமல் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்துள்ளார் , குறிப்பாக நாயகன் ராமராஜனை காட்டிய விதத்தில் அவர் எந்த மெனக்கெடலும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
வங்கி கடன் மூலம் அவதிப்படும் மக்களின் நிலையை மட்டும் இன்றி, கடன் என்ற பெயரில் பொதுமக்களிடம் பகல் கொள்ளையடிக்கும் வங்கிகளின் திருட்டுத்தனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் கே.கார்த்திக் குமார் எழுதியிருக்கும் கதையை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ராகேஷ், பழிவாங்கும் கதையாக சொன்னாலும், அதை வித்தியாசமான பாணியில் சொல்லி ரசிகர்களை படத்துடன் தொடர்புபடுத்தி விடுகிறார். வீடு என்பது அனைவரின் கனவுதான் ஆனால் அதை கடன் வாங்கி கட்டாமல் சேமிப்பு பணத்தில் கட்டுவது தான் புத்திசாலித்தனம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்,
மொத்தத்தில் இந்த ‘ சாமானியன் ‘ நம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கை.
Rating 3.8/5