கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் இயற்கை எய்தினார்!

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் இன்று மாலை 5.45 மணியளவில் வயது மூப்பு காரணமாக சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். 1980 ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. திரையிசைப் பாடல்களில் இவர் எழுதிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…’ பாடலும் ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை…’ பாடலும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை. குறிப்பாக இவர் எழுதிய ‘நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ என்ற பாடல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த போது, இலங்கை வானொலியில் அன்றைய தினம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட பாடலாகும்.

பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாது நாட்டிய நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் ஐந்து முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு. அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ‘அறிஞர் அண்ணா ஆட்சிதானிது’ என்று இவர் எழுதிய தனியிசை பாடல் பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவும், கூட்டம் நிறைவுபெறும் போதும் ஒலிபரப்பப்பட்டது.

கலைஞர் கருணாநிதிக்காக ‘கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும் ‘ என்ற பாடலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பாடலும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் முதன் முதலாக பாடிய இரண்டு அம்மன் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் பூவையார். மேலும், இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பல நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *