வாழை
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
நடிகர்கள் – கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நான்காவது திரைப்படம் வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் தனக்கென ஒரு திரைமொழியை வகுத்துக் கொண்டிருக்கிறார். அதை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார். அது முற்றிலும் மெருகேறீ ஒரு அழகான படைப்பாக இதில் வெளிப்பட்டு இருக்கிறது. மாரி செல்வராஜ் பேசும் அரசியல் இங்கு பலருக்கு, கொஞ்சம் ஒவ்வாமை தந்திருக்கிறது. யார் இவன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அந்த கேள்விக்கு பதிலாய், தான் யார் என்று சொல்ல, தன் கதையை எடுத்து, அதை ஒரு படைப்பாக முன் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
வாழை எளிய மக்களின் வாழ்வு, எத்தனை கடினமானது என்பதை காட்டுகிறது. இரு சிறுவர்களின் பார்வையில் தெரியும் இந்த சினிமா, எளிய மக்களின் வாழ்வுக்குள் புகுந்து, அவர்களின் கஷ்டங்களையும், வாழ்வின் துன்பங்களையும், நம் கண்ணுக்கு காட்டுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் நமது மண்ணின் வாழ்க்கை பதிவாவதே இல்லை. அதை உடைத்து எரிந்து இருக்கிறது இந்த சினிமா. அச்சு அசலாக, ரத்தமும் சதையுமாக, நம் மண்ணின், நம் மக்களின் வாழ்க்கை, இந்த திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.நாம் சிறுவர்களாக இருந்தபோது, நாம் சந்தித்த வாழ்க்கை அப்படியே இந்த படத்தில் இருக்கிறது.
இரு சிறுவர்கள் குடும்ப அவர்களின் பள்ளி வாழ்க்கை, வாழை சுமக்க சொல்லும் அவர்களின் குடும்பம், அவர்களின் கஷ்டங்கள், துன்பங்கள், இன்பங்கள், இதுதான் இந்த படத்தின் கதை. ஆனால் அதைச் சொன்ன விதமும், திரைமொழியில் அதை நெருக்கமாக காட்டிய விதத்தில் ஒரு மிகச்சிறந்த படைப்பாக வாழை நிமிர்ந்து நிற்கிறது. சிறு சிறு வசனங்கள், காட்சி துணுக்குகள் எல்லாம் ஒரு கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது.
படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுமே நடிகர்களும் அச்சு அசலாக அந்த மண்ணின் மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அந்த ஊர் சிறுவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, அப்படியே அந்த வாழ்க்கையை வாழவைத்து படம்பிடித்து காட்டியிருக்கிறார் மாரி செல்வராஜ். கலையரசன் திவ்யா துரைசாமி நிகிலா விமல் மூவருக்கும் இது காலம் முழுக்க பெயர் சொல்லும் திரைப்படமாக இருக்கும்
படத்தின் மிகப்பெரும் பலமாய் சந்தோஷ் நாராயணன் தாண்டவமாடியிருக்கிறார். அவர் இல்லாவிட்டால் படமே இல்லை. சம்பவங்கள் ஏதுமற்ற காட்சியின் பின்னணியில், தன் இசையால், அவர் கூட்டிச்செல்லும் இடம் மனதை என்னவோ செய்கிறது.தேனி ஈஸ்வரின் கேமரா கோணங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அற்புதமாக, வயல்வெளியை காட்டு மேட்டை, வாழை தோட்டத்தை, கண்முன் கொண்டு வந்திருக்கிறது. சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்த உழைப்பை திரைக்கு கொடுத்திருக்கிறது இந்த திரைப்படம்
மொத்தத்தில் இந்த ,வாழை, நம் வாழ்வியலின் பெருமை.
Rating 3.3/5