குற்றப்பின்னணி
இயக்கம் – என் பி இஸ்மாயில்
நடிகர்கள் – ராட்சசன் சரவணன், தாட்சயினி, ஹனீபா, லால்
இசை – ஜித்
தயாரிப்பு – ஃப்ரெண்ட்ஸ் பிக்சர்ஸ் – ஆயிஷா
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பால் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் வீடு வீடாக சென்று பால் வியாபாரம் செய்வதோடு, தண்ணீர் கேன் போடும் வேலையும் செய்து வருகிறார். இத்தகைய சாதாரண சூழ்நிலையில் வாழும் ஒருவன் திடீரென தான் வாடிக்கையாக பால் விற்பனை செய்யும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்கிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருக்கும் தம்பதியை கொலை செய்கிறார். இந்த இரண்டு கொலைகளும் ஒரே பாணியில் நடந்திருப்பதால், போலீஸ் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்க, அந்த கொலையாளி அதே ஊரில் சாதாரணமாக சுற்றி திரிகிறான். அவன் எதற்காக அவர்களை கொலை செய்தான் ?, காவல்துறை இவனை கண்டுபிடித்தார்களா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்தப் படத்தில் ‘ராட்சசன்’ படத்தில் வில்லனாக அனைவரையும் மிரட்டிய சரவணன், இதில் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக மிரட்டியிருக்கிறார். த்ரில்லர் படங்களுக்கு என தன்னை தயார் படுத்திக் கொண்டது போல நம் அனைவரையும் சில காட்சிகளில் நடுங்க வைத்து விட்டார், பால் வியாபாரம், தண்ணீர் கேன் வியாபாரம் செய்துக்கொண்டு அப்பாவியாக வலம் வருபவர், திடீரென்று கொடூரமான கொலையாளியாக மாறும் காட்சிகளில் நடிப்பில் வேறுபாட்டை காட்டி கவனம் ஈர்க்கிறார். மிகப்பெரிய கவனம் பெறக்கூடிய நடிகராக விரைவில் மாறுவார்,
இந்தப் படத்தில் தீபாவளி, தாட்சாயிணி, சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா, கராத்தே ராஜா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் அனைவரையும் அளவாக சரியாக இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் இஸ்மாயில்,
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீத் இசையமைத்துள்ளார், ஒரு சில பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால் படத்திற்கு பக்கபலமாக இருப்பது அவரது பின்னணி இசைதான் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை நடுங்க வைத்துள்ளது, மேலும் சங்கர் செல்வராஜின் ஒளிப்பதிவு எளிமையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. கதாநாயகன் வசிக்கும் தோட்ட வீடு மற்றும் படத்தில் காட்டப்பட்ட லைவ் லொக்கேஷன்கள் அனைத்தையும் காட்டிய விதம் படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது. அனைத்தையும் தாண்டி சில எமோசன் காட்சிகளில் நம் அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார்,
நாம் அன்றாட பார்க்கும் நிகழ்வுகளை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மிக சாதாரணமாக கடந்து செல்கிறோம், ஆனால் அந்த விசயம் நம் வாழ்வில் நடந்தால் மட்டுமே அதன் பாதிப்பும், ஆழமும் நமக்கு தெரியும் என்பதை உணர்த்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் என்.பி.இஸ்மாயில், தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார்.மேக்கிங்கில் சில குறைகள் இருந்தாலும், கதை நகரும் விதம் காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதம் என அனைத்தும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்துள்ளது, சமூக கருத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு தரமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை இயக்குனர் உருவாக்கியுள்ளார்,
மொத்தத்தில், இந்த ‘குற்றப்பின்னணி’ நாம் உதாசீனப்படுத்திய உண்மை சம்பவம்.
Rating 2.8/5