இயக்கம் – பிரசாந்த் வர்மா
நடிகர்கள் – தேஜா, அம்ரிதா அய்யர்
இசை – அனுதீப் தேவ்
கற்பனை கிராமமான அஞ்சனாத்ரி எனும் ஊரில் ஹனுமந்தா எனும் கதாபாத்திரத்தில் தேஜா நடித்துள்ளார். தனது அக்கா அஞ்சம்ம்மா (வரலக்ஷ்மி சரத்குமார்) உடன் வாழ்ந்து வருகிறார். அம்ரிதா அய்யருடன் காதல் காட்சிகள் , காமெடி காட்சிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க, சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படும் வில்லன் தனது லட்சியத்தில் சாதித்தாரா? அதனால் ஏற்படும் ஆபத்து என்ன அவரை ஹீரோ கடவுள் சக்தி கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி உள்ள சூப்பர் ஹீரோ பிளஸ் தெய்வ சக்தி கலந்த படம் தான் இந்த ஹனுமான். ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம் காட்டியதற்கு படத்தில் தெளிவான அர்த்தம் உள்ளது. இந்த சங்கராந்திக்கு தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துடன் தைரியமாக ஹனுமான் படம் மோதியதே பெரிய விஷயம் தான்.
ஆதிபுருஷ் படத்தை விட இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் சிஜி காட்சிகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளன. அதிலும், கிளைமேக்ஸில் இடம்பெறும் அந்த 20 நிமிட காட்சிகள் எல்லாமே புல்லரிக்கச் செய்து விடும்.
சூப்பர் ஹீரோ கதையில் ஆன்மிகத்தை அழகாக கலந்து பிசினஸ் ரீதியாகவும் பக்தி மார்க்கமாகவும் பக்கா பிளான் போட்டு திரைக்கதையை இயக்குநர் உருவாக்கிய விதத்திலேயே ஸ்கோர் செய்து விட்டார். வெறும் 50 கோடி பட்ஜெட்டில் 500 கோடி பட்ஜெட் படத்துக்கு டஃப் கொடுக்கும் விதமாக திரைக்கதை, விஷுவல் எஃபெக்ட்ஸ் என அனைத்தும் சிறப்பாகவே அமைந்துள்ளது.
சகோதரியாக நடித்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார், வில்லனாக வரும் வினய் உள்ளிட்டோரின் நடிப்பும் பக்க பலமாக உள்ளது. படத்தில் வரும் குரங்கு ஒன்றுக்கு ரவி தேஜா குரல் கொடுத்திருப்பது பெரிய பலம். அண்டர் வாட்டர் சீக்வென்ஸ் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பெரிய பலம். அந்த கிராமத்தை உருவாக்கிய விதம் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலை மலையுடன் பொருந்தியிருப்பது என தூள் கிளப்புகிறது.
வழக்கமான சூப்பர் ஹீரோ டெம்பிளேட் மற்றும் பல செயற்கைத் தனங்கள் நிறைந்த திரைக்கதை மற்றும் தேவையில்லாமல் வரும் பாடல்கள் என சொதப்பல் விஷயங்கள் இருந்தாலும், ஹனுமான் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
தெலுங்கில் குண்டூர் காரம் சரிந்தால் கண்டிப்பாக அனுமன் பொங்கல் தான்.
Rating 3.5/5