’தலைவன் தலைவி’ படம் எப்படி இருக்கு?

’தலைவன் தலைவி’

இயக்கம் – பாண்டிராஜ்
நடிகர்கள் – விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன்
இசை – சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு – சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் கே தியாகராஜன்

ஒரு தம்பதிகள் திருமணமாகி தங்களது இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, குடும்பங்களில் வழக்கமாக ஏற்படும் சிறு சிறு சண்டை சச்சரவுகளாலும், அதனால் நடக்கக்கூடிய சம்பவங்களாலும் பிரிந்து விடுகிறார்கள். மூன்று மாதங்களாக பிரிந்திருக்கும் தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை குடும்பங்களில் அன்றாட நடக்கும் சலசலப்புகளின் பின்னணியில், கதை சொல்வதே இந்த ‘ தலைவன் தலைவி’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் அன்பான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள பிள்ளையாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அளவுக்கு அதிகமாக நடித்து அதிர்ச்சியளிக்கிறார். தனது தனித்துவமான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றுவதில் கில்லாடியான விஜய் சேதுபதி, இந்த படத்தில் அதை கொஞ்சம் அதிகமாகவே செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் .

நித்யா மேனன், விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டி நடித்தாலும், அவர் அளவுக்கு பார்வையாளர்களை பதம் பார்க்கவில்லை. கணவருடன் சண்டை போட்டாலும், அவரது பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்

சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு அணுகுண்டுகளாக திரையரங்கை சிரிப்பு சத்தத்தால் சிதறடிக்கிறது. உருவ கேலி செய்வதை முற்றிலும் தவிர்த்திருக்கும் யோகி பாபு, அமைதியான முறையில் வசனம் பேசி விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பதற்காகவே தனியாக பாராட்டலாம். நாயகனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர், நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷினி, செண்ட்ராயன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணின் இசை , அவரது இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகங்கள். கமர்ஷியல் படம் என்றாலும் தனித்துவமான பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை சட்டென்று ஈர்க்கிறது. பின்னணி இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுகிறது, ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறுகிய தெருக்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது. கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் பாண்டிராஜ், வழக்கமான குடும்ப சிக்கல்களை குட்டி அறிவுறையோடு, நகைச்சுவையாக சொல்லியிருந்தாலும், அறிவுரை மறக்க பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்வது யோகி பாபுவின் காமெடி காட்சிகள் , தம்பதி இடையே வரும் காதல், மோதல் சம்மந்தப்பட்ட காட்சிகளும், மருமகள் – மாமியார் இடையே நடக்கும் சண்டைகளிலும் கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிவதால் அவற்றை முழுமையாக ரசிக்க முடியவில்லை. கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள், இருவரும் மனம் விட்டு பேசினாலே தீர்ந்துவிடும், அப்படி பேசாமல் ஈகோவில் முட்டிக்கொள்ளும் தம்பதிகள் இறுதியில் நீதிமன்ற வாசலில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது, என்ற நல்ல விசயத்தை லேசாக சொல்லிவிட்டு செல்கிறார்,

மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’ நல்ல ஃபேமிலி என்டர்டெயின்மெண்ட்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *