அனைவரையும் கலங்கடித்த காதல் திரைக்காவியம் “அழகி” மறுவெளியீடு!

அனைவரையும் கலங்கடித்த காதல் திரைக்காவியம் “அழகி” மறுவெளியீடு!

காதலைக் கொண்டாடிய அழகி திரைப்படம் மீண்டும் மார்ச் 29 முதல் திரையரங்குகளில் !!

தமிழ் திரையுலக வரலாற்றில், உதயகீதா சினி கிரியேஷன்ஸ் உதயகுமார் வழங்கும், உதயகீதாவின் “அழகி” மிக முக்கியமான திரைப்படமாக அனைவராலும் கொண்டாடப்பட்டு மாபெரும் தாக்கத்தையும் திரையுலகில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. இப்படம் மீண்டும் திரையரங்குகளை வரும் 29ம் தேதி ‘புத்தம் புதுப்பொலிவுடன்’ அலங்கரிக்க வருகிறது.

முதல் காதலின் நினைவுகளைப் பேசும், அற்புதமான இத்திரைப்படம், இக்கால தலைமுறையினரை மகிழ்விக்க மீண்டும் ரீ-ரிலீஸாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகக் கோலோச்சிய தங்கர் பச்சான் முதல் முறையாக எழுதி இயக்கிய திரைப்படம் அழகி. 2002 ஆம் ஆண்டு பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளிவந்தது. தங்கர் பச்சான் தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், தானெழுதிய “கல்வெட்டு” எனும் சிறுகதையை மையப்படுத்தி, இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார்.

இளையராஜாவின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.

முதல் காதல் என்பது எல்லோருக்கும் ஸ்பெஷலானது. முதல் காதல் சாகும் வரையிலும் மனதோடு ஒட்டியிருக்கும், பள்ளிக்காலத்தின் முதல் காதல், வாழ்வில் எப்போதும் உடன் வரும். அப்படியான முதல் காதலியை ஒருவன் சந்திக்க நேரிட்டால் என்னவாகும் என்பது தான் இப்படத்தின் கதை.
எல்லோரின் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்ட இப்படம், அனைவரின் முதல் காதல் நினைவுகளைத் தூண்டிவிட்டது.

வெற்றி பெறாத முதல் காதல் நினைவுகளை, மூன்று பருவங்களை தாண்டிச்செல்லும் ஒரு மனிதனின் உள் உணர்வுகளை அதுவரை தமிழ் சினிமா காட்சிப்படுத்தாத வகையில் மிக இயல்பாக இப்படம் காட்சிப்படுத்தியது.

தமிழ் சினிமாவின் எந்த இலக்கணங்களுக்குள்ளும் சிக்காத இப்படம், தமிழ் சினிமாவில் பொன்னால் பொறிக்கப்பட்ட காதல் காவியமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.

மேலும், அஜித் நடித்த ரெட், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் படங்களோடு வெளியான இப்படம், மற்ற அனைத்து படங்களையும் ஓரம் கட்டி, குக்கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் வரை சென்று ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றதோடு திரையரங்குகளில் 175 நாட்களைக் கடந்து ஓடியது.

காதல் என்பது எப்போதும் பொதுவானது, அதிலும், பள்ளிக்கால நிறைவேறா காதல், இக்கால தலைமுறையினரும் எளிதில் வாழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடியது. அதிகமாக காதல் திரைப்படங்கள் வராத தற்போதைய தமிழ் சினிமாவில், வேற்றுமொழி காதல் படங்கள் கூட இங்கு மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் வெளியாகும் அழகி படம், இக்காலத் தலைமுறையினருக்கு அக்காலகட்ட வரலாற்றைச் சொல்வதுடன், காதலைக் கொண்டாடும் வாய்ப்பாக அமையும்.

உங்கள் காதலி, உங்கள் காதலனை திருமணத்துக்கு பிறகு சந்திக்க நேர்ந்தால் நீங்கள் முதலில் பேச நினைப்பது என்னவாக இருக்கும் என்பதே மிகப் பெரிய சுவாரசியம் தான். இந்த சுவாரசியம் படம் முழுக்க இருக்கும்.
மார்ச் 29 ம் தேதி முதல் 4K, 5:1 தொழில் நுட்பத்துடன் திரையில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *