
’மாண்புமிகு பறை’ திரைப்பட விமர்சனம்
லியோ சிவகுமார், காயத்ரி ரேமா, அரியன், காஜராஜ், ராமா, அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார் பொன்சுரேஷ், அரங்க குணசீலன்
இயக்கம் :
எஸ். விஜய் சுகுமார்
இசை :
தேவா
தயாரிப்பு :
சியா புரொடக்ஷன்ஸ்
பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும் ஆரியனும், ‘ஆதிபறை’ என்ற இசைக் குழுவை உருவாக்கி, அழிந்து வரும் பறை இசைக்கலைக்கு உயிரூட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இசையைத் தங்களுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளாமல், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்து, ஒரு கலையாகவும் ஒரு அடையாளமாகவும் அதை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறார்கள்.
பறை இசையின் பெருமையை உலகறியச் செய்யும் அவர்களது முயற்சிக்கு, ஆதரவு மட்டுமல்ல எதிர்ப்பும் எதிர்கொள்கிறது. பறை இசையை மட்டுமல்ல, அந்தக் கலையை தாங்கி நிற்கும் இசைக்கலைஞர்களையே இழிவாகப் பார்க்கும் சிலரால், அவர்களின் பாதை தடைகளால் நிரம்புகிறது.
இந்த சமூகச் சவால்களை கடந்து, அவமதிப்புகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி, லியோவும் ஆரியனும் தங்கள் கனவை நிறைவேற்றினார்களா? பறை இசைக்கு உரிய மரியாதையை அவர்கள் பெற்றார்களா? என்பதே ‘மாண்புமிகு பறை’ சொல்லும் மையக் கதை.
நாயகனாக லியோ சிவகுமார், வெற்றி என்ற கதாபாத்திரத்தை வெளிப்படுத்த முயன்றிருந்தாலும், பறை இசைக்கலைஞர் என்ற அடையாளத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறார். குறிப்பாக பறை வாசிக்கும் காட்சிகளில், அந்த இசைக்குரிய உடல் மொழியும் உணர்ச்சி அசைவுகளும் இல்லாதது, அந்தக் கதாபாத்திரத்தின் வலிமையை குறைக்கிறது.
அவரது நண்பராக வரும் ஆரியன், ஹீரோவுக்கு இணையான அளவில் உணர்ச்சிப்பூர்வமான வசனங்களையும் ஆற்றலான நடனத்தையும் வெளிப்படுத்துகிறார். இருந்தாலும், பறை இசைக்கலைஞர் என்ற தனித்த அடையாளம் அவரது நடிப்பில் தெளிவாக பதியாமல் போகிறது.
நாயகியாக காயத்ரி ரெமா, உணர்ச்சிகளை நம்பகமாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்திற்கு உறுதியான ஆதாரமாக நிற்கிறார். அவரது நடிப்பு கதைக்கு தேவையான மென்மையும் ஆழமும் சேர்க்கிறது.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் உள்ளிட்ட துணை வேடங்களில் நடித்தவர்கள், இயக்குநரின் வழிகாட்டலுக்கு ஏற்ப தங்கள் பங்களிப்பை வழங்கி கதையை முன்னெடுக்க உதவுகின்றனர்.
தேவா இசையில் அமைந்த பாடல்கள் கேட்க உற்சாகம் தருவதாக இருந்தாலும், பறை இசையின் ஆழமும் வலிமையும் முழுமையாக வெளிப்படும் அளவிற்கு இல்லை. பின்னணி இசை அளவிலேயே அது நிற்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர். கொளஞ்சி குமார், கிராமத்து சூழலின் இயற்கை அழகை கண் முன்னே கொண்டு வரும் விதத்தில் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சி. எஸ். பிரேம்குமார், காட்சிகளை ஒழுங்காக அடுக்கினாலும், படத்தின் வேகத்துக்கும் சுவாரஸ்யத்திற்கும் கூடுதல் உயிர் கொடுக்காத வகையிலேயே தொகுப்பு அமைந்திருக்கிறது.
எழுதி இயக்கியுள்ள எஸ். விஜய் சுகுமார், பறை இசையின் மரபுச் சிறப்பையும், அந்தக் கலையை தாங்கி நிற்கும் கலைஞர்கள் சமூகத்தில் எவ்வாறு அவமதிக்கப்படுகிறார்கள் என்பதையும் திரையில் பதிய முயற்சித்திருக்கிறார். ஆனால் கதையின் பெரும்பகுதி சாதி பிரச்சினைகள் மற்றும் ஆணவக் கொலை தொடர்பான உரையாடல்களில் அதிகமாகச் சுழல்வதால், பறை இசை உருவாக்க வேண்டிய தாக்கம் பார்வையாளர்களிடம் ஆழமாகச் சென்றடையாமல் போகிறது.
பறை இசை மையமாக இருக்க வேண்டிய இடங்களில் கூட, அந்தக் கலைக்கான உணர்ச்சி முழுமையாக உருவாகாதது படத்தின் முக்கியமான குறைபாடாக தெரிகிறது.
மொத்தத்தில், ‘மாண்புமிகு பறை’ சொல்ல விரும்பும் கருத்து வலுவாக இருந்தாலும், அதை உணர வைக்கும் அளவிற்கு ஒலிக்காத ஒரு படமாகவே முடிகிறது—வெறும் சத்தமாக.
ரேட்டிங் : 2.5 / 5