பிளாக் படம் எப்படி இருக்கு?

பிளாக்

இயக்கம் – கே ஜி பால சுப்ரமணி
நடிகர்கள் – ஜீவா, பிரியா பவானி சங்கர், வெங்கட் பிரசன்னா .
இசை – சாம் சி எஸ்
தயாரிப்பு – பொடென்சியல் ஸ்டுடியோ

பல வீடுகள் இருக்கும் வில்ல குடியிருப்பில் யாரும் குடியேறாத நிலையில், ஒரு கப்பில்ஸ் தங்களது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அங்கிருக்கும் வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் வந்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரே ஒரு காவலாளி திடீரென்று காணாமல் போக, மின்சாரமும் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிகிறது. யாரும் இல்லாத வீட்டில் எப்படி விளக்குகள் எரிகிறது என்ற யோசனையோடு இருவரும் அந்த வீட்டின் அருகே சென்று பார்க்கும் போது, இவர்களது வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் போலவே அந்த வீட்டுக்குள் இருப்பதோடு, அந்த வீட்டுக்குள் இவர்களைப் போல உருவம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடையும் இருவரும், நடப்பது கணவா? அல்லது நிஜமா? என்று குழப்பமடைகிறார்கள். ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்பதை உணர்ந்து அங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் அது முடியாமல் போவதோடு, தொடர்ந்து அவர்களை சுற்றி பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. அதன் பின்னணி என்ன? என்பதை திகில், மர்மம், திரில்லர் என அனைத்துவிதமான உணர்வுகளோடு அறிவியலையும் சேர்த்து சொல்வது தான் ‘பிளாக்’.

இந்தப் படம் ஒரு ஆங்கிலப் படத்தின் ரீமேக் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டார்கள். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே சுற்றி நடக்கும் கதையாக இருந்தாலும், அதை பலமான திரைக்கதை மூலம் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார். ஜீவா – பிரியா பவானி சங்கர் தம்பதி போலவே மற்றொரு ஜோடி எப்படி? , இரண்டு ஜோடிகளில் யார் நிஜம்? என்ற கேள்விகள் தான் படத்தின் சஸ்பென்ஸ் என்றாலும் அந்த ஒரு சஸ்பென்ஸை வைத்துக் கொண்டு, அவர்கள் வெவ்வேறு நேரங்களில் பயணிப்பது போன்ற காட்சிகள் மூலம் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை பதற்றத்தின் உட்சத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

யாரும் இல்லாத இடத்தில் உள்ள வீட்டுக்கு வந்தார்கள், அவர்களைப் போல் அங்கே இருவர் இருக்கிறார்கள், அடிக்கடி வெவ்வேறு நேரத்திற்கு செல்கிறார்கள், இவை எல்லாம் எதனால் நடக்கிறது? என்று சிலரை படம் குழப்பமடைய செய்வது போல், அதற்கு காரணமாக சொல்லப்படும் இருள் சூழ்ந்த பகுதி ( Black Hole), சூப்பர் மூன் (Super Moon) மற்றும் அந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வு போன்றவைகள் கூட பலருக்கு தெளிவாக புரியும்படி சொல்லாதது படத்திற்கு சற்று பலவீனமாக இருக்கிறது. இருந்தாலும், புரியாதவர்கள் கூட படத்தை பற்றி சிந்திக்க கூடிய அளவுக்கு படத்தில் அறிவியல் விசயங்களை சொல்லியிருக்கிறார்கள். கணவன் – மனைவியாக நடித்திருக்கும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர், தங்களை சுற்றி நடக்கும் குழப்பமான சம்பவங்களை பதற்றத்துடன் எதிர்கொள்ளும் காட்சிகளில் அனைத்துவிதமான உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இருவர் மட்டுமே படம் முழுவதும் பயணித்தாலும் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.

இரண்டு கதாபாத்திரங்கள், குறிப்பிட்ட ஒரே ஒரு களம், திரும்ப திரும்ப நடக்கும் குறிப்பிட்ட சம்பவங்கள் என்று இருந்தாலும் அதை வெவ்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், இரவு நேரக் காட்சிகள் மூலம் பார்வையாளர்களையும் பதற்றமடைய வைத்திருக்கிறார்.

சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. பார்வையாளர்களை பின்னணி இசை மூலம் பயமுறுத்த தேவையில்லாத சத்தங்களை சேர்க்காமல் சில குறிப்பிட்ட பீஜியம் மூலம் திரைக்கதையில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருப்பவர், குறிப்பிட்ட சில பீஜியம்களை கதபாத்திரமாகவே பயணிக்க வைத்திருக்கிறார்.மிக குழப்பமான கதைக்கருவுக்கு, அதை விட குழப்பமான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் அதை படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், மிக நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.

நம் வாழ்க்கையில் தற்போது நாம் சந்திக்கும் மாற்றங்களுக்கு அறிவியல் தான் காரணம். அத்தகைய அறிவியல் மூலம் கதை சொல்லல் மற்றும் காட்சி மொழியில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கும் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி, அதை வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி பார்வையாளர்களை யோசிக்க வைப்பதோடு, அது குறித்து பேச வைக்கும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘பிளாக்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படம்

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *