ஹவுஸ் மேட்ஸ்’ படம் எப்படி இருக்கு?

’ஹவுஸ் மேட்ஸ்’

இயக்குனர் – டி ராஜவேல்
நடிகர்கள் – தர்ஷன், காளி வெங்கட், வினோதினி, சாந்தினி பைஜூ
இசை – ராஜேஷ் முருகன்
தயாரிப்பு – சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் – சிவகார்த்திகேயன்

ஒரு இளம் தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்குகிறார்கள். அதே வீட்டில், ஒருவர் அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.  ஒரு குடும்பம் வாழ்வது மற்றொரு குடும்பத்திற்கு தெரியாது. இதனால், இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று நினைக்க, பிறகு இது அமானுஷ்யம் இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விசயங்கள், அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல அதிர்ச்சியான மற்றும் ஆச்சரியமான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள் சிக்கிக்கொள்வதற்கான காரணம் என்ன ?,  அதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா ? என்பதே ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் கதையாகும்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்திருக்கும் அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார், அவரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கும் கதையின் மாந்தர்களின் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம் பார்வையாளர்கள் மனதில் கடத்தி அவர்களையும் அந்த வீட்டினுள் பயணிக்க வைத்திருக்கிறார். ஒரே வீடு, இரண்டு வெவ்வேறு கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள் நகர்ந்தாலும், அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், நம்ப முடியாத விசயத்தை கதைக்கருவாக எடுத்துக் கொண்டாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் அடிப்படையில் அமைத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார். பிரபஞ்சம் எப்படி தோன்றியது, அதன் எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளுக்கு அறிவியல் இன்னும் முழுமையான பதில் அளிக்கவில்லை. இவை தத்துவார்த்த மற்றும் அறிவியல் தேடல்களின் மூலம் ஆராயப்படுகின்றன. அந்த வகையில், அறிவியலில் நம்ப முடியாத பல விசயங்களுக்கு விடை தேடப்பட்டு வருகிறது. அப்படி ஒரு தேடல் தான் இந்த படத்தின் கதைக்கரு. பல ஆச்சரியங்கள், சில குழப்பங்கள் இருந்தாலும், தனது முதல் படத்தை புதிய முயற்சியாகவும், சவால் மிகுந்ததாகவும் இயக்கியிருக்கும் இயக்குநர் டி.ராஜவேலை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.

மொத்தத்தில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ நம் புத்திக்கு வேலை கொடுக்கும்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *