
’காந்தா’ திரைப்பட விமர்சனம்
🎬 நடிப்பு:
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், ரவீந்திர விஜய், ஆடுகளம் நரேன், வையாபுரி, காயத்ரி சங்கர், பிரிஜேஷ் நாகேஷ், பக்ஸ், பரதன், ஜாவா சுந்தரேசன்.
🎥 இயக்கம்: செல்வமணி செல்வராஜ்
🎼 இசை: ஜானு சந்தர்
🏢 தயாரிப்பு: Spirit Media, Wayfarer Films
— ராணா டக்குபதி, துல்கர் சல்மான், பிரஷாந்த் பொட்ட்லுரி,ஜோம் வர்கீஸ்
1950களில், ஒருகாலத்தில் பெரிய இயக்குநராக இருந்த ஐயா (சமுத்திரக்கனி), தன் கனவுப் படம் ‘சாந்தா’வை தனது சிஷ்யரும் முன்னணி நடிகருமான டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து இயக்க தொடங்குகிறார். ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட அகங்கார மோதலால், படம் பாதியிலேயே நின்றுவிடுகிறது.
அதே நேரத்தில், நஷ்டத்தில் சிக்கிய மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளர் மார்ட்டின் (ரவீந்திர விஜய்), இந்தப் படத்தை மீண்டும் தொடங்க முயற்சி செய்து, இருவரையும் உடன்பட வைக்கிறார்.
இதற்கிடையில், மகாதேவனின் வாழ்க்கையை உடைக்க ஐயா புதிய நாயகியான குமாரியை (பாக்யஸ்ரீ) படத்தில் அறிமுகப்படுத்தி, மறைமுகமாக அகங்கார விளையாட்டு ஆரம்பிக்கிறார்.
இந்த மோதலின் காரணம் என்ன?
‘சாந்தா’ முடிவடைந்ததா?
ஐயா – மகாதேவன் மனப்போர் எங்கே முடிந்தது?
இவற்றுக்கு பதிலாக சொல்லும் நாடகம்தான் செல்வமணி செல்வராஜ் இயக்கிய ‘காந்தா’.
பழம்பெரும் நடிகர் கதாபாத்திரத்தில் “நடிப்பு சக்கரவர்த்தி” எனப்படும் வேடத்தை துல்கர் சல்மான் மிக நம்பிக்கையோடு ஏற்று நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அந்த பட்டத்துக்கு ஏற்ப நடித்து, கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார் என்று சொல்லலாம்.
அவரின் தோற்றம், சிகை அலங்காரம், முகபாவங்கள்—இவை அனைத்தும் சேர்ந்து அந்த காலத்திய ஒரு பெரிய நடிகரை நமக்குப் முன் நின்றது போல காட்டுகிறது.
ஏமாற்றம், கோபம், அவமானம், ஏக்கம் போன்ற அனைத்து உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தி, பார்வையாளர்களை செம்மையாக ஈர்க்கிறார்.
நாடக வகை கதை இருந்தாலும், துல்கர் சல்மானின் தீவிரமான நடிப்பே படத்தை முழுமையாக தாங்கி, பார்வையாளர்கள் அதை ஒரு கொண்டாட்டமாக அனுபவிக்க காரணமாகிறது.
இந்த படத்தில் அவர் காட்டிய திறமையைப் பார்த்தால்—
துல்கர் சல்மான் தேசிய விருது பெறுவது நிச்சயம் என்றே தோன்றுகிறது.
பழம்பெரும் இயக்குநராக வந்த சமுத்திரக்கனி, தனது நடிப்பை ஒரு புதிய உயரத்துக்கு கொண்டு சென்று விட்டார். நாயகனுக்கு சமமான நிறையும், காட்சியிலே நேருக்கு நேர் நின்று போட்டியிடும் திறமையும் காட்டி, பல தருணங்களில் திரையையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
நாயகியாக வந்த பாக்யஸ்ரீ, அந்தக் காலத்து நடிகைகளின் முக அழகும், மென்மையான நடையும் கலந்த ஒரு பரவசமான தோற்றத்துடன் திரையில் மின்னுகிறார்.
அளவான பேச்சு, நெஜமான அப்பாவித்தனம், தேவையான இடத்தில் சரியான உணர்ச்சி—இவைகளை எல்லாம் சரியாக சமநிலைப்படுத்தி, தன் கதாபாத்திரத்துக்கு முழு நீதி செய்து விடுகிறார்.
அவரின் நடிப்பு, அந்தக் காலத்தின் இயல்பையும், கதையின் உணர்வையும் அழகாக உயிர்ப்பிக்கிறது.
காவல்துறைu அதிகாரியாக நடிக்கும் ராணா டக்குபதி, கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளில் அது ஓவரா தோன்றினாலும், அவரது கூர்மையான, அதிரடியான நடிப்பு பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய மாற்றமாகவும், புதுசாகவும் உணரப்படுகிறது
உதவி இயக்குநராக நடித்த கஜேஷ் நாகேஷ், தனது “அண்ணா… அண்ணா…” அழைப்பால் பார்வையாளர்களின் கவனத்தை உடனே கைப்பற்றுகிறார்.
துல்கரின் மனைவியாக வரும் காயத்ரி, மாமனராக நிழல்கள் ரவி, ஸ்டுடியோ உரிமையாளராக ரவீந்திர விஜய், காவல்துறை உயர் அதிகாரி வேடத்தில் ஆடுகளம் நரேன், வையாபுரி, பக்ஸ்—சிறிய வேடங்களாக இருந்தாலும், கதைக்கு அவசியமானவர்களாக திகழ்ந்து, பார்வையாளர்களின் நினைவில் நன்றாக பதிந்து விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் ஜானு சந்தர், இனிமையான பாடல்களும் மென்மையான பின்னணி இசையும்u மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை இசையின் மூலம் தெளிவாக பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் டானி சஞ்செஸ் லோபெஸ், அந்த காலத்து சினிமா உலகத்துக்கே நேரடியாக அழைத்துச் செல்லும் அளவுக்கு அழகாக காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். சென்னையின் பழைய செட் வடிவமைப்பு, நடிகர்களின் முகபாவங்கள்—எல்லாம் மிகத் துல்லியமாக படமாக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், படத்தொகுப்பாளர் ல்லேவெல்லின் அந்தோணி கொன்சால்வேஸ் காட்சிகளை மிக சீராக இணைத்து, ஓட்டம் குலையாமல் படம் சுவாரஸ்யமாக போகும் வகையில் அமைத்திருக்கிறார்.
கலை இயக்குநர் ராமலிங்கத்தின் கலை இயக்கமும் பெரும் பலமாக உள்ளது. அக்காலத்து படப்பிடிப்பு சூழலை அப்படியே உருவாக்கியிருப்பதால், பார்வையாளர்கள் அந்த காலத்துக்குள் நுழைந்த உணர்வை பெறுகிறார்கள்.
செல்வமணி செல்வராஜ், ஒரு பழம்பெரும் நடிகரை மையமாக வைத்து உருவாக்கிய கற்பனை கதையை நன்றாக சொல்லியிருக்கிறார். இயக்குநர்–நாயகன்–நாயகி மூணு பேரை வைத்து முதல் பாதியை ஒரு ரசிக்கத்தக்க நாடகமாக நகர்த்துகிறார்.
இரண்டாம் பாதியில் கதை புதிய பாதையில் திரும்பி சற்று தொய்வு காட்டினாலும், நடிகர்களின் ஆழமான நடிப்பு அதை மீட்டெடுக்கிறது. குறிப்பாக துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ மூவரும் படத்தின் உணர்ச்சியை தூக்கி நிறுத்துறாங்க.
படம் சற்று நீளமாக இருந்தாலும், மேக்கிங், டெக்னிக், கதை சொல்லல் எல்லாம் சேர்ந்து அந்த நீளத்தையே கவனிக்காமல் விடுகிறது.
மொத்தத்தில் ‘காந்தா’ – ஒரு புதுசான சினிமா அனுபவம்.
ரேட்டிங்: ⭐3.9/5