
🎬 ‘தலைவர் தம்பி தலைமையில்’ – கதை, கலகலப்பும் கொண்டாட்டமும்!
நடிப்பு: ஜீவா, பிரார்த்தனா நாதன், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோர்
இயக்கம்: நிதிஷ் சஹதேவ்
இசை: விஷ்ணு விஜய்
தயாரிப்பு: கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் – கண்ணன் ரவி
பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஜீவா, ஊர் மக்களின் வாக்குகளுக்காக மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் முன்னிலையில் நிற்பவராக இருக்கிறார். வீட்டு விசேஷமாக இருந்தாலும், துக்க நிகழ்வாக இருந்தாலும், அனைத்தையும் தலைமையேற்று நடத்துவது அவரது வழக்கம்.
இந்நிலையில், இளவரசுவின் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஜீவா ஈடுபட்டு கொண்டிருக்கும் போது, அவரது பக்கத்து வீட்டுக்காரரான தம்பி ராமையாவின் நோய்வாய்ப்பட்ட தந்தை உயிரிழக்கிறார். இளவரசுக்கும் தம்பி ராமையாவுக்கும் ஏற்கனவே பகை இருப்பதால், மகள் திருமணம் நடைபெறும் அதே நேரத்தில் தான் தந்தையின் இறுதி ஊர்வலமும் நடக்க வேண்டும் என்று தம்பி ராமையா பிடிவாதம் பிடிக்கிறார். அதேபோல், தன் மகள் திருமணம் தன் வீட்டில்தான் நடைபெற வேண்டும் என்று இளவரசும் உறுதியாக இருக்கிறார்.
இந்த இரண்டு குடும்பங்களுக்கிடையேயான பிரச்சனையை சமாதானப்படுத்தி, திருமணமும் இறுதி ஊர்வலமும் எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறச் செய்வது பஞ்சாயத்து தலைவர் ஜீவாவின் பொறுப்பாகிறது. அந்த பொறுப்பில் ஜீவா வெற்றி பெற்றாரா என்பதே ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் கதை.
ஜீவா – ஒரு பஞ்சாயத்து தலைவர், சிறுவர்களும் பெரியவர்களும் அன்பும் நட்பும் கொண்டவர். கதையின் எல்லா பொறுப்புகளையும் தன் தோளில் சுமந்து, முதல் காட்சியிலிருந்தே முழு படத்தை கைப்பற்றுகிறார். எந்த அலட்டலும் இல்லாத இயல்பான நடிப்பு, அவரை ஒரு தலைவராக மட்டுமல்ல, மக்கள் மனதில் நீண்டநாள் நிற்கும் பிரமுகனாக வைக்கிறது.
‘பார்க்கிங்’ படத்தில் மகளாக கவனம் ஈர்த்த பிரார்த்தனா நாதன், இங்கு மணமகள் கதாபாத்திரத்தில் எளிமையான அழகு, மென்மையான நடிப்பு மூலம் பார்வையாளர்களை மனதிற்குள் விழுங்குகிறார்.
இளவரசு மற்றும் தம்பி ராமையா, இயல்பான நடிப்பால் திரைக்கதைக்கு உயிர் ஊட்டுகிறார்கள்; குறிப்பாக தம்பி ராமையாவின் டைமிங் காமெடி காட்சிகள், சிரிப்பின் வெள்ளத்தைக் கொண்டு வருகிறது.
ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், ஜெய்வந்த், ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், சரத், சாவித்ரி ஆகியோர் கூட கதையின் ஓட்டத்தை முழுமையாக கலகலப்பாக வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பப்ளு அஜு
கலர்புல்லாக காட்சிகளை காட்சிப்படுத்தி, மலையாளத் திரைப்பாணியின் இயல்பான அழகை நினைவூட்டுகிறார். ஒளி, நிறங்கள் மற்றும் காட்சியின் இயல்பு படத்திற்கு தனி மெருகு சேர்க்கின்றன.
இசை – விஷ்ணு விஜய்
பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன, பின்னணி இசை காட்சிகளுக்கு வலுவூட்டும் விதத்தில் கதை சொல்லலுக்கு உயிர் ஊட்டுகிறது.
படத்தொகுப்பு – அர்ஜுனே பாபு
ஒரே லொக்கேஷனில் கதை நகர்ந்தாலும், வேகமும் சுவாரஸ்யமும் வழியிழக்காமல் காட்சிகளை நகர்த்தியுள்ளார். இயக்குநர் சொல்ல வந்த கருத்து நேர்த்தியுடன் பார்வையாளர்களிடம் சென்று சேர்கிறது.
திரைக்கதை – சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ், அனுராஜ்.ஓ.பி
எளிமையான கதைக்கருவுக்கு வலிமையான முதுகெலும்பாக அமைந்திருக்கிறது. நகைச்சுவை நிறைந்தாலும், சில விஷயங்கள் சிந்திக்க வைக்கிறது.
இயக்குநர் – நித்திஷ் சகாதேவ்
எதார்த்தமான வாழ்க்கை சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்லி ரசிக்க வைக்கிறார். மலையாளத் திரைப்பாணியில் தமிழ் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளார்.
💥 மொத்தத்தில் – ‘தலைவர் தம்பி தலைமையில்’
குழந்தைகளும் பெரியவர்களும் ஒரே நேரத்தில் ரசிக்கக்கூடிய, கலகலப்பான, எமோஷனும் நகைச்சுவையும் நிறைந்த குடும்பம் பக்கா படம்!
⭐ ரேட்டிங் : 4 / 5