சிங்கப்பூர் சலூன்
இயக்கம – கோகுல்
நடிகர்கள் – ஆர் ஜே பாலாஜி
இசை – விவேக் – மெர்வின்
தயாரிப்பு – வேல்ஸ் இன்டர்னேஷனல்
சிறு வயதில் இருந்தே முடி வெட்டும் தொழில் மீது ஒருவன் ஆர்வமாக உள்ளான். ஆனால் முடி வெட்டுவது குலத்தொழில் என்பதால் அவனது வீட்டில் அதனை தடுக்கின்றனர். பெற்றோருக்காக பொறியியல் படிக்கின்றான். ஆனாலும் முடி வெட்டும் தொழிலின் மீதுள்ள ஆர்வம் குறையவில்லை .எந்த தொழிலாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்தால் பெரிய அளவில் முன்னேற்றம் அடையாளம் என்று நினைக்கின்றான், ஆனால், அவருக்கு இருக்கும் அந்த ஆர்வத்தினால் ஒரு சமயத்தில் அவரது காதல் முறிந்துபோகிறது. காதல் போனாலும் தனது ஆர்வத்தின் மீது தீவிரம் காட்டி, முடி வெட்டும் தொழிலில் முக்கியப்புள்ளியாக வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறான் , இதனால் பல சிக்கல்கள் வருகிறது. அது என்ன?, அதில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா? என்பது தான் இப்படத்தின் படத்தின் கதை.
ஒரு நடிகர் காமெடி கதாபாத்திரத்தில் பல படங்கள் நடித்து விட்டு நாயகனாக நடிக்கும்போது மக்கள் அவரை கதானாயகானக ஏற்றுக்கொள்ள மாட்டர்கள் ஆனால் படத்தின் கதை மற்றும் கதபாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டால் ரசிகர்களுக்கு நாயகன் முகம் தேவையில்லை , ஆர்ஜே பாலாஜி தனது ஒவ்வொரு படத்திலும் அதைத்தான் செய்கிறார், தனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து நல்ல கதை மற்றும் திரைக்கதை கொண்ட படத்தில் நடித்து வருகிறார் ஒரு சில படங்கள் கை விட்டாலும் சில படங்கள் அவரை தூக்கி நிறுத்துகிறது . அந்த வகையில், முடி வெட்டும் தொழிலில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் இளைஞராக அவர் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுவதோடு, எந்த இடத்திலும் தனக்கு காமெடி வரும் என்பதை காட்டிக்கொள்ளாமல், தான் ஏற்ற கதிரவன் என்ற கதாபாத்திரமாகவே பயணித்து தன்னால் எப்படிப்பட்ட வேடத்திலும் நடிக்க முடியும், என்று தன்னை ஒரு நடிகராக முன்னிறுத்தி இருக்கிறார்.
சத்யராஜ் படத்தை பெரிதும் தாங்கிப் பிடித்துள்ளார் , அவரது நகைசுவை காட்சிகள் படத்தை வேகமாக நகர்த்தி சென்றுள்ளது, படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு சத்யராஜின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் சத்யராஜ் கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். என்னதான் வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் அதில் சிலவற்றில் திடீரென்று தனது பழைய பாணியிலான நடிப்பை லேசாக வெளிப்படுத்தி விடுவார். ஆனால், இந்த வேடமும், அவரது நடிப்பும் பார்ப்பதற்கு புதிதாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதி முழுவதையும் தன்வசப்படுத்திக் கொண்டார், நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால், ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.
அரவிந்த்சாமி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பாராத விருந்தாக அமைந்துள்ளது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவாவின் சிறப்பு தோற்றமும் படத்தின் திரைக்கதைக்கு பெரிதும் உதவியுள்ளது .எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றாக பயனிக்கச்செய்துள்ளது . விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை அளவு படத்தின் திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது .சிகை அலங்கார தொழிலை மையக்கருவாக கொண்டு ஒரு கமர்ஷியல் படம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கிறது. அதே சமயம், புத்திமதி சொல்கிறேன் என்று இல்லாமல், பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு, இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்திலும் படத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் கோகுல், தான் சொல்ல வந்ததை மிக எளிதாக ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.
முதல் பாதியில் சத்யராஜின் கதபாத்திரத்தை வைத்துக்கொண்டு கலகலப்பாக காட்சிகளோடும் இரண்டாம் பாதியை கொஞ்சம் சீரியஸாக பயணிக்க முயர்சி செய்துள்ளது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. எனினும் கலகலப்பான திரைக்கதை மற்றும் சிறப்பு தோற்றங்கள் இருப்பது படத்தை அழகாக நகர்த்தி செல்கிறது.
மொத்தத்தில், சிகை அலங்கார தொழிலை ஒரு கமர்ஷியல் கலந்து கௌரவம் செய்துள்ளது இந்த ”சிங்கப்பூர் சலூன்”
Rating 3/5