தங்கலான் படம் எப்படி இருக்கு?

தங்கலான்

இயக்கம் – பா. ரஞ்சித்
நடிகர்கள் – விக்ரம், பார்வதி , மாளவிகா , பசுபதி,
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – ஸ்டுடியோ கிரீன், ஞானவேல் ராஜா

1850-ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தன் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் ஒருவர். அக்கிராமத்தின் விவசாய நிலங்களை முறைகேடாகப் பிடுங்கி, அவரின் குடும்பம் உட்பட அக்கிராமத்தினரை அடிமையாக்கி, உழைப்பை உறிஞ்சுகிறார் அவ்வூரின் மிராசுதார். இந்நிலையில், மைசூர் சமஸ்தானத்திலுள்ள கோலார் பகுதியில் தங்கம் வெட்டியெடுக்கும் வேலைக்கு, ஆசை வார்த்தைகளைக் காட்டி அக்கிராமத்தினரை அழைக்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி கிளமண்ட் .
மிராசிடமும், ஆதிக்கச் சாதியினரிடமும் அடிமைப்பட்டுக் கிடப்பதைவிட, பிரிட்டிஷ் அதிகாரியின் பேச்சைக் கேட்கலாம் என முடிவு செய்யும் நாயகன் தலைமையிலான கிராமத்தினர், கோலாருக்குப் பயணமாகிறார்கள். அதே சமயம் அங்கே கொடுமைக்கார சூனியக்காரி உலவுகிறாள், அவளால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கிற நம்பிக்கையும் அங்கே நிலவுகிறது. இந்தப் பயணத்தில் அவர்களுக்குத் தங்கம் கிடைத்ததா, இப்பயணம் அம்மக்களின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் இந்தப் படம்.

விக்ரம் வழக்கம் போல தனது அபார நடிப்பை கொடுத்துள்ளார், தந்தையாக, காதல் கணவனாக, அக்கிராமத்தின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்,
, உணர்வுபூர்வமான இடங்களிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் தன் தனித்த உடல்மொழியாலும் பேச்சாலும் அக்காலத்தைச் சேர்ந்த ‘தங்கலானுக்கு’ மிரட்டலாக உயிர் கொடுத்திருக்கிறார் விக்ரம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பையும், மெனக்கெடலையும் உணர முடிகிறது. விக்ரமோடு நடிப்பில் சரிசமமாக மோதுகிறார் நடிகை பார்வதி. கோபம், ஆக்ரோஷம், அழுகை என எல்லா உணர்வுகளையும் நுணுக்கமாக அணுகி, அக்கதாபாத்திரத்தைத் தனித்துத் தெரிய வைக்கிறார்.
வெளிநாட்டவர், ஆனந்த் சாமியும் மிரட்டல், வஞ்சகம் என இரண்டு லேயரிலும் அழுத்தமாக நிற்கிறார்கள். படத்தில் பசுபதி கதாபாத்திரம் ஒரு பெரிய பிளஸ், அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது, சிந்திக்க வைக்கும் வார்த்தைகளும் அதில் அடங்கியிருந்தது, மாளவிகா கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் அதனை சிறப்பாக செய்துள்ளார்,

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் எல்லா பாடல்களும் கதைக்கு ஆழம் சேர்த்திருக்கின்றன. பின்னணி இசையிலும் இசை அசுரன் ‘தங்கமாகவே’ ஜொலிக்கிறார். க்ளோஸ் அப் ஷாட்களிலும், லாங் ஷாட்களிலும் சின்ன சின்ன புதுமைகளைப் புகுத்தி, அக்காலத்தைக் கண் முன் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார். முக்கியமாகச் சண்டைக்காட்சிகளில் கிஷோரின் கை ஓங்கியிருக்கிறது. செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பு முதற்பாதிக்கான திரைமொழிக்குப் பொருந்திப்போவதோடு, வலுவும் சேர்த்திருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் நிதானம் குறைகிறது, உணர்வுபூர்வமான காட்சிகள் கடகடவென ஓடிவிடுகின்றன.

1800களில் வட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ‘தங்கலானின்’ ஆதிக்குடி, கோலார் தங்கச் சுரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் அதன் அரசியலையும் பேசுகிறது படம். அதற்காக அம்மக்களின் நாட்டார் மற்றும் வாய்வழிக் கதைகளோடு, ஃபேன்டஸி மற்றும் மாய யதார்த்தவாத காட்சிகளையும் இணைத்து சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். கோலார் போன்ற இந்நிலத்தின் வளங்களானது, அம்மண்ணின் உரிமையாளர்களும் அந்நிலத்தில் உழைப்பைக் கொட்டியவர்களுமான பூர்வகுடி மக்களுக்கே சொந்தமானது என்பதை அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பதிய வைக்க முயல்கிறது திரைக்கதை.

அரசியல், மாய யதார்த்தவாதம், புனைவு, வரலாறு, தங்கலான் கதாபாத்திரத்தின் மனவோட்டம் போன்ற பல அடுக்குகளை இணைக்கும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கிறது, கதைக்குத் தேவையான சில வரலாற்றுத் தகவல்களை வசனங்களிலேயே கடத்தியது, தங்கலான் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை அளவிற்கு மீறி இழுத்தது, இந்த ஒரு முயற்சிக்கு கண்டிப்பாக ரஞ்சித்தை பாராட்டியே ஆகவேண்டும்.

மொத்தத்தில் இந்த “தங்கலான்” ஒரு தேடுதல் முயற்சி

Rating 3.5/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *