ஹரா படம் எப்படி இருக்கு?

ஹரா

இயக்குனர் – விஜய் ஸ்ரீ
நடிகர்கள் – மோகன் சரத்குமார், அனுமோல், சாரு ஹாசன், வனிதா விஜயகுமார்
இசை – ரஷாந்த் அர்வின்
தயாரிப்பு – கோவை எஸ் பி மோகன்ராஜ்

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகளின் தற்கொலைக்குப் பின் இருக்கும் உண்மையான காரணங்களைத் தேட ஆரம்பிக்கும் அந்த தந்தைக்கு நிறைய சிக்கல்கள் உருவாகிறது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பணத்திற்காக தனியார் போலி மாத்திரை நிறுவனங்களை ஆதரிப்பது, கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்பட வற்புறுத்துவது இவை எல்லாம் சேர்ந்து தன் மகளின் தற்கொலைக்கு காரணமாவதை தெரிந்துகொண்டு அவர்களைப் பழிவாங்குகிறார் இத்தனை செல்வாக்குகள் இருந்தாலும் தன் மகளின் இழப்பிற்கு போராடும் தந்தை இறுதியில் வென்றாரா என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் கதையை போல பல படங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் இதில் என்ன சிறாப்பு என்றால் பதினான்கு ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் 90 களின் மிகப்பெரிய ஸ்டாரான மோகன் இந்தப் படத்தில் நடித்திருப்பது தான். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் காதன் நாயகனாக கலக்கிய மோகன் ஒரு தந்தையாக, ஒரு ஆக்‌ஷன் ஹிரோவாக தன்னை படம் முழுவதும் உயிர்ப்பாக வைத்திருக்க முயற்சிப்பது பாராட்டிற்குரியது. மோகனின் லுக், அவரது கூலான உடல்மொழி, அவரை தொடர்ச்சியாக நிறைய கதைகளில் பார்க்கலாம் என்கிற எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. விஜயின் கோட் படத்தில் அவரது கதாபாத்திரத்திற்காக பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்தப் படத்தில் பிரபல நடிகர் சாருஹாசன் நடித்துள்ளது படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது, அவரை தவிர நகைச்சுவை காட்சிகளில் வனிதா மற்றும் ராஜேந்திரனின் பங்களிப்பு நம்மை சிரிக்க வைத்துள்ளது, இந்தப் படத்தில் மோகனின் மகளாக நடித்துள்ள பெண் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு இந்த படத்தின் மூலம் இன்னும் சில பட வாய்ப்புகள் கிடைப்பது உறுதி,

இந்தப் படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைத்துள்ளார், இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது , நான்குமே அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இரண்டாம் பாதியில் பிண்ணனி இசை படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்தது, ஒளிப்பதிவை பிரகாஷ் முனுசாமி கையாண்டுள்ளார், இயற்கை சூழல் காட்சிகள் மற்றும் பாடல்கள் காட்சியமைக்கப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது,

படத்தின் திரைக்கதையும் வசனங்களும் கொஞ்சம் கமர்ஷியல் படங்களை போல அமைந்துள்ளது சில காட்சிகளில் தொய்வடைய செய்கிறது, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் தான் நடித்திருக்கிறார், மோகனைத் தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களின் ஈடுபாடும் படத்தில் குறைவாகவே உள்ளது. படத்தின் சுவாரஸ்யத்திற்காக முன்னும் பின்னும் காட்சிகளை அமைத்துள்ளார், சமூகத்தில் நமக்கு தெரிந்தும் தெரியாமல் நடக்கும் குற்றங்களை ஒரு சஸ்பென்ஸ் நிகழ்வுடன் இயக்குனர் கூற முயற்சி செய்துள்ளார்

மொத்தத்தில் இந்த ‘ஹரா’ வை மோகனுக்காக கண்டிப்பாக பார்க்கலாம்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *