ஜே பேபி படம் எப்படி இருக்கு?

ஜே பேபி

இயக்குனர்- சுரேஷ் மாரி
நடிகர்கள் – ஊர்வசி , அட்டகத்தி தினேஷ் , மாறன்
இசை – டோனி பிரிட்டோ
தயாரிப்பு – பா ரஞ்சித் , நீலம் புரொடக்சன்

தனது மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து வைத்த பின்னர் தன் மீதி நாட்களை தன் பிள்ளைகள் ஒவ்வொருவர் வீட்டிலும் கடத்தி வருகிறார் ஒரு தாய், இப்படி இருக்கும் சூழ்னிலையில் ஒரு நாள் திடிரென்று அவர் காணாமல் போய் விடுகிறார், அவரை தேடி வரும்போது அவர் கொல்கத்தாவில் இருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது , இந்த தகவலை கேட்ட மூத்த மகனும் இளைய மகனும் தாயை தேடி கொல்கத்தா செல்கின்றனர் , அதன் பின் அவர் கிடைத்தாரா இல்லையா? ஏன் அங்கு சென்றார் என்பதே மீதிக்கதை.

இந்தப் படத்தில் நடிகை ஊர்வசி குழந்தை உள்ளம் படைத்த முதியவராக நடித்திருக்கிறார். , இன்று இது போன்ற அம்மாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பார்கள், ஆனால் இனி வரப்போகும் தலைமுறையினர் இது போன்ற வெகுளித்தனமான தாயை பார்ப்பது மிகவும் அரிது நாம் அவர்களை மிக சாதாரணமாக கடந்து செல்லும் சூழலில் வந்துவிட்டோம் , ஆனால் அவர்களின் ஏக்கம், ஏமாற்றம், மகிழ்ச்சி போன்ற உணர்வை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்று இந்தப் படம் சொல்கிறது

இந்தப் படத்தில் ஊர்வசியின் மூத்த மகனாக நகைசுவை நடிகர் மாறன் நடித்துள்ளார்,இந்தப் படத்தின் மூலம் தன்னை சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையாக புரிந்து கொண்டு தேவையான இடங்களில் அளவாக நடித்து மிரட்டியிருக்கிறார். நகைசுவை வசனங்கள் இருந்தாலும் அதையும் சரியாக பேசி நம் மனதில் நின்று விட்டார், இனிமேல் இவரை இது போன்ற கதாபாத்திரங்களில் அடிக்கடி பார்க்கலாம்.

மேலும் ஊர்வசியின் இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ் இந்தப் படத்திற்காக உடல் அளவில் நிறைய மெனக்கெடல் போட்டுள்ளார், படத்தில் தொப்பை வயிறுடன் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் மொத்த குடும்பதையும் எப்படி பாதிக்கிறது அதனால் வரும் மனவேதனை என அனைத்திலும் சிறப்பாக நடித்து நம்முள் ஒருவராக மாறியுள்ளார்.

இந்தப் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களாக மெலடி டார்கஸ், மூத்த மகளாக நடித்திருக்கும் தாட்சாயிணி, தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, மாறனின் மனைவியாக நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவரும் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களை போல இருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது

இந்தப் படம் இயக்குனரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது , அந்த உண்மை சம்பவத்தில் அந்த தாயை கொல்கத்தாவில் காப்பாற்றி, அவர்களுடைய பிள்ளைகளிடம் சேர்த்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், அதே கதாபாத்திரத்தில் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் கை தேர்ந்த நடிகராக நடித்துள்ளார்.

படத்தில் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களின் உணர்வை அழகாக காட்டியுள்ளார் . அவரின் ஒளிப்பதிவு சாதாரணமாக இருந்தாலும் படத்திற்கு அது கச்சிதமாக பொருந்தியுள்ளது . ஊர்வசியின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். டோனி பிரிட்டோவின் இசை காட்சிகளை உணர்வுமிக்கதாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. படத்தொகுப்பாளர் சண்முகம் வேலுச்சாமி மற்றும் கலை இயக்குநர் ராமு தங்கராஜ், பார்வையாளர்கள் ஒரு திரைப்படம் என்பதை மறந்து படத்துடன் பயணிக்கும்படி பணியாற்றியிருக்கிறார்கள். நாம் படம் பார்க்கும் உணர்வே இல்லாதது போல் உருவாக்கியுள்ளனர்.

அப்பாவி அம்மாக்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பு நாளடைவில் நடக்கும் மாற்றத்தினால் எப்படி ஏமார்ந்து போகிறார்கள் அவர்களில் ஆசை மற்றும் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக காட்டியுள்ளனர்

மொத்தத்தில், இந்த ’J பேபி’-திரைப்படம் தான் குடும்பங்கள் கொண்டாடக்கூடிய வெற்றிப்படம்

Rating 4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *