
நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’
கதாநாயகன் நகுலை மாற்றியது ஏன்? -‘ தி டார்க் ஹெவன்: இயக்குநர் பாலாஜி பதில்!
மக்களிடம் பரவியுள்ள தொன்மங்கள், இதிகாசங்கள்,பழைய மரபுக் கதைகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரைப்படங்கள் வருவது ஹாலிவுட்டில் வழக்கமாகிவிட்ட ஒன்று. இப்போது இது இந்தியாவிலும் தொடங்கி தொடர்ந்து வருகிறது. மக்களிடம் நிலவும் நம்பிக்கைகள் திரை வடிவம் பெறும் போது அப்படைப்பு வழக்கமான வணிக முயற்சிகளில் இருந்து மாறுபட்டு வேறு ஒரு தோற்றம் கொள்கிறது.இவ்வகையில் வெளிவந்த காந்தாரா, கல்கி போன்ற படங்களின் வெற்றி மக்களின் ஆதரவுக்கு சாட்சியமாகியுள்ளது.
எனவே திரைத் துறையில் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் .அப்படி தமிழ்நாட்டு நாட்டார் கதையை மையமாக வைத்து ‘தி டார்க் ஹெவன்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.
இப்படத்தையை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி.இயக்கி வருகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும்போது,
“என் முதல் படம் ‘டி3 ‘ ஐ நானே இயக்கித் தயாரித்தேன். இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தையும் நானே இயக்கித் தயாரிக்கிறேன்.
முதல் படத்தைப் போல இதிலும் ஆங்கிலத் தலைப்பு உள்ளதே என்று சிலர் கேட்கக்கூடும். இதற்குப் பொருத்தமாகத் தோன்றியதால் வைத்திருக்கிறேன். மற்றபடி ஆங்கிலத்தில் தான் வைக்க வேண்டும் என்கிற எந்த உள்நோக்கமும் கிடையாது.இது ஒரு க்ரைம் திரில்லர் ரகத்திலான படமாக உருவாகி வருகிறது.அதற்குப் பொருத்தமாக இருக்கும் என்றுதான் இந்தத் தலைப்பை வைத்தேன். அதை ஒரு நாட்டார் கதையை மையப்படுத்தி உருவாக்கிவருகிறேன்.
இது போலீஸ் பற்றிய கதையாக இருக்கிறது.
இந்தப் படம் ஒரு கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியதாக உள்ளது.அந்த ஊரில் சில ஆண்கள் குறிப்பிட்ட சீரான கால இடைவெளியில் அதாவது ஏழாண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் இறக்கிறார்கள். இந்த மரணத்திற்குப் பின்னால் உள்ள ரகசியங்களை காவல்துறையைச் சேர்ந்த கதாநாயகன் எப்படி வெளிக்கொண்டு வருகிறார் என்று கதை செல்கிறது.
போலீஸ் என்கிற போது அதுவும் க்ரைம் தில்லர் என்கிற போது கதையை சுவாரசியமாகவும் அடுத்து என்ன என்று யோசிக்கும் வகையிலும் பார்வையாளர்களின் கவனத்தைக் கட்டுக்குள் வைக்கும் படியான பரபரப்பைப் பராமரிக்க முடியும்.ஆக்சன் காட்சிகளுக்கும் இடம் கொடுக்க முடியும்.அந்த பாணி வணிகப்படத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.அடுத்தது என்ன என்கிற ஆவலைத் தூண்டும் இவ்வகைப் படங்கள் எனக்குத் தனிப்பட்ட முறையிலும் பிடிக்கும். எனவே அப்படிப்பட்ட ஒரு படமாக இதை இயக்கி வருகிறேன். கோதை என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்.
படம் முழுக்க மலைப்பகுதிகளில் நடப்பதால் குறைந்தபட்ச வசதிகள் கூட இல்லாமல் மூன்று நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்த வேண்டும். .ஏற்காட்டில் உள்ள ஒரு பழைய சர்ச்சில் படமெடுத்திருக்கிறோம்.மேல்கரை என்றோர் மலைப்பகுதி இருக்கிறது. அங்கே கார் எதுவும் போகாது. 3 கிமீ போல நடந்துதான் செல்ல வேண்டும். அங்கே சிரமப்பட்டு படம் எடுத்தோம்.படப்பிடிப்பிடங்கள் எல்லாமே சவாலாகத்தான் இருந்தன.
இந்தப் படத்தில் நாயகனாக நகுல் தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் படபிடிப்பும் நடந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் தொடர முடியவில்லை.
நான் பதினாறு மணி நேரம் உழைக்கக் கூடியவன் .என் வேகத்திற்கு அவரால் வர முடியவில்லை. ஒரு படப்பிடிப்பில் கதாநாயகன் கட் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் அவர் சொன்னார் .இப்படி பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டன. நானே தயாரிப்பாளராக இருப்பதால் ஒரு கட்டத்தில் நான் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். எனவே 60% படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படத்துக்கு நான் கதாநாயகனை மாற்றினேன். அது ஒரு கண்மூடித்தனமான முடிவாக இருக்கலாம்.என் பட்ஜெட் எனக்கு அச்சமூட்டியது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை.மாற்ற வேண்டிய நிலைக்கு ஆளானேன். அதன் பிறகுதான் ‘ராஜா ராணி 2’-ல் நடித்த சித்துவை கதாநாயகன் ஆக்கி படப்பிடிப்பு நடந்து வருகிறது.என்னைப் பொறுத்தவரை கதாநாயகன் மாற்றியதைப் பற்றி நான் நினைப்பது ,அந்த இளம்பாரி என்கிற கதாபாத்திரம் எப்படி வரவேண்டும் என்பதைப் பற்றித்தான் உள்ளது.
அதில் யார் நடித்தாலும் எப்படிப் பொருந்துவார்கள் என்பதை மட்டும் நான் பார்க்கிறேன்.
யார் நடித்தாலும் அந்தப் பாத்திரத்திற்கு எவ்வளவு நியாயம் செய்கிறார்கள் என்பதை மட்டும் பார்க்கிறேன்.
எனவே நாயகனை மாற்றியதால் எனக்கு எந்தப் பின்னடையும் கிடையாது.
பிக் பாஸ் தர்ஷிகா கதாநாயகியாக நடிக்கிறார்.வேலராமமூர்த்தி, ரித்திகா, அருள் ஜோதி, பிரதீப், ஜெயகுமார் ஜானகிராமன்,
அஜித் கோஷி போன்றவர்களும் நடிக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடிக்கிறார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம்.இசையமைப்பாளராக :உடன்பால்’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிகிறார்.
இன்னும் பத்து நாட்களே படப்பிடிப்பு பாக்கி உள்ளது. டிசம்பரில் வெளியிடும் வேகத்தில் பணியாற்றி வருகிறோம்” என்கிறார்.