இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

நவீன உலகில் பண்டைய போர்வீரன் – பூஜா என்டர்டெயின்மென்ட்டின் பிரம்மாண்ட பன்மொழி பான்-இந்தியா படைப்பான ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்

புராண பாத்திர‌மும் நவீன உலகும் ஒரே நேர் கோட்டில் சந்தித்தால் என்ன ஆகும் என்பதை விவரிக்கும் பரபரப்பான பயணத்திற்கு ரசிகர்களை அழைத்துச் செல்ல ஷாஹித் கபூர் மற்றும் இயக்குநர் சச்சின் ரவி உடன் பூஜா என்டர்டெயின்மென்ட் கைகோர்த்துள்ளது. இவர்கள் இணையும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ பிரம்மாண்ட திரைப்படத்தில் அஸ்வத்தாமனாக தோன்றுகிறார் ஷாஹித் கபூர்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பான இது, இன்றும் நம்மிடையே நடமாடுவதாக நம்பப்படும் மகாபாரதத்தில் வரும் அழியாப் போர்வீரர் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மனிதகுலத்தின் அசாத்திய வளர்ச்சி நிறைந்த‌ தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த‌ கதையில் திரையில் காணலாம்.

படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையுமென்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஜக்கி பக்னானி, “எங்கள் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கி அவர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. ‘படே மியான் சோட்டே மியான்’ படத்திற்குப் பிறகு, யாரும் எதிர்பாராத திரைப்ப‌படம் ஒன்றை தயாரிக்க விரும்பினேன், அதன் விளைவாக உருவாகி வருவது தான் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது மகிழ்விக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் சச்சின் ரவி கூறுகையில், “மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமான், இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படும் ஒரு மாவீரர். அமரத்துவம் கொண்ட அவரது வரலாற்றை இப்படம் ஆராய்கிறது, இன்றைய உலகில் அவர் எதிர்கொள்ளும் விஷயங்களை விறுவிறுப்பாக விவரிக்கிறது. ஒரு ஆக்‌ஷன் படத்தின் பிரமாண்டத்திற்குள் அவருடைய கதையை முன்வைக்க முயன்றுள்ளோம்,” என்றார்.

பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஷாஹித் கபூர் நடிப்பில் சச்சின் ரவி இயக்கும் ‘அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *