
‘கேங்கர்ஸ்’
இயக்குனர் – சுந்தர் சி
நடிகர்கள் – சுந்தர் சி, வடிவேலு , கேத்ரின் தெரசா, வாணி போஜன், முணிஸ்காந்த்
இசை – சத்யா
தயாரிப்பு – ஆவ்னி சினிமேக்ஸ் , பென்ஸ் மீடியா லிமிடெட் – குஷ்பு சுந்தர்
ஒரு ஊரில் பெரிய மனிதர்களான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது செயல்களால் பள்ளியும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மாணவிகள் சிலர் மாயமாகும் சம்பவங்களும் நடக்கிறது. இதனால், அங்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து ஆசிரியை கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் அனுப்புகிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை அனுப்புகிறது. அதன்படி, உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேரும் சுந்தர்.சி, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வில்லன் கோஷ்டியை வதம் செய்ய, அவர் தான் அந்த ரகசிய காவல்துறை அதிகாரி என்று கேத்ரின் நினைக்கிறார். ஆனால், சுந்தர்.சி காவல்துறை அதிகாரி அல்ல, என்ற உண்மை தெரிய வருகிறது. அப்படி என்றால் சுந்தர்.சி யார்?, அவர் எதற்காக வில்லன் கோஷ்டியை வதம் செய்கிறார்? என்பதை நகைச்சுவை கலந்தும் எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலமாகவும் சொல்வதே ‘கேங்கர்ஸ்’.
பல நாட்களுக்கு பின் மீண்டும் ஹீரோவாக களம் காணும் சுந்தர்.சி, துணைக்கு வடிவேலுவை சேர்த்துக் கொண்டு தங்களது கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஹீரோவுக்கான காதல் காட்சிகளை தவிர்த்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் மற்றும் காமெடியில் நடிகராக அசத்தியிருக்கிறார்,
பள்ளி உடற்பயிற்சி ஆசிரியராக நடித்திருக்கும் வைகை புயல் வடிவேலு, நகைச்சுவை புயலாக மீண்டும் மையம் கொண்டு மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். வசனங்கள், உடல் மொழி என்று மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கும் வடிவேலு, தான் எதிர்கொண்ட பந்துகள் அனைத்தையும் பவுண்டரியாக அடித்து மீண்டும் ’மேன் ஆஃப் தி சிரிப்பு’ பட்டத்தையும், பாராட்டையும் பார்வையாளர்களிடம் பெற்றிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கேத்ரின் தெரசா, கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் காதல், ஒரு பாட்டு என்று படம் முழுவதும் வருபவர், அடி வாங்கும் காட்சிகளிலும் அசராமல் நடித்திருக்கிறார். சின்னத்திரை நயன்தாரா என்ற அடையாளத்தோடு வெள்ளித்திரையில் அறிமுகமான வாணி போஜன், சிறிய வாய்ப்பு என்றாலும், அது பெரிய படமாக இருந்தால் போதும், என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் போல, அப்படி தான் இதிலும் நடித்திருக்கிறார். வில்லன் கேங்கில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும் ஹீரோ கேங்கில் இருக்கும் பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு அனைவரும் ஒன்று சேர்ந்து காமெடி கேங்கர்ஸாக பார்வையாளர்களை படம் முழுவதும் சிரிக்க வைக்கிறார்கள்.
படம் முழுவதும் சுந்தர் சியின் சிக்நேச்சர் என்று கூறப்படும் கலர்புல் நிறைந்துள்ளது ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கமர்ஷியல் அம்சங்கள் கரைபுரண்டு ஓடுகிறது. எனினும் இரண்டு பாடல்கள் மட்டும் தான் நன்றாக இருந்தது ,ஆனால் பின்னணி இசையில் அதையும் சரி செய்து விட்டார்,
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, தனது வழக்கமான பாணியில் கதையை நகர்த்திச் சென்றாலும், காட்சிக்கு காட்சி சிரிக்க வைப்பதோடு, பார்வையாளர்களின் யூகங்களை உடைத்து புதிய ரூட்டில் திரைக்கதையை பயணப்பட வைத்து படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்கிறார். இரண்டரை மணி நேரம் எப்படி போகிறது, என்பதே தெரியாத வகையில் படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் செல்வதோடு, படம் முழுவதும் பார்வையாளர்களை சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி, வடிவேலுக்கு இது மீண்டும் ஒரு கம்பேக்.
மொத்தத்தில், ‘கேங்கர்ஸ்’ அனைவரையும் சிரிக்க வைக்கும்.
Rating 3/5