மாயன் படம் எப்படி இருக்கு?

Rating 3/5

மாயன்

இயக்கம் – ஜெ.ராஜேஷ் கண்ணா
நடிகர்கள் – வினோத் மோகன், பிந்து மாதவி , ஜான் விஜய்
இசை – ஜோன்ஸ் ரூபர்ட்
தயாரிப்பு – ராஜேஸ் கண்ணா

ஐடி துறையில் பணியாற்றும் நாயகன் அமைதியான சுபாவம் கொண்டவர். தன் எதிரில் என்ன நடந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதோடு, எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்வதோடு, தனது அம்மாவுக்காக ஒரு சொந்த வீடு வாங்குவதை நோக்கமாக கொண்டு பயணிக்கிறார். இந்த நிலையில், நாயகனுக்கு வரும் மின்னஞ்சல் ஒன்றில், “13 நாட்களில் உலகம் அழியப்போகிறது, மாயர்களின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது” என்று செய்தி கிடைக்கிறது. இதை நம்பாத வினோத் மோகனை சுற்றி சில மர்மமான விசயங்கள் நடக்கத் தொடங்குகிறது. அதனால், தனக்கு வந்த தகவலை நம்புபவர், உலகம் அழியத்தானே போகிறது என்பதால், இதுவரை தன் வாழ்வில் செய்யாத அனைத்தையுமே தைரியமாக செய்கிறார். அவர் எதிர்பார்த்தது போல் உலகம் அழிந்ததா?, அவருக்கு தகவல் அனுப்பிய மாயர்கள் யார்? என்பதை சொல்வதே ‘மாயன்’.

நாயகனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் வினோத் மோகன், ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், அவரை ஆக்‌ஷன் ஹீரோவாக காட்டாமல் ஆன்மீகத்தன்மையோடு காட்டியிருக்கிறார்கள். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திய புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்,

நாயகியாக நடித்திருக்கும் பிந்து மாதவிக்கு காட்சிகள் குறைவுதான் எனினும் வரும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லன்களாக நடித்திருக்கும் சாய் தீனா, ராஜ சிம்மன் ஆகியோர் வழக்கமான தங்களது வேலையை செய்திருக்கிறார்கள். வித்தியாசமான கதாபாத்திரமாக எண்ட்ரி கொடுக்கும் ரஞ்சனா நாச்சியார் நான்கு வசனங்களோடு மறைந்து விடுகிறார். கஞ்சா கருப்பு, மரியா, பியா பாஜ்பாயி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் கதைக்கு ஏற்ப பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத் பெரிய பணியை எடுத்துள்ளார் , ஏனெனில் கிராபிக்ஸ் நிபுணருக்கு தான் அதிகம் வேலை அதற்கேற்றவாரு காட்சியை அமைத்தது பெரிய முயற்சி அதை தரமாக செய்திருக்கிறார்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணா, எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு அமைத்திருக்கும் திரைக்கதையில் தனது திறனை காட்டியுள்ளார் . மாயவர்கள், ஆதிசிவன், அவ்வபோது நாயகனை துரத்தும் பாம்பு என்று பல விசயங்களை திரையில் காட்டி நம்மை பதட்ட நிலையிலே வைத்திருக்கிறார். படமாக்கப்பட்ட காட்சிகளை விட, கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் அதிகமாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் பதினைந்து நிமிட படத்தில் சுமார் 55 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன, பல காட்சிகள் பிரமாண்டமாகவும் தரமாகவும் இருக்கிறது.

மொத்தத்தில், ‘மாயன்’ பிரம்மாண்ட திரை அனுபவம்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *