இரண்டு கோடி செலவழித்து சினிமாவைப் புரிந்து கொண்டேன் : அறிமுகம் இயக்குநர் ஆதங்க பேச்சு!
சினிமாவில் யாரை நம்புவது என்று தெரியவில்லை : அறிமுக இயக்குநர் சதா நாடார் பேச்சு!
பா. ரஞ்சித் ஜாதி வெறியர் இல்லையா? அறிமுக இயக்குநர் பரபரப்பு பேச்சு!
கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க
எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி (SKD Film Factory) தயாரிப்பில் தமிழ்த் திரை உலகில் முதல் முதலாக
நிஜமான கணவன் மனைவி சதா நாடார் -மோனிகா செலினா தம்பதிகள் கதை மாந்தர்களாக நடித்து இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘ல் தகா சைஆ ‘ .
இணைத் தயாரிப்பு S.K.தனபால்.
அக்டோபர் மாதம் வெளியாக உள்ள இப்படத்தை
ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இந்நிகழ்வில் படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பத்திரிகையாளர், நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில்,
இப்படத்தைத் தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள சதா நாடார் பேசும் போது,
” பெருந்தலைவர் காமராஜ் நினைவு நாளில் இந்த நிகழ்ச்சி நடப்பது பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னையே புதிதாக இருந்தது. சினிமா ஆர்வத்தில் வந்து இங்கே பார்த்தபோது சினிமா வேறொரு பிம்பத்தைக் காட்டியது. யாரை நம்புவது யாரைநம்பக்கூடாது என்று புரியவே இல்லை.
இந்தப் படத்தை எடுத்து முடிப்பதற்கு முன்னால் நான் இரண்டு கோடி ரூபாய் இந்த சினிமாவில் இழந்தேன். அதற்குப் பிறகுதான் பலதும் புரிந்தது. சினிமாவில் இழந்ததை சினிமாவில் தான் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து நானே தயாரித்து நானே இயக்கி நானே நடிப்பது என்று தீர்மானித்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.
இந்த சினிமாவைக் கற்றுக் கொள்வதற்கு வகுப்புகளுக்கு எல்லாம் செல்வார்கள். ஆனால் நான் 2 கோடி ரூபாய் செலவு செய்து இந்த சினிமாவைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.எத்தனையோ தவறான ஆட்களைச் சந்தித்து எங்கெங்கோ முட்டி மோதி, இப்போது எல்லா ஆட்களும் நன்றாக சரியாக அமைந்து இந்தப் படம் வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது.அதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
பணத்தை எதிர்பார்க்கும் மனிதர்கள் மத்தியில் பன்னிரண்டு ஆண்டுகளாக என்னுடன் நட்பில் இருக்கும் மனிதர் சுதந்திரன், இத்தனை ஆண்டுகளாக என்னிடம் எந்த காசையும் எதிர்பார்க்கவில்லை.
நான் மிகவும் அவசரக்காரன் பரபரப்பாக இருப்பேன். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தை எடுத்த போது நிதானம் காட்டி இந்தப் படம் உருவாவதற்கு ஒரு முதுகெலும்பு போல் இருந்தது என் மனைவி மோனிகா செலினாதான்.அவருக்கு நன்றி.
ஒருமுறை வெற்றிமாறன் சொன்னார் படத்துக்கு எடிட்டர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்று.
அப்படி நாங்கள் யார் யாரையோ பார்த்து கடைசியில் வந்து சேர்ந்துள்ள எடிட்டர் பரணி செல்வம். எப்படியோ இருந்த இந்தப்படத்தை இப்படி உருவாக்கியதில் அவர் பங்கு பெரியது.அதேபோல் இசையமைப்பாளர் ஜான்சனை பல நாள் காக்க வைத்தேன். அவர் சிறப்பாகச் செய்துள்ளார்.
ஏன் சினிமாக்கு வந்தாய்? என்று பலரும் கேட்டார்கள். இன்றும் எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாவில் வெற்றிகரமாகச் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் ஒரு சிறிய தயாரிப்பாளராக வந்து வளர்ந்து பெரிய தயாரிப்பாளராக படங்கள் தயாரிப்பேன் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.நான் மனம் தளர்ந்த போதெல்லாம் முள்ளை முள்ளால் எடுப்பது போல் சினிமாவில் இருந்து தான் இழந்ததைப் பெற முடியும் என்று ஊக்கமாக என் தம்பிகள் இருந்தார்கள்.இதுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
சதா நாடார் என்று அவரது பெயரில் சாதி இணைத்து வைத்திருப்பதைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
” அது என் அடையாளம். நான் எந்தப் பின்புலத்தில் இருந்து வருகிறேன் என்பது தெரிவதற்காக வைக்கப்பட்டது.ஆந்திராவில் கேரளாவில் எல்லாம் கவுடா மேனன், நாயர் என்று பெயருடன் வைத்துக் கொண்டுள்ளார்களே “என்றார்.
சினிமாவிற்கு ஜாதி மதம் கிடையாது என்று கூறியபோது,
“நான் என்ன சொல்கிறேன் என்றால், இப்போது தங்கலான் என்று ஒரு படம் வந்தது, கர்ணன் என்றொரு படம் வந்தது.
தங்கலான ஜாதிப் படமா இல்லையா? சொல்லுங்கள். அதற்காக பா ரஞ்சித் ஜாதி வெறியர் இல்லை என்று சொல்ல முடியுமா?அவர் ஜாதி வெறி பிடித்துதான் படம் எடுக்கிறார்.
சிவ நாடார் இந்தியாவிலேயே பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவர் ஜாதி வெறி பிடித்தா அப்படிப் பெயர் வைத்துள்ளார்
நான் பெயரில் தான் ஜாதியை இணைத்து வைத்துள்ளேனே தவிர என் படம் ஜாதியைப் பற்றி பேசவில்லை. பேசாது.” என்றார்.
கதாநாயகியாக நடித்துள்ள மோனிகா செலினா பேசும்போது,
“எங்கள் அப்பா கன்னடத்தில் இரண்டு படங்கள் எடுத்தார் தாத்தாதான் தயாரித்தார். ஆனால் இரண்டுமே வெளிவரவில்லை.இந்த வகையில் சினிமாவுக்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. இந்தத் திரைப்படத்துக்குள் என்னை என் கணவர்தான் கொண்டு வந்தார். எனக்கு சினிமா பிடிக்கும். நடிப்பது என்று விருப்பப்பட்ட போது இந்தப் படத்தில் நானே கதாநாயகியாக நடிப்பது என்று முடிவானது. சினிமாவில் நுழைந்த பிறகு தான் வெளியில் இருந்து பார்த்த சினிமா வேறு உள்ளே இருந்த பார்க்கிற சினிமா வேறு என்று இருந்தது. அந்த அளவுக்கு அனுபவங்கள் புதிது புதிதாக இருந்தன.
தினந்தோறும் பிரச்சினைகள் வரும். எனக்கும் கணவருக்கும் தினசரி சண்டைகள் வரும் .
நான் ஒரு காட்சியைச் சரியாக எடுக்க வேண்டும் என்று நிதானம் காட்டுவேன்.அது தாமதம் ஆனாலும் பரவாயில்லை சிறப்பாக வரவேண்டும் என்று நான் நினைப்பேன். அவர் முதல் போட்டுள்ளவர் அல்லவா? அவர் அவசரப்படுவார் .விரைவில் முடிக்க வேண்டும் என்று நினைப்பார். இப்படி எங்களுக்குள் தினசரி சரியாக வர வேண்டும் என்பதில் சண்டை நடக்கும். படம் நன்றாக வந்து இருக்கிறது. பல அனுபவங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.
படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனத்தின் விநியோகஸ்தர் ஜெனிஷ் பேசும்போது,
” இந்தப் படம் ஒரு புதிய முயற்சி. நிச்சயமாக படம் பார்ப்பவர்களுக்கு எதிர்பாராத ஒரு படமாக இருக்கும் ”என்றார்.
பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது,
“இவர் துணிச்சலாக சதா நாடார் என்று தனது ஜாதி பெயரைப் போட்டுக் கொண்டுள்ளார்.
இன்று பலரும் ஜாதிப் படம் எடுப்பார்கள் .ஆனால் ஜாதி பெயரைப் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.ஜாதி பெயரை சொல்ல வெட்கப்படும் நீ இனிமேல் ஜாதிப் படம் எடுக்காதே.உங்கள் ஜாதியை சொல்வதற்கு உங்களுக்கு துணிச்சல் இல்லை என்றால் நீங்கள் எதற்கு ஜாதியை வைத்து படம் எடுக்கிறீர்கள்?
‘ல் தகா சைஆ ‘ அதாவது காதல் ஆசை.
இந்தப் படத்தை வெளியிடும் ஜெனிஷ் சிறிய படங்கள் வெளியிட ஆதரவு தருபவர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ” என்றார்.
🔴Full Video ; Il Thaka Saiaa movie Press Meet –
Q & A at Il Thaka Saiaa movie Press Meet
Bayilvan Ranganathan Speech at Il Thaka Saiaa movie Press Meet