பறந்து போ படம் எப்படி இருக்கு?

பறந்து போ

இயக்கம் – ராம்
நடிகர்கள் – சிவா , மிதுல் ரயான் , கிரேஸ் ஆண்டனி , அஞ்சலி
இசை – சந்தோஷ் தயாநிதி , யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு – செவன் சீஸ் அன்ட் ஹில்ஸ் ப்ரொடக்சன் – ராம்

ஒரு சாதாரண பெற்றோர்கள் நினைப்பது போல தனக்கு கிடைக்காத அனைத்தும் தனது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும், தான் செல்லாத உயரத்திற்கு தன் பிள்ளை செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள், அந்த பிள்ளையின் ஆசை என்னவென்று அறிவதில்லை. தங்களது பிள்ளையை பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, அவர் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவர் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அவர் உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் தந்தை, தனது மகனின் உண்மையான விருப்பம் மற்றும் அவன் வாழ நினைக்கும் வாழ்க்கைப் பற்றி எப்படி தெரிந்துக் கொள்கிறார், என்பதை சிரித்து மகிழும்படி சொல்வதே ‘பறந்து போ’.

கோகுல் என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா, எபோதும் போல் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதோடு, தனது டைமிங் வசனங்கள் மூலம் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறார். தனது வழக்கமான பாணியிலான வசன உச்சரிப்பு என்றாலும், அவரது உடல் மொழி மற்றும் சரியான இடத்தில் சொல்லி திரையரங்கையே சிரிப்பு சத்தத்தில் அதிர வைக்கிறார்.

சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத்தனத்தால் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது, என்று புலம்பவும் வைக்கிறார்.சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவு கிரேஸ் ஆண்டனி, நடிப்பு மற்றும் நகைச்சுவை இரண்டிலும் கவனம் ஈர்க்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு கைதட்டல் பெறுகிறது. விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் என தந்தை – மகன் பயணத்தில் தலை காட்டுபவர்களாக இருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் நின்று விடுகிறார்கள்.

இயற்கையின் சொர்க்கம் நியூசிலாந்தில் இல்லை, நம் பகத்திலேயே இருக்கிறது, என்பதை தனது கேமரா மூலம் நமக்கு புரிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். நாம் சாதாரணமாக கடந்து செல்லும் மலைகள், மரங்கள், குலங்கள், பழங்காலத்து சாலை மண்டபம் என அனைத்தையுமே ரசிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கும் என்.கே.ஏகாம்பரம், படம் முடிந்த உடன் இருசக்கர வாகனத்தில் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் ஆவலை தூண்டுகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் பாடல்களாக அல்லாமல் வசனங்களாக மனதை வருடுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை நேர்த்தி.

இந்தப் படத்தின் அறிவிப்பே ஒரு ஆச்சர்யம் தான் , காரணம் இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பது, படம் அதை விட மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது. அந்த அளவுக்கு இயக்குநர் ராம் படத்தை ஜாலியாக நகர்த்திச் செல்கிறார். பயணம் சார்ந்த மற்றும் உணர்வுப்பூர்வமான கதை இயக்குநர் ராமுக்கு புதிதல்ல என்றாலும், அதே பாணியிலான இந்த கதையை அவர் கையாண்ட விதம் புதியதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
சோகமான பயணங்களை மட்டுமே படைப்பாக கொடுத்து வந்த இயக்குநர் ராம், முதல் முறையாக மகிழ்ச்சிகரமான பயணத்தை படைப்பாக கொடுத்திருப்பதோடு, படம் பார்ப்பவர்களை எதாவது ஒரு வகையில் படத்துடன் ஒன்றிணைக்க வைத்து விடுகிறார்.

மொத்தத்தில், ‘பறந்து போ’ எதிர்பாராத ஒரு மகிழ்ச்சி

Rating 3.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *