தெலுங்கு கவிஞரின்
பாடல் வரிகளை
கண்ணதாசன் பயன்படுத்தினார்!
அந்த தகவலை
வசந்தமாளிகை டிரெய்லர் வெளியிட்டு விழாவில்
வி.சி. குகநாதன்
கூறினார்.!
1972ல் வெளிவந்த படம் ” வசந்தமாளிகை
அன்று திரையிட்ட இடங்களில் எல்லாம் 25 வாரங்கள் ஓடி வசூலில் சாதனை படைத்த படம். 50 வருடங்களுக்கு பிறகு வசந்த மாளிகை திரைப்படத்தை கோவை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், டெக்கான் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான தம்பிதுரை அவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
டிஜிட்டலில் மாற்றி 8.1. சவுண்ட் சிஸ்டத்தில் டால்பி அட்மாஸ் ஒலியில் ரிலிசாகும் வசந்தமாளிகை படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தம்பிதுரை வரவேற்று பேசினார்.
திரைப்பட எழுத்தாளரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான வி.சி. குகநாதன் டிரெய்லரை வெளியிட்டு பேசியதாவது , ” டி.ராமாநாயுடு தயாரித்த வசந்தமாளிகை படத்தின் கதையை தெலுங்கில் ஒரு பெண் எழுதி புத்தகமாக வந்த கதையாகும். இதை நாயுடு அவர்கள் தெலுங்கில் தயாரித்தார். அதே சமயம் தமிழிலும் தயாரிக்க விரும்பினார்.
பலரிடம் பேசியும் அவர்கள் இந்த கதையில் நடிக்க முன்வரவில்லை.
அதே வேளையில் என்.டி.ஆர். நடித்து ராமநாயுடு தயாரித்து வெளியிட்ட தெலுங்கு படம் பெரிய ஹிட்டாகி ஓடி கொண்டிருந்தது. அந்தப்படத்தின் தமிழ் உரிமையை தனக்கு வழங்கினால் வசந்த மாளிகை படத்தின் கதையை நான் உங்களுடன் சேர்ந்து தயாரிக்கிறேன் என்று நாகிரெட்டி கூறவும் சற்றும் யோசிக்காமல் சரி என்று கூறினார் ராமாநாயுடு.
நாகிரெட்டியாருக்கு என்.டி.ஆர். நடித்து வெற்றி பெற்ற படத்தின் உரிமையை ராமநாயுடு வழங்கினார். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்து மாபெரும் வெற்றி பெற்ற எங்கள் வீட்டு பிள்ளை.
நாகிரெட்டி யாரும் ராமநாயுடுவும் இணைந்து விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் பேனரில் தயாரித்த படம்தான் ” வசந்த மாளிகை”.
இதை படம் என்று சொல்ல மாட்டேன். இந்த படம் ஒரு பல்கலை கழகம் என்று தான் சொல்வேன். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ,
கே.வி. மகாதேவன், கண்ணதாசன், வின்சென்ட் என பல தூண்களால் செதுக்கப்பட்ட இந்த காவியம் திரை உலகினருக்கு ஒரு பல்கலை கழகம் என்று சொல்வதில் நான் பெருமை படுகிறேன்.
இதில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் குறிப்பாக ” இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்” என்ற வரிகள் (இதன் தெலுங்கு பதிப்பில்) கவிஞர் ஆத்ரேயா எழுதிய வரிகள். அதை அப்படியே எடுத்து தமிழில் கண்ணதாசன் பயன் படுத்தினார். இளைய சமூகத்தினருக்கு எத்தனை காலம் கடந்தாலும் புத்தம் புதிய படமாகவே இது இருக்கும் ” என்று வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவில் இயக்குனர்கள் ஆர்.சுந்தர்ராஜன், சித்ரா லட்சுமணன், மனோஜ் குமார், அரவிந்த்த ராஜ்,
பேரரசு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் இணை செயலாளர் எஸ். சௌந்தரபாண்டியன், கோவை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் குமார், இணை செயலாளர் ரகுபதி ஆகியோரும் வாழ்த்தி பேசினார்கள்.
மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி நன்றி கூறினார்.
கிளாமர் சத்யா
PRO