புஜ்ஜி அட் அனுப்பட்டி
இயக்கம் – ராம் கந்தசாமி
நடிகர்கள் – கமல்குமார், வைத்தீஸ்வரி , கார்த்திக் விஜய்
இசை – கார்த்திக் ராஜா
தயாரிப்பு – கவிலாலலயா புரொடக்ஷன்
அனுப்பப்பட்டி என்ற கிராமத்தில் வாழும் ஒரு குடிகார தந்தைக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் , அண்ணன் தங்கை ஆகிய இரு சிறுவர்களும் ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்க்கிறார். அதன் மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் அவர், அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைக்கிறார். இதற்கிடையே, சிறுமியின் தந்தை மது குடிப்பதற்காக ஆட்டை ஒருவருக்கு விற்பனை செய்துவிட, சிறுமியும், அவரது அண்ணனும் அந்த ஆட்டை தேடி செல்கிறார்கள். அந்த ஆட்டை தேடி கண்டுபிடித்து அதனை மீட்டு வர முயற்சி செய்கின்றனர், இதில் அந்த குழந்தைகள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதை மீதிக்கதை,
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் சிறுவர்கள் தான் குழந்தை நட்சத்திரமான பிரணிதி சிவ சங்கரன் மற்றும் சிறுவன் கார்த்திக் விஜய் ஆகியோர் எந்தவித பதற்றமும் இன்றி நடித்திருப்பது திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒரு கிராமத்து சிறுவர்களை போல பேச்சிலும் பாவனையிலும் கலக்கியுள்ளனர்,
மேலும் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் போன்ற பெரிய நடிகர் பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளது , ஆனாலும் அந்த இரண்டு சிறுவர்கள் தான் இந்தப் படத்தை தோளில் சுமந்துள்ளனர்,
இந்தப் படத்திற்கு ரெட்ரோ புகழ் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார், அதுவே இந்தப் படத்திற்கு ஒரு பெரிய வரவேற்பை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது, அவரது இசையில் பாடல்கள் இனிமையாகவும் கிராமத்து வாசத்துடனும் அமைந்தது, பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது. அந்த சிறுவர்களின் வெகுளித்தனத்தை வெளிக்காட்டும் காட்சிகளில் அவரது இசை நம்மை கண்கலங்க செய்து விடுகிறது,
இந்தப் படத்தை இயக்குனர் ராம் கந்தசாமி எழுதி இயக்கியுள்ளார், ஒரு கிராமத்து சிறுவர்கள் கால்நடைகளையும் உடன் பிறந்த ஒரு சகோதரன் போல நேசிப்பார்கள் என்பதை மையக் கருத்தாக வைத்துக் கொண்டு, இந்தக் கதையை உருவாக்கியுள்ளார்,
ஆட்டுக்குட்டி மீது அதிகமான அன்பு செலுத்தி சிறுமி வளர்த்தாலும், சிறுமியுடனான ஆட்டுக்குட்டியின் பினைப்பை வெளிப்படுத்தும் காட்சிகள் இல்லாதது திரைக்கதையை பலவீனமடைய செய்வதோடு, பார்வையாளர்களாலும் ஆட்டுக்குட்டியை செல்லப்பிராணியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆட்டுக் குட்டிக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் சில காட்சிகள் வைத்திருந்தால் இன்னும் நம்மை படத்தோடு நெருக்கமாக இணைத்திருக்கும்,
மொத்தத்தில், இந்த ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’- ஒரு கிராமத்து விருந்து