‘போகுமிடம் வெகு தூரமில்லை
இயக்கம் – மைக்கேல் கே ராஜா
நடிகர்கள் – விமல், கருணாஸ், மெரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன்
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
தயாரிப்பு – சிவா கில்லாரி
மனைவியின் அவசர பிரசவ செலவுக்காக, திருநெல்வேலிக்கு அமரர் ஊர்தி எடுத்து செல்கிறான் ஹீரோ. அங்கே பெரிய வீடு, சின்ன வீடு பிள்ளைகள் என, இரு வீட்டிலும் பிரச்சனையோடு பிணத்துக்காக ஊரே காத்திருக்கிறது. வழியில் தென்படும் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்து அவரோடும் பிணத்தோடும் பயணமாகிறார் நாயகன், இடையில் வரும் பிரச்சனைகள், அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பான பயணம் மூலம் சொல்வது தான் ‘போகுமிடம் வெகு தூரமில்லை’.
தமிழில் பயணங்களை வைத்து வந்த படங்கள் மிகக்குறைவு, அன்பே சிவம், அயோத்தி என வெகு சில படங்கள் முழுக்க பயணத்தின் பின்னணியில் வெளிவந்திருக்கிறது. இரண்டு படங்களின் கலவையில் வெளிவந்திருக்கிறது போகுமிடம் வெகு தூரமில்லை. முதல் 20 நிமிடங்கள் கொஞ்சம் தடுமாற்றம், ஆனால் அதன்பிறகு வரும் சம்பவங்கள் மூலம் வேகமெடுக்கும் படம் முடியும் போது, ஒரு நிறைவான படம் பார்த்த உணர்வைத் தந்துவிடுகிறது.
விமல் உண்மையாகவே நடித்திருக்கிறார். சாதாரணமாக நடித்தாலும் சில இடங்களில் தனது பாவப்பட்ட நடிப்பால் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார். விலங்குக்கு பிறகு அவருக்கு பெயர் சொல்லும் படம். கடைசி காட்சியில் அவர் முகத்தில் தெரியும் உணர்வுகள் நல்ல நடிகனை மீட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் ஹீரோ கருணாஸ் தான். வழிப்போக்கன் கேரக்டர், நாடக கலைஞன் உடல்மொழியிலேயே வியக்க வைக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் மனிதர் அசத்திவிட்டார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பாதிப்பில்லாமல் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வினின் கேமரா, பயணத்தின் மூலம் கதை சொல்லியிருப்பதோடு, சேசிங் காட்சிகளில் பார்வையாளர்களிடம் பதற்றத்தையும் கடத்தியிருக்கிறது.
மொத்த படமும் பயணம் தான் என்றாலும், அவ்வபோது சகோதர்களுக்கு இடையே நடக்கும் உரிமை போராட்டம் மற்றும் வழியில் வரும் காதல் பிரச்சனை ஆகியவற்றால் படத்தை வேகமாக நகர்த்தி சென்றூள்ளார் இயக்குநர், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா அறிமுகம் என்பதையே மறக்கடித்துவிட்டார்.
மொத்தத்தில், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ஒரு நிறைவான பயணம்.
Rating 3.3/5