விடுதலை பாகம் 2 படம் எப்படி இருக்கு?

விடுதலை பாகம் 2 படம் எப்படி இருக்கு?

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி,விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 2. இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், இந்தப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்

முதல் பாகத்தில் போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையே நடந்த மோதல், வாத்தியாரின் கைது, அதிகாரிகளின் அதிகார வர்க்கம் மக்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்த வெற்றிமாறன், இந்த பாகத்தில் மக்கள் படை உருவான கதை, வாத்தியார் கம்யூனிசம் பாதையை தேர்ந்தெடுத்தற்கான காரணம், போலீசுக்கும், மக்கள் படைக்கும் இடையேயான போரில் ஜெயித்தது யார்? குமரேசனின் குற்ற உணர்வு அவனை என்ன செய்தது உள்ளிட்டவற்றை திரைக்கதையாக கொடுத்திருக்கிறார்

பெருமாள் என்ற கதாபாத்திரத்தில், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அப்பாவி பள்ளி வாத்தியார் தொடங்கி, கம்யூனிச இயக்கவாதி, தொழிற்சங்கவாதி, ஆயுதம் ஏந்தி போராடும் போராளி, தமிழர் மக்கள் படை தலைவர் என்று பல முகங்களோடு பயணித்து கவனம் ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதி, காதலர் மற்றும் கணவராகவும் தனது இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கிறார்.

அவரது மனைவியாக மஞ்சு வாரியர். தைரியமும், தெளிவும் நிறைந்த பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. டி கம்பெனியின் ஓசியாக வரும் சேத்தன் காமெடி, வில்லனிசம் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். ராஜீவ் மேனன் நடிப்பு புருவம் விரியவைக்கிறது. வாத்தியாரின், வாத்தியாராக வரும் கிஷோரின் நிதானம் கம்யூனிசம் கொள்கைகளை சரியாக உணரவைக்கிறது.சூரி பெரிதாக தெரியவில்லை. கென் கருணாஸின் ஆக்‌ஷன் அதகளம்

இளையராஜாவின் இசையில் பாடல்கள் கவர்ந்தாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு சற்று வேகத்தடையாகவே இருக்கிறது. ஆனால், அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது. காதல் காட்சிகளில் நம்மை இதமாக வருடிச் செல்லும் ராஜா, போராட்டக்களம் மற்றும் சண்டைக்காட்சிகளில் பீஜியம் மூலம் தெறிக்க விடுகிறார்

கலை இயக்குநர் ஜாக்கி, சண்டைக்காட்சி வடிவமைப்பாளர்கள் பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சிவா மற்றும் பிரபு, ஆடை வடிவமைப்பாளர் உத்தரா மேனன் என அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது

“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” என்ற வசனத்தின் மூலம் அரசியலில் சுலபமாக நுழைந்து, விரைவில் அரியணையில் அமர நினைக்கும் ரசிகர்களை கொண்ட தலைவர்களுக்கு சம்மட்டியடி கொடுத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், தனது ஆழமான வசனங்கள் மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறார்

இந்தப் படம் முழுக்க முழுக்க மக்களுக்கான ஒரு படமாக உருவாகியுள்ளது விடுதலை 2 . முழுக்க முழுக்க மக்களுக்கான இயக்குநராக இப்படத்தை எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

Rating 3.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *