பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.

விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது ‘பத்தா’ படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விழாவில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,

“‘பத்தா’ திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படம் வாழ்க்கையைப் பார்த்து, வாழ்க்கையிலிருந்து பாடம் கற்று, ஒவ்வொரு நொடியையும் கவனித்து தெளிந்து வரக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு விழிப்புணர்வாக இருக்கும். இந்த உலகம் எப்போதுமே சிக்கலானதுதான். அந்த சிக்கல்களை அறிவாலும் அன்பாலும் புரிந்துகொண்டு கடந்து வரக்கூடியவர்களால்தான் இந்த உலகம் இனிமையானதாக மாறும். அந்த விஷயத்தை ‘பத்தா’ அழகாகப் பேசுகிறது. இந்தப் படம் என்ன என்பதை நான் தெரிந்தவன் என்பதால் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

பாலாஜி அண்ணாவுக்கும் எனக்கும் நேற்று வந்த உறவு கிடையாது. நான் இன்று ஒரு கவிஞனாகவும் பாடலாசிரியராகவும் பலருக்கும் தெரிகிறேன். ஆனால் நான் இப்படியெல்லாம் இருப்பதற்கு முன்பு இருந்த கார்த்திக்கை பாலாஜி அண்ணா பார்த்திருக்கிறார். ஒரு காலத்தில் வாழ்க்கையில் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன். அப்போது என்னை அலுவலகத்திலேயே தங்க வைத்து, சாப்பாடு கொடுத்து, ஓய்வெடுக்க வைத்து, மீண்டும் எழுத வைத்தவர் அவர். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திலும் அப்படித்தான் என்னை தன்னுடன் வைத்துக்கொண்டு வேலை செய்ய வைத்தார். நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதை தெரிந்தும் என்னை கைவிடாமல் பார்த்துக்கொண்டவர் பாலாஜி அண்ணா.

பாலாஜி தரணிதரன் கலையை கண்மூடித்தனமாக நேசிக்கும் மனிதர். கலை அவருக்கு தரக்கூடிய வசதிகள் எதுவும் தேவையில்லை; கலை தரக்கூடிய மன அமைதியும் அந்த உயர்ந்த மன மகிழ்ச்சியும் மட்டுமே அவருக்கு போதும். அவருக்காக நான் எதையும் செய்வேன். இந்தப் படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நூறு ‘மகளே’ பாடல்கள்கூட எழுதுவேன். இந்த மேடையில் நின்று பேசும்போது, இந்த வாழ்க்கையில் அன்பைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை என்பது எனக்கு இன்னும் தெளிவாகப் புரிகிறது.” நன்றி

பாடலாசிரியர் தமிழ் பேசியதாவது..,

“என்னுடைய முதல் ஆடியோ லாஞ்ச் இது. முதல் முறையாக சார் கூட இந்த மேடையைப் பகிர்ந்துகொள்வது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்பை கொடுத்த Think Music குழுவினருக்கும், சந்தோஷ் அண்ணா, விக்னேஷ் அண்ணா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பத்தா’ படத்துக்கு லிரிக் எழுதுவதற்கு முன்பு நான் பெரும்பாலும் இன்டி பாடல்கள் போன்றவற்றைத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் படத்துக்காக சற்று வித்தியாசமான முறையில், இன்னும் கவிதையாக எழுத கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இது எனக்கு ஒரு சிறிய கற்றல் பயணமாக இருந்தது. இதில் இயக்குநர் சார் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தார். எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எந்த நேரத்தில் அழைத்தாலும் போனை எடுத்து சரியான உள்ளீடுகளையும் வழிகாட்டுதலையும் கொடுத்து எனக்கு முழு ஆதரவாக இருந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அட்லி சாருக்கும் நன்றி.

பாடலாசிரியர் கானா ஜானி பேசியதாவது..,

“எனக்கு இது முதல் முறையாக இருப்பதால் ரொம்பவே எக்ஸைட்மென்ட்டாக இருக்கிறது. இந்தப் படத்தில் நான் ஒரு வித்தியாசமான பாடலை எழுதியிருக்கிறேன். இதுவரை நான் எழுதிய சில பாடல்கள் மக்களிடம் சென்றிருக்கின்றன. சில பாடல்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் என்னைத் தேடி கண்டுபிடித்து இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்காக இயக்குநர் சாருக்கு ரொம்ப நன்றி. என்ன பேசுவது என்று தெரியவில்லை; இந்த வாய்ப்பு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சாய் அப்யங்கர் எனக்கு முதன்முறையாக போன் செய்து ஒரு பாடல் பண்ணலாம் என்று கேட்டார். முதலில் அவர் டியூன் அனுப்பினார். அது யாருக்கான படம், யார் நடிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அந்த டியூனை கேட்ட பிறகுதான் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என்று தெரிந்தது. விஜய் சேதுபதியின் ரசிகன் என்பதால் அந்த டியூனை கேட்டவுடனே எனக்குள் ஒரு உற்சாகம் வந்துவிட்டது. சாய் சொன்ன விதமும் வித்தியாசமாக இருந்தது. ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு, அதைச் சுற்றி வேறொரு மாதிரியான பாடலை உருவாக்கலாம் என்று அவர் சொன்னார். அதன்பிறகு பாடலை எழுதி முடித்தேன்.

பாடல் தயாரான பிறகு அனைவரும் சேர்ந்து பிராக்டிஸ் செய்தோம். படப்பிடிப்பிலும் எல்லோரும் சிறப்பாக செய்தார்கள். குறிப்பாக முதல் முறையாக படப்பிடிப்பில் இருந்ததால் எனக்கும் நிறைய பதற்றம் இருந்தது. ஒரு காட்சிக்கே பல டேக்குகள் சென்றன. அதற்காக சார் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் அந்த அனுபவம் எனக்கு ரொம்பவே புதிதாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. இதற்கு மேல் நான் அதிகமாகப் பேசவில்லை; இனிமேல் என்னுடைய பாடல் வரிகள்தான் பேசும்.”

கலை இயக்குநர் முத்துராஜ் பேசியதாவது…

“‘பத்தா’ படத்தில் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நிறைய பெரிய படங்கள் பண்ணலாம். ஆனால் நல்ல படம் பண்ணணும் என்றால் நல்ல கதையைத் தேர்ந்தெடுக்க நடிகரும் தயாரிப்பாளரும் ஒத்துக்கணும். அப்படிப்பட்ட நல்ல கதையைப் பண்ணுவதற்கு ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி சார், தயாரிப்பாளர்கள் அட்லி, பிரியா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. பாலாஜியை எனக்கு ரொம்ப நாளாகத் தெரியும். நல்ல கதை பண்ண வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் எப்போதுமே இருந்திருக்கிறது. நிறைய பேரிடம் நல்ல கதைகள் இருக்கின்றன; ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பாலாஜி இந்தப் படத்தை உருவாக்க முயற்சி செய்து, அதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி.

“‘பத்தா’ படத்துக்காக 80-களின் சென்னையை ஒரு தனி உலகமாக உருவாக்கினோம். நான் நிறைய வெளிநாட்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். அந்த படங்களின் உருவாக்கத்தைப் பார்த்து, நம்ம ஊரிலும் இப்படிப்பட்ட ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். பாலாஜியும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, இதை இன்னும் தனித்துவமாகவும், ஒரு மொத்தமான உலகமாகவும் உருவாக்க வேண்டும் என்று சொன்னார். அதற்காக நிறைய props-களை வடிவமைத்தோம். டிரெய்லரில் நீங்கள் பார்த்திருக்கும் boxing விளையாட்டுக்கான பொருட்கள் உட்பட பல விஷயங்களை மூன்று மாதங்களாக உழைத்து உருவாக்கினோம். அந்த காலத்தில் சாதாரணமாகக் கிடைத்த பல பொருட்கள் இப்போது கிடைப்பதில்லை. அதனால் ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும் தனியாக வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் படம் பார்க்கும்போது அந்தச் சின்னச் சின்ன பொருட்களுக்குப் பின்னால் இவ்வளவு வேலை இருக்கிறதே என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

“செல்வகுமாரின் முந்தைய படங்களைப் பார்த்து நான் அவரை ரொம்பவே பாராட்டியிருக்கிறேன். இந்தப் படத்திலும் அவர் ரொம்ப நன்றாகப் பண்ணியிருக்கிறார். ஒவ்வொருவருடைய வேலையும் அவர்களுடைய வழக்கமான பாணியாக இல்லாமல், இந்தக் கதைக்கு என்ன தேவை என்பதை சரியாகப் புரிந்துகொண்டு வேலை செய்திருக்கிறார்கள். கலை பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை, அவர் கலக்கிவிட்டார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்திலும் அவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். எல்லாருமே மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கே அழுகை வந்தது. அந்த அளவுக்கு இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.”

எடிட்டர் கலைவாணன் பேசியதாவது…

“கமர்ஷியல் படங்கள் சில செய்து ஒரு இடைவெளி விட்டிருந்தேன். அதற்குப் பிறகு ‘பத்தா’ படம் வந்தபோது எனக்கு ஒரு பெரிய மாற்றம் இருந்தது. இந்தப் படத்தை முந்தைய படங்களைப் போல அணுக முடியாது. ஒவ்வொரு காட்சியையும் நிறுத்தி, எந்த இடத்தில் வெட்ட வேண்டும், எங்கே ஷாட் மாற வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டியிருந்தது. அந்த விதத்தில் பாலாஜி சார் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தார். ஆரம்பத்தில் ஒரு கமர்ஷியல் எடிட்டர் வருவதில் அவருக்கு கொஞ்சம் தயக்கம் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய திருப்திக்காகவே வேலை செய்திருக்கிறேன். இப்போது அவர் திருப்தியாக இருக்கிறார் என்று நம்புகிறேன். ரொம்ப திருப்தியாக இருக்கிறார்!”

“சாய் அபயங்கருடன் இது எனக்கு மூன்றாவது படம். இனிமேலும் அவருடன் இன்னும் மூன்று படங்கள் பணியாற்றுகிறேன். இந்தப் படத்துக்கு சாய் அப்யங்கரின் இசை ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி என்றால், அதை அழகாகக் காட்சிப்படுத்தியவர் நம்முடைய செல்வராஜ். அவருடைய பணியும் ரொம்ப சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

“அட்லி அண்ணா என்று சொன்னாலே எனக்குள் ஒரு உணர்வு வருகிறது. நான் அசிஸ்டன்ட் எடிட்டராக இருந்த காலத்தில் ரூபன் சாருடன் ஆறு வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அதில் நான்கு வருடங்கள் அட்லி அண்ணாவுடன் ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட அவர் இயக்கிய தமிழ்ப் படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அந்த அசிஸ்டன்ட் எடிட்டர் பொறுப்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் அவருடன் தொடர்ந்து பணியாற்றினேன். ரூபன் சார் எனக்கு ஒரு பள்ளி என்றால், அட்லி அண்ணா எனக்கு ஒரு வகுப்பு ஆசிரியர் மாதிரி. இன்று நான் எங்கு சென்று என்னுடைய புரொஃபைலைக் காட்டினாலும், ‘எந்தப் படங்களில் வேலை செய்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டால், அட்லி அண்ணாவின் படங்கள் எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு மாதிரி. என்னுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்கள் அவருடன் இருந்திருக்கின்றன. அதற்கு நன்றி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. லவ் யூ அண்ணா!”

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது…

“ அட்லி சார் இந்தப்படம் பற்றி சொன்ன போது முதலில் பாலாஜி சாருக்கு போன் செய்து, ‘உங்க படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான்  பார்த்த சிறந்த படங்களில் ஒன்றுன்னு சொன்னேன்’. நேரில் வந்து பேசலாம் என்று சொல்லி மூன்று நாட்கள் தொடர்ந்து மீட்டிங் நடந்தது. அதன்பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு ‘ராஜா ராணி’ படத்தில் அசிஸ்டன்ட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதற்கு முன்பும் படங்களில் அசிஸ்டன்ட் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறேன். செட்டில் யார் சிறப்பாக வேலை செய்கிறார்கள் என்பதை அட்லி சார் சரியாக கவனித்து தெரிந்துகொள்வார். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு என்னுடைய நம்பரை சேமித்து வைத்திருந்தவர், இந்தப் படத்துக்காக என்னை அழைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நான் நல்ல படங்களில் பணியாற்றும்போதெல்லாம் அவர் எங்கிருந்தாலும் மெசேஜ் செய்து பாராட்டுவார். அது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.

“பாலாஜி சார் இந்தப் படத்தில் நிறைய டேக்குகள் செல்லும் என்று முன்பே சொன்னார். அதற்கேற்ற மாதிரி நாம் வேலை செய்ய வேண்டும் என்றார். படத்தில் பணியாற்றும்போது ஒவ்வொரு லுக் டெஸ்ட்டையும், லுக் அண்ட் ஃபீலையும் முத்துராஜ் சார் உள்ளிட்ட அனைவருடனும் கலந்து பேசி உருவாக்கினோம். அந்த ‘பத்தா’ உலகம் முழுமையாக உருவான பிறகுதான் நாங்கள் ஃப்ளோருக்குச் சென்றோம். நிறைய டேக்குகள் போனாலும் அந்தப் பணியில் ஒரு நல்ல எனர்ஜி இருந்தது. விஜய் சேதுபதி சாரைப் பொறுத்தவரை அவரை நடிப்பு அரக்கன் என்று சொல்வார்கள். 25 டேக்குகளுக்கு மேல் சென்றாலும், பேக் ஷாட்டில் இருக்கும்போதுகூட முதல் வசனத்திலிருந்து கடைசி வசனம் வரை முழு தொடர்ச்சியுடன் நடித்துக்கொண்டே இருப்பார். ‘சார், டயர்டா இருக்கா?’ என்று கேட்டால், ‘இல்லை செல்வா, நல்லாத்தான் இருக்கு. எனக்கு ஜாலியா இருக்கு’ என்பார். அவருடன் முதல் முறையாக பணியாற்றிய எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“லிஜோமோல் ஜோஸ் வேற லெவலில் பண்ணியிருக்காங்க. அவர்களுடைய கண்களிலேயே நடிப்பு தெரியும். சாயும் ரொம்ப சிறப்பாக நடித்திருக்கிறார். முத்துராஜ் சாருடைய டீமும் மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. அவர் ஒரு நாள் வரவில்லை என்றாலும் அவர் இல்லாதது தெரியாத அளவுக்கு அவருடைய டீம் பொறுப்புடன் பணியாற்றியது. என்னுடைய அசிஸ்டன்ட் ஒளிப்பதிவாளர்கள், கிரேன், லைட்ஸ் என ஒட்டுமொத்த டீமும் ரொம்ப கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் உலகமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கதையைப் பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இது ஒரு பயங்கரமான நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

தயாரிப்பாளர் அஜித் அந்தாரே பேசியதாவது…

“100-க்கும் மேற்பட்ட படங்களை நாங்கள் தயாரித்திருக்கிறோம். ஆனால் இன்று இந்த மேடையில் நிற்கும்போது, ஒரு மாணவனைப் போல உணர்கிறேன். ஒரு நல்ல மாணவன் எப்போதுமே கற்றுக்கொண்டே இருப்பான். தமிழ் சினிமாவையும், இங்குள்ள படைப்பாளிகளையும் பார்க்கும்போது நாங்கள் வியந்து போகிறோம், காதலிக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது வேறு விஷயம். நீங்கள் செய்யும் அந்த மேஜிக்கை அப்படியே கற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் அட்லியை மும்பைக்கு அழைத்து வந்து எங்களுடைய சூப்பர் ஸ்டார்களை மேலும் வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த உறவுக்கு அட்லிதான் மிகப்பெரிய காரணம்.

“இந்தப் பயணம் எப்படி தொடங்கியது என்பதும் சுவாரஸ்யமானது. என்னுடைய சக ஊழியர் ஷஹானாவுடன் சேர்ந்து அட்லியுடன் ஏதாவது செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு தமிழ் ஸ்கிரிப்ட் இருப்பதாக அவர் சொன்னார். எங்களுக்கு தமிழ் தெரியாததால், ‘இந்தக் கதையை எப்படி புரிந்துகொள்வது?’ என்று கேட்டோம். ஆனால் அட்லி, ‘நீங்கள் பாலாஜி சாரின் narration-ஐ மட்டும் கேளுங்கள்’ என்றார். ‘பத்தா’வின் உலகம் படத்தில் உருவாவதற்கு முன்பே பாலாஜி சாரின் narration மூலம் எங்களுக்கு முன்னால் உருவாகிவிட்டது. மொழியின் பல நுணுக்கங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், அவர் கதை சொன்ன விதத்தில் சினிமாவின் மொழியும் கதையும் எங்களை சென்றடைந்தது. அந்த narration எங்களை மிகவும் பாதித்தது. ஒரு conference room-ல் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. அந்த அளவுக்கு பாலாஜி சாரின் narration எங்களை உணர வைத்தது. அதனால்தான் இந்தப் பயணத்தில் இணைந்தோம்.

“அட்லி ஒரு bundle of energy என்றால், அந்த energy-க்கு ஒரு அமைதியான தலைவும் தேவை. அந்த இடத்தில் மும்பையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் முராத் இருக்கிறார். இந்தப் படம் மூலம் சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒரு அழகான உறவு உருவாகியிருக்கிறது. விஜய் சேதுபதி சார் குறித்து எங்களுடைய முழு studio team-க்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ‘Super Deluxe’, சமீபத்திய ‘Maharaja’ உள்ளிட்ட அவரது படைப்புகளைப் பார்த்து, ‘இப்படி எப்படி படங்களை செய்கிறார்?’ என்று நாங்கள் வியந்திருக்கிறோம். எங்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அட்லி தனது மாணவர் பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே இன்று இந்தப் படம் தொடர்பான நிகழ்வில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”

தயாரிப்பாளர் முராத் கெதானி பேசியதாவது…

“‘பத்தா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. ‘பத்தா’ எனக்கு மிகவும் சிறப்பான படம். நான் எப்போதுமே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன். அந்த வகையில், Cine1 Studios நிறுவனத்துக்கு இது மிகவும் முக்கியமான ஒரு படி. எங்களுடைய நிறுவனத்தின் முதல் தமிழ் படம் ‘பத்தா’ என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய அட்லி சார் மற்றும் பிரியா மேடம் இருவருக்கும் என்னுடைய நன்றி.

“அட்லி சார், பிரியா மேடம் இருவருடனும் இது எனக்கு இரண்டாவது கூட்டணி. Star Studios உடனான எனது இரண்டாவது கூட்டணியும் இதுதான். இந்தப் படத்துக்காக என்னுடன் இணைந்து பணியாற்றிய பாலாஜி சார், விஜய் சேதுபதி சார், சாய் அப்யங்கர் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கும் என்னுடைய நன்றி. அஷ்வின் மற்றும் A for Apple குழுவினர், அகான்ஷா, கார்த்திக், Cine1 குழுவைச் சேர்ந்த ஷஹானா, ஜியோ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

“என்னுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கிய அஜித் அந்தாரே, பிரியா, அட்லி உள்ளிட்ட சக தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்துக்கு நீங்கள் ரசிகர்களாகிய அனைவரும் எவ்வளவு அன்பைக் கொடுக்கிறீர்களோ, அதே அளவுக்கு எங்களுக்கும் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது…

“இது ஒரு குடும்ப விழா. அட்லி சகோதரர் எங்கள் குடும்பத்தில் நீண்ட காலமாக இருப்பவர். அதனால் நான் இங்கு வந்துதான் ஆக வேண்டும். நான் என் மனைவியை அழைக்கும்போது, கடந்த 12 வருடங்களாக அவரது அழைப்பு இசையாக இருப்பது ‘கிரேஸி மின்னல்’ பாடல்தான். அந்தப் பாடல் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சேது நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் இடம்பெற்றது. கார்த்திக் நேத்தா எழுதிய அந்தப் பாடலைத்தான் இத்தனை ஆண்டுகளாக அவர் வைத்திருக்கிறார். இந்தக் கலைஞர்களின் திறமைக்கும், படைப்புகளின் தரத்துக்கும் இதுவே ஒரு சிறிய உதாரணம்.

“ஒரு உறவை இன்னொரு உறவால் மாற்ற முடியாது. ஒரு உறவு எவ்வளவு சிறப்பானது என்பதை ‘பத்தா’ அழகாகச் சொல்லும். அட்லி இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே ஒரு வரியே என்னை மிகவும் கவர்ந்தது. சேதுண்ணாவின் பயணமும் தமிழ் சினிமாவுக்கு மிகவும் முக்கியமானது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூதுகவ்வும்’, ‘பீட்சா’, ‘விக்ரம் வேதா’, ‘விடுதலை’ என தொடர்ந்து சிறந்த படைப்புகளில் பயணித்து வரும் அவர், தனக்கென ஒரு முக்கியமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த வரிசையில் ‘பத்தா’வும் சேர வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

“அட்லி என்னுடைய நண்பர் என்று சொல்வதில் எனக்கு பெருமை இருக்கிறது. அதே நேரத்தில் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். பிரியா அவர்களும் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதிதான். வெளிநாடுகளில் பார்த்து வியக்கும் விஷயங்களை நம்முடைய தமிழ் சினிமாவில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் அட்லி. ஒவ்வொரு படத்திலும் அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். எங்கள் அனைவருக்கும் அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். சாய், நானும் ‘பவழமல்லி’, ‘ரதிம்மா’ பாடல்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இப்போது ‘பத்தா’ படத்தின் பாடலைக் கேட்டபோது மிகவும் அற்புதமாக இருந்தது. கார்த்திக் நேத்தா இந்தப் படத்தில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

“இயக்குநர் எந்தக் களத்தில் பணியாற்ற விரும்பினாரோ, அந்தக் களத்தில் அவருக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்திருக்கிறார்கள். அதற்கான பெருமை தயாரிப்பாளர்களையே சேரும். லிஜோமோல் உள்ளிட்ட சிறப்பான கலைஞர்களும், திறமையான படக்குழுவினரும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ‘பத்தா’ மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசியதாவது…

“பத்தா” படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் அண்ணாவின் படங்களை நான் ஆரம்பத்திலிருந்தே ரசித்து வருகிறேன். குறிப்பாக “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்திலிருந்தே அவருடைய படைப்புகளின் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு இருக்கிறது. இப்போது அவருடைய இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

அட்லீ சார் என் குரு அவர் மீது எனக்கு எப்போதுமே மிகப்பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது. அவருடைய பயணத்தையும், அவர் சினிமாவில் உருவாக்கியிருக்கும் இடத்தையும் பார்த்து பெருமைப்படுகிறேன். இந்தப் படத்திற்காக அவர் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதேபோல் விஜய் சேதுபதி சாரும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவருடைய நடிப்பை நான் தொடர்ந்து ரசித்து வருகிறேன்.

“பத்தா” படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பாலாஜி தரணீதரன் அண்ணா, விஜய் சேதுபதி சார், அட்லீ சார் உள்ளிட்ட அனைவருடைய உழைப்புக்கும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது…

“சத்தியபாமா கல்லூரிக்கு நான் கடைசியாக “டான்” படப்பிடிப்புக்காக வந்திருந்தேன். மீண்டும் இங்கு வந்து நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அட்லீ சாருடன் “தெறி”, “மெர்சல்” படங்களில் பணியாற்றியிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவருடன் பயணித்திருக்கிறேன். அந்த காலத்தில் என்னை விட்டுக் கொடுக்காமல், தொடர்ந்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார். உங்களுடைய உழைப்பு, பெரிய கனவு ஆகிய இரண்டையும் இணைத்து நீங்கள் செய்யும் விஷயங்கள் எப்போதுமே எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்திய சினிமாவே பெருமைப்படும் அளவுக்கு நீங்கள் ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நீங்கள் காட்டிய காட்சிகள் மிகவும் பிரமிப்பாக இருந்தது. இன்னும் சில நாட்களில் அதை அனைவரும் திரையில் பார்க்கப் போகிறீர்கள்.”

“ராஜமௌலி சார் இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுகொண்டிருக்கிறார். அதேபோல் அட்லீ சாரும் இந்திய சினிமாவை உலக அளவிலான இடத்துக்கு கொண்டு செல்லப் போகிறார் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய மாணவனாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சமீபத்தில் ரஜினி சார் படம் எனக்கு கைவிட்டுப் போனதால் மிகவும் வேதனையான காலகட்டத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் அட்லீ சார் எனக்கு தொலைபேசியில் அழைத்து, ‘நீ பிளாக்பஸ்டர் இயக்குநர், கவலைப்படாதே’ என்று சொன்னார். அந்த வார்த்தைகள் எனக்கு மீண்டும் ஓடுவதற்கான நம்பிக்கையை கொடுத்தது. சீக்கிரம் என்னுடைய அடுத்த படத்தின் மூலம் உங்களைப் பெருமைப்படுத்துவேன் சார். அதேபோல் பிரியா அக்கா, நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே எங்களை குடும்பத்தில் ஒருவராக பார்த்து அன்பாக நடத்தினீர்கள். உங்களுடைய நல்ல மனதுக்கும், நீங்கள் தொடர்ந்து செய்து வரும் உதவிகளுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும்.”

“பாலாஜி தரணீதரன் சாரின் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். ஒரு காட்சியை சொல்லி எங்கள் இயக்குநரிடம் ஒப்புதல் வாங்குவது எங்களுக்கு கஷ்டம். ஆனால் நீங்கள் ஒரு முழு கதையையே சொல்லி ஒப்புதல் வாங்கியிருக்கிறீர்கள். அதனால் இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. விஜய் சேதுபதி சார் மாஸ், தீவிரமான நடிப்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய மிகச் சில நடிகர்களில் ஒருவர். அவருடைய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சாய் அபயங்கர் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறார்; நான் இயக்கும் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார். மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். இன்னும் பல மடங்கு உயர வேண்டும். “பத்தா” படம் தமிழ் சினிமாவில் சமீப காலமாக இருந்த பொழுதுபோக்கு படங்களுக்கான இடைவெளியை நிரப்பும் என்று நம்புகிறேன். கலை, ஒளிப்பதிவு, முத்துராஜ் அண்ணன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்கில் சென்று பார்த்து வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி.”

நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசியதாவது…

“‘பத்தா’ எனக்கு பல விதங்களில் மிகவும் சிறப்பான படம். முதலில், நம்முடைய அற்புதமான இயக்குநர் பாலாஜி சாருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்கவும், அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது இன்னொரு பெரிய சந்தோஷம். அட்லீ சார் தயாரிப்பில், சாய் அபயங்கர் போன்ற திறமையான இசையமைப்பாளருடன் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம்.”

“அட்லீ சார் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இந்தப் படத்துக்காக எனக்கு அழைப்பு வந்தது முதல், இப்போது இந்த மேடையில் நிற்கும் தருணம் வரை எல்லாமே கனவு போல இருக்கிறது. பாலாஜி சாருடன் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு சிறந்த அனுபவம். விஜய் சேதுபதி சார், நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று ஏற்கனவே உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் என்னிடம் மிகவும் அன்பாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடந்துகொண்டீர்கள். என்னுடைய நடிப்பைப் பற்றி நீங்கள் பாராட்டிப் பேசியது எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்தது போன்ற உணர்வைத் தந்தது. அதற்கு மனமார்ந்த நன்றி.”

“என்னுடைய சக நடிகர்கள், இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நான் நிறைய யோசித்து, நிறைய பயிற்சி செய்துதான் இந்த மேடைக்கு வந்தேன். ஆனால் இப்போது எதுவும் பேச முடியவில்லை. இந்த தருணத்தில் எனக்கு ஒன்றை மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இந்த அழகான ‘பத்தா’ உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியதாவது…

“‘பத்தா’ படத்தின் கதையை நான் கொரானா ஊரடங்கு காலத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். இந்தத் திரைக்கதையை முடிக்க எனக்கு நிறைய காலம் எடுத்துக்கொண்டது. முடித்தவுடன் முதலில் சேதுவிடம்தான் கதையைச் சொன்னேன். அவர் அட்லியிடம் கூட்டிப்போனார். அவர் கதை கேட்டதும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனே இந்தப் படத்தைப் பண்ணலாம் என்று சொன்னார். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் முராத் கெதானி சார், அஜித் அந்தாரே சார் ஆகியோரிடம் கதையைச் சொன்னபோதும், அவர்களும் உடனடியாக படத்தைப் பண்ணலாம் என்று சம்மதித்தார்கள். அதனால் இந்தப் படம் உருவான பயணம் எனக்கு மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் சேதுவும் நானும் மிகவும் நட்பாகப் பழகி, அனைவரும் ரசித்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினோம். நான் நினைத்த தோற்றத்தையும் கதைக்கான உலகத்தையும் சரியாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் செல்வகுமாருக்கு என் நன்றிகள்.”

“இந்தப் படத்தில் கலைக்குப் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நான் ஒரு கதையை நினைத்தேன், அதை படமாக எடுத்து முடித்துப் பார்த்தபோது, ‘இந்தக் கதை இவ்வளவு பெரிய உலகமாக இருக்கிறதே’ என்று எனக்கே தோன்றியது. அதை சரியான அளவில், சுவாரஸ்யம் குறையாமல் திரையில் கொண்டு வருவதில் கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் அவரது குழுவின் பங்கு முக்கியமானது. அதேபோல் சாய் அபயங்கர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். எங்களுடைய இசைப் பயணம் வித்தியாசமானது. நான் நினைத்த எல்லைகளைக் கடந்து புதிய விஷயங்களைச் செய்ய வைத்ததற்கு சாய்க்கும் அட்லிக்கும் நன்றி. பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையையும் அவர் அற்புதமாகச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சாய் இன்னும் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.”

இந்தப் படத்தில் நடித்த லிஜோமோல், ஹரிகிருஷ்ணன், ஷாந்தி பாலச்சந்திரன், சகஸ்ரா, சாய் பிரித்வி, விஜயகோவிந்த், அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அன்பாகவும், அதே நேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்கள். அவர்களுடைய நேர்மையான உழைப்பு என்னையும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. ‘பத்தா’ படத்தை நம்பி இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியதாவது…

“ரொம்ப நாளுக்குப் பிறகு எல்லாரையும் பார்க்கிறேன். ‘கருப்பு’ படத்துக்குப் பிறகு, ‘ரதிமா’ போன்ற பாடலுக்குப் பிறகு மீண்டும் ‘பத்தா’ மூலம் உங்களை சந்திப்பது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். ‘பத்தா’ உருவாக அட்லீ அண்ணாதான் ஆரம்பப் புள்ளி. அவருடன் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகப் பயணித்து வருகிறேன். இந்தப் படத்துக்காக என்னை முதன்முதலில் அவரிடம் அழைத்துச் சென்றது என்னுடைய வழிகாட்டிகள் சந்தோஷ் அண்ணா, மகேஷ் அண்ணா. அப்போது பாலாஜி தரணீதரன் சார் இயக்கத்தில் ஒரு படம் செய்ய முடியுமா என்று அண்ணா கேட்டார். நான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, அதைவிட ‘சீதக்காதி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன். அதனால் இந்தப் படத்தின் கதையை இசை மூலம் இன்னும் சிறப்பாக்கலாம் என்ற எண்ணத்தில் உடனே உற்சாகமடைந்தேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக அட்லீ அண்ணாவுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.”

“பாலாஜி சார் மிகவும் நேர்மையானவர். என்ன பிடித்திருக்கிறது, என்ன பிடிக்கவில்லை என்பதை முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார். அதனால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்வார். இந்தப் படத்தின் இசை அமர்வுகள் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். பிடித்திருந்தால் அப்படியே பாராட்டுவார்; பிடிக்கவில்லை என்றால் வேறு முயற்சி செய்யலாம் என்பார். அந்த நேர்மையான அணுகுமுறை என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய வைத்தது. இந்த வாய்ப்புக்காக பாலாஜி சாருக்கு நன்றி. இன்னும் பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுளின் ஆசீர்வாதம் போல இருக்கிறது. சேது அண்ணா, இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி. உங்களை மிகவும் நேசிக்கிறேன்.”

“பிரியா அக்காவும் ஒவ்வொரு முறையும் என்னுடைய வளர்ச்சிக்காக நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து வழிகாட்டுவார். என்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், எதை எப்படி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ‘பத்தா’ மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘பத்தா’ ஒரு நீண்ட காலம் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி.”

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது…

“முதலில் அட்லி சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. இந்தப் படத்தை தயாரிக்க அவர் முன்வந்தது மட்டுமல்லாமல், கதை கேட்ட உடனேயே ‘இந்தப் படம் உலக விழாக்களிலும், திரையரங்குகளிலும் பெரிய அளவில் பேசப்படும்’ என்று அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. முராத் சார், அஜித் சார் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.”

“லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, நாங்கள் கணவன்-மனைவியாக வாழும் அந்த வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாகச் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அதை எப்படி அவர் செய்தார் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. லிஜோ, உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆறு, எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.”

“இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.

படத்தைப் பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன். செல்வா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி. யாருடைய பெயரையாவது சொல்லத் தவறியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். எல்லாரையும் திரையரங்கில் சந்திப்போம். இந்தப் படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.”

இயக்குநர் அட்லீ பேசியதாவது…

“முதலில் இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த அனைவரிடமும் மன்னிப்பும் நன்றியும் கேட்டுக்கொள்கிறேன். ‘பத்தா’ எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. காலம் கடந்தும் நம்மை யோசிக்க வைக்கும் சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்பாக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மனிதநேயத்தோடு ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும். அதே நேரத்தில் இது முற்றிலும் ஒரு புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். இந்தப் படத்தை தயாரித்து, அஜித் சார் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. முராத் கெதானி சார் எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் குழுவினருக்கும் நன்றி.”

“பாலாஜி தரணீதரன் போன்ற இயக்குநரை உலக சினிமாவிலேயே தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம். நம்ம ஊரில் இருக்கும் திறமைகளை நாமே கொண்டாடாமல், வெளியுலகத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால் பாலாஜி போன்ற இயக்குநர்கள் நம்முடைய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. சாய் அபயங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ஒரு நாளைக்கு ஒரு பாடலை உருவாக்கிவிட்டு அதனுடன் தூங்குவேன் என்று சொன்னார். அவரிடம் இருந்த அந்த ஆர்வத்தைப் பார்த்துதான் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், அனிருத் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு தனித்துவமான இசையமைப்பாளர் இருப்பதைப் போல, சாய் அபயங்கருக்கும் தனியான ஒரு காலகட்டம் உருவாகும் என்று நான் நம்புகிறேன். சாய், உன்னிடம் இருக்கும் பணிவை எப்போதும் காப்பாற்றிக்கொள். நீ மிகப்பெரிய உயரத்துக்குச் செல்ல வேண்டும்.”

“லிஜோமோல் ஒரு அற்புதமான நடிகை. அவரை இந்தப் படத்தில் பார்த்தபோது, இவ்வளவு திறமையான நடிகையை நாம் இதற்கு முன்பு பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற உணர்வு வந்தது. நீ ஒரு மிகச்சிறந்த நடிகை. உனக்கு இன்னும் மிகப்பெரிய வாய்ப்புகள் வர வேண்டும். கலையும் செல்வாவும் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். கலை மீது எனக்கு எப்போதுமே மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. செல்வா என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பயணித்தவர். நம்முடன் இருப்பவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டால், நம்மையும் வாழ்க்கை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று என் அம்மா சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் நான் தேர்ந்தெடுத்தவர்களில் செல்வாவும் ஒருவர். முத்துராஜ் அண்ணா, கார்த்திக் நேதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.”

“அர்ஜுன் சிதம்பரம், இந்தப் படத்தில் நீங்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை இந்தத் துறை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன். இன்னும் பெரிய விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டும். ஹரிஷ், உங்களுடைய நடிப்பையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். ‘பத்தா’ மூலம் என்னுடைய அப்பாவைத் திரையில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு எனக்கு கிடைத்தது. காலத்துக்கும் உங்களை நான் நினைவில் வைத்திருப்பேன். அனைவரும் இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறீர்கள். ‘பத்தா’ ஒரு சிறப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். தயவுசெய்து திரையரங்குகளில் சென்று பாருங்கள். படத்தின் இறுதியில் உங்களுக்குள் ஒரு உணர்வை விட்டுச் செல்லும். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, ‘பாலாஜி அண்ணா அடுத்ததாக எப்போது இப்படியொரு படத்தைக் கொடுப்பார்?’ என்று நீங்கள் கேட்கும் அளவுக்கு படம் இருக்கும் என்று நம்புகிறேன்..”

“நான் இன்று இந்த அளவுக்கு வளர்ந்து, இந்த மேடையில் நிற்பதற்கு விஜய் அண்ணாதான் மிக முக்கியமான காரணம். இதை நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். அவர் இப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார்; இனிமேல் எனக்கு இன்னொரு படம் கொடுக்க முடியாது. ஆனால் நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு வருவதற்கும், என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்புகளைத் தொடர்ந்து கொடுத்து என்னை வளர்த்ததற்கும் அவர் முக்கிய காரணம் என்பதை என்னால் மறுக்கவே முடியாது. சமூக வலைதளங்களில் பல நேரங்களில் தவறான விஷயங்கள், எதிர்மறையான கருத்துகள் வரலாம். ஆனால் அவற்றையெல்லாம் நாம் பொருட்படுத்தக் கூடாது. விஜய் அண்ணா எப்போதும் சொல்வதைப் போல, எதிர்மறையான விஷயங்களை உதாசீனப்படுத்திவிட்டு, நம்முடைய இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும். நம்முடைய வாழ்க்கை நம்மைச் செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். அதனால் யார் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், நம்முடைய பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.

இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

பெரும்  எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள  ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழாவில் திரண்ட ரசிகர்களின் உற்சாகமும், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட தகவல்களும், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *