ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் ‘ப்ராமிஸ்’!

எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’

‘எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது ‘சத்திய சோதனை’ என்கிற சுயசரிதையைப் படியுங்கள்’ என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’.

அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் .
ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

நாயகியாக நதியா சோமு நடித்துள்ளார். மேலும்
சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல்,ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.என் .நாகராஜ் பெருமையுடன் வழங்க
சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் சத்தியத்தின் சோதனையை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்கொண்டிருப்பார்கள். அப்படிப் படத்தில் கதாநாயகன் எதிர் கொள்ளும் தருணங்கள் படம் பார்ப்பவர்களை சுவாரஸ்ய ஆட்டத்திற்குள் இறங்கி ரசிக்க வைக்கும்.

படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர் சேரனும் ஒளிப்பதிவாளர் நடிகர் நட்டியும் வெளியிட்டு பரவலாகப் பேசப்பட்டது. படத்தின் டிரைலர் ஏபி இன்டர்நேஷனல் தளத்தில் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுப் படத்திற்குப் பரவலான அறிமுகமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலூர் ,ஓசூர் ,கிருஷ்ணகிரி போன்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

படத்திற்கு வாய்ஸ் ஓவர் எனப்படும் பின்னணிக் குரல் கொடுக்க வந்த தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கர் படத்தின் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டுப் பாராட்டி இருக்கிறார்.அவரது பாராட்டால் உற்சாகமடைந்திருக்கிறது படக்குழு. குடும்பத்தினருடன் திரையரங்குகளில் வந்து பார்க்கும் படியாக நெகிழ வைக்கும் காட்சிகளோடு உருவாகி இருக்கிற இந்த ‘ப்ராமிஸ்’ ,ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ் வெளியீடாக ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *