இந்திய இசைப்பயணத்தை அறிவித்தார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ; ரசிகர்கள் உற்சாகம்
சென்னை, ஜூன் 24 : இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இந்திய இசைப்பயணத்தை அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இவரை ரசிகர்கள் சுருக்கமாக டிஸ்பி (DSP) என்று அழைப்பார்கள். மேலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் அவரது இசை இருப்பதால் அவருக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கி உள்ளனர். தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரை உலகில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக ‘அத்தாரிண்டிகி தாரேதி’ படத்துக்கான மதிப்புமிக்க நந்தி விருதும், ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்துக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல்,பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடன இயக்குனராக வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, லண்டன் என பல நாடுகளில் வெற்றிகரமான இசைப் பயணங்களுக்குப் பிறகு தனது சொந்த நாட்டிற்கு திரும்புவதைக் குறிக்கும் வகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியப் இசைப் பயணத்தை அறிவித்துள்ளார். கடந்த ஜூன் 21ம் தேதி உலக இசை தினத்துடன் இணைந்த டிஎஸ்பி இசை நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியிட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் டிஎஸ்பி, தனது எக்ஸ் வலைதளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் சுற்றுப்பயணத்தின் முதல் நகரத்தைப் பற்றி ரசிகர்கள் யூகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
டிஎஸ்பி -யின் இந்திய இசைப் பயணத்தை ஏசிடிசி ஈவென்ட்ஸ் (ACTC Events) தயாரித்து நிர்வகிக்கிறது.
இந்த இசை நிகழ்ச்சி குறித்து கூடுதல் தகவல்களை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும், ஏசிடிசி ஈவென்ட்ஸ் சமூக வலைத்தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.