சார் படம் எப்படி இருக்கு?

சார்

இயக்கம் – போஸ் வெங்கட்
இசை – சித்து குமார்
நடிகர்கள் – விமல் , சாயா தேவி , சிராஜ் , சரவணன்
தயாரிப்பு – எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் – சிராஜ்

ஒரு கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் அனைத்து மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறார், கிராமம் ஒன்றில் பள்ளி ஒன்றை உருவாக்குகிறார். அதன் மூலம் ஒடுக்கப்பட்டவர்களை கல்வி கற்க செய்து அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்க முயற்சிக்கிறார். கல்வி கற்றால் அவர்களை அடிமைப்படுத்த முடியாது, என்று நினைக்கும் சிலர்கள் , அந்த பள்ளியை அழிப்பதற்கு பல சதிவேலைகளை செய்கிறார்கள். ஆனால், பள்ளியை உருவாக்கிய ஆசிரியரை அவர்களால் அடக்க முடிந்ததே தவிர அந்த பள்ளியை அசைக்க முடியாமல் போகிறது. இந்த பிரச்சனை ஆசிரியரின் அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ஆசிரியரின் மகன் ஆசிரியர் ஆகிவிட. அப்பா போல் அந்த பள்ளியின் மூலம் பலருக்கு கல்வி அறிவை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுபவர் அந்த பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த நினைக்கிறார். அங்கேயும் உயர்சாதியினரின் அடுத்த தலைமுறை முட்டுக்கட்டை போட, அவர்களின் சதியால் பைத்தியக்காரர் பட்டம் கிடைக்க, அவரும் தன் மீது சுமத்தப்பட்ட பைத்தியக்காரர் பட்டத்தை ஏற்றுக் கொண்டு, தன் மகன் தனது பணியை செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் அமைதியாகி விடுகிறார். மகனும் தனது தாத்தா, அப்பா போல் ஆசிரியராகி, அவர்கள் செய்ய நினைத்ததை தொடர்கிறார். ஆனால், அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டைப் போடும் உயர்சாதியினர் ஆசிரியருடன் நட்பாக பழகினாலும் அவரது லட்சியத்திற்கு எதிராக நயவஞ்சக வேலைகளை செய்கிறார். இப்படி இரண்டு தலைமுறைகளாக கல்வி கொடுக்க போராடும் ஆசிரியர்களை அவலநிலைக்கு தள்ளி, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு கல்வி கிடைக்கவிடாமல் செய்பவர்களுக்கு மூன்றாம் தலைமுறை ஆசிரியரான விமல், எப்படி முற்றுப்புள்ளி வைக்கிறார் என்பதை ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், சாதி பெயரில் உழைப்பாளிகளை ஒடுக்கப்பட்டவர்களாக்க முயற்சிப்பவர்களுக்கு ஆசிரியர்களின் பிரம்படியாகவும் சொல்வது தான் ‘சார்’.

ஆசிரியர் வேடத்திற்கு ஆகச்சிறந்த நடிகர், என்று பெயர் வாங்கும் அளவுக்கு விமல், ஆசிரியர் வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் அதனைச் சுற்றிய நகைச்சுவைக் காட்சிகள் படத்துக்கு மட்டும் இன்றி விமலுக்கும் ஒட்டவில்லை என்றாலும் இறுயில் சதியாளர்கள் வழியில் சென்று அவர்களை வேரறுக்கும் காட்சிகளில் தனது நடிப்பு உயர்ந்து நிற்கிறார்.

விமலின் தந்தையாக நடித்திருக்கும் ‘பருத்திவீரன்’ சரவணன், நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். தனது தந்தையின் நிலை தனக்கும் ஏற்பட்ட பிறகு, அவரை கட்டி வைத்திருந்த சங்கிலியை எடுத்து தனக்கு தானே சிறைபடும் காட்சியில் கண்கலங்க வைத்து விடுகிறார். நாயகனின் நண்பராக வலம் வந்தாலும், சாதி வெறியால் தனது முன்னோர்கள் செய்த நயவஞ்சகத்தின் மூலம் நண்பர்களை கொல்ல துடிக்கும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் சிராஜ், புதுமுக நடிகர் என்ற சுவடு தெரியாமல் நடித்திருக்கிறார். இதுபோன்ற நல்ல வேடங்கள் அமைந்தால் நிச்சயம் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுப்பார்.

பாடல் காட்சிக்காகவும், சில காதல் காட்சிக்காகவும் சாயா தேவி நாயகியாக நடிக்க வைக்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டிய ஒரு முக்கியத்துவம் அவரது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டு, அவரையும் திரைக்கதையின் ஓட்டத்துடன் ஒன்றிவிட செய்து மக்கள் மனதில் பதிய வைத்துவிடுகிறார்கள். ரமா, ஜெயபாலன், கஜராஜ், சரவண சக்தி, விஜய் முருகன், ப்ரனா, எலிசபெத் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்து திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் விதமாக பயணித்திருக்கிறார்கள்

இந்தப் படம் மூன்று காலக்கட்டங்களில் நடக்கும் கதை மற்றும் கதாபாத்திரங்களை காலக்கட்ட மாறுதல்களுக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹரிஷின் பணி சிறப்பு.
சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும், கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.ஒரே கதை ஆனால் அதை மூன்று காலக்கட்டங்களில் சொல்ல வேண்டும் என்ற இயக்குநரின் முயற்சிக்கு துணையாக செயல்பட்டிருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கன், மூன்று தலைமுறைகளுக்கான காட்சிகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

எளிய மக்களை அடிமைகளாக்கி அதன் மூலம் தங்களை ஆண்டான்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் சவுக்கடி கொடுத்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், தற்போதும் கிராமப்புறங்களில் சாதி ஏற்றத்தாழ்வுகளால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கல்வியை முன்னிறுத்தி சொல்லியிருக்கிறார்.ஆசிரியர்களின் சிறப்பு பற்றி சரவணன் மூலம் பேசி ஆசிரியர் பணிக்கு பெருமை சேர்த்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட், மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை களைய கல்வியால் மட்டுமே முடியும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘சார்’ அன்று முதல் இன்று ஆசிரியர்களுக்கான ஒரு பெருமை

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *