ஆரகன் படம் எப்படி இருக்கு?

இயக்கம் – அருண் கே ஆர்
நடிகர்கள் – மைக்கல் தங்கதுரை, கவிப்ரியா மனோகரன் ,ஶ்ரீ ரஞ்சினி
இசை – ஸ்விவேக் மற்றும் ஜேஷ்வந்த்
தயாரிப்பு – ஹரிஹரன் பஞ்சலிங்கம்

ஒரு காதல் ஜோடிகள் மலைப்பிரதேசத்திற்கு அருகில் ஒரு எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் ,அந்தப் பெண் ஆங்காங்கே வீட்டு வேலை செய்து வாழ்ந்து வருகிறாள், இந்த நிலையில் நோய் வாய்பெற்ற ஒரு பெண் மலையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாகவும் அந்தப் பெண்ணை பாத்துக் கொள்ள ஆட்கள் தேவை என்ற செய்தி கிடைக்கிறது , நல்ல சம்பளம் என நினைத்து அந்தப் பெண் அந்த வேலைக்கு செல்ல நினைக்கிறாள் ஆனால் காதலன் தடுக்கிரான் எனினும் அந்தப் பெண் அந்த வீட்டிற்கு செல்கிறாள் அதன் பின் அங்கு மாட்டிக் கொள்கிறாள், இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை,

காதலி மீது அதீத அன்பும், அக்கறையும் கொண்டவராக இருக்கும் நாயகன் மைக்கேல் தங்கதுரை, தனது சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் தனது கொடூர முகத்தோடு, உண்மையான முகத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.

மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிரிப்பு மலர்ந்த முகத்தோடும், அழகோடும் இருக்கிறார் நடிகை கவிப்ரியா. ஆதரவற்ற தனக்கு காதலன் மூலம் புதிய உறவும், வாழ்க்கையும் கிடைக்கப் போகிறது என்ற தனது மனமகிழ்ச்சியை தனது குழந்தைத்தனமான முகத்தில் அழகாக வெளிப்படுத்தும் கவிப்ரியா, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள் மூலம் முகத்தில் பதற்றத்தையும், தனக்கு எதிராக நடந்த சதி பற்றி தெரிந்து ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒட்டுமொத்த திரையரங்கமும் அவர் மீது பரிதாபப்படுகிறது.

பார்வையாளர்களை பயமுறுத்தும் விதத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். காதலனால் ஏமாற்றப்பட்டு பல ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர சில முகங்கள் சில காட்சிகளில் எட்டிப்பார்த்து திரைக்கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறது.

அடர்ந்த வனப்பகுதி, அதனுள் இருக்கும் அழகான வீடு என்று அழகு நிறைந்த கதைக்களத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி, அதே பகுதியை மர்மம் நிறைந்தவைகளாக காட்டி பார்வையாளர்களை பதற்றம் அடையவும் செய்திருக்கிறார்.

இரண்டு கதபாத்திரங்களின் தனிமையையும், நாயகியின் எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றத்தையும் தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த், பாடல்களையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி, ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை, பல திருப்பங்களோடு நகர்த்தி செல்லும் இயக்குநர், இறப்பு இல்லாத வாழ்க்கைக்காக அப்பாவி பெண்களை தனது சதிவலையில் சிக்க வைக்கும் ஒருவரது கொடூர முகம் மற்றும் அமானுஷ்ய சக்திகளை மிக எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தாலும், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றிவிடுகிறார்கள்.

பழம்பெரும் இதிகாசமான இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சஞ்சீவி மூலிகை மனிதருக்கு இறப்பு இல்லாத வாழ்க்கையை கொடுக்கும் என்பது உண்மையா? பொய்யா? என்பது ஒரு பக்கம் இருக்க, இப்படி ஒரு கருவை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேரம் நம்மை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் அருண்.கே.ஆர்.ஆரம்பம் முதல் முடிவு வரை, தான் எடுத்துக்கொண்ட கதைக்கருவை வித்தியாசமான முறையில் சொல்லி, பார்வையாளர்களை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘ஆரகன்’ ஒரு திகில் அனுபவம்

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *