ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு !

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு !

ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்!

கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பேசிய கே ராஜன்.

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது,

“எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி “
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,

“முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லா மும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,

“இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன . நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் “என்றார்.

தயாரிப்பாளர்,நடிகர் கார்த்திகேசன் பேசும்போது,

“நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது “என்றார்.

படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது ,

“நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாக ஆகியிருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார் .

கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது,

” நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது.லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது . ஏனென்றால் கதைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது .அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் .இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் .ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது ,அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.

என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான்,நன்றாக நடிக்கிறான்,நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள் .
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் சார் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுகம் செய்தார் .அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் “என்றார்.

இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது,

“இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள்.அதனால்தான் குறுகிய காலத்தில் நிறைய வேலை செய்ய முடிந்தது . அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றி”சென்றார் .

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் .கே ராஜன் ,பேசும்போது

” இந்தத் தயாரிப்பாளரை நான் மனமார வரவேற்கிறேன். சென்னையில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இவர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.ஏனென்றால் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.

லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒரு பாடல் வருகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் நமது கொள்கை. எல்லா மதங்களும் நல்லவற்றையே சொல்கின்றன.

குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் முக்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால் .அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள்தான் நடுத்தெருவுக்கு வருவார்கள் இன்று இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். முன்னூறு நானூறு படங்கள் வெளியிட முடியாமல் இருக்கின்றன .

இது சின்ன படங்களின் காலம். இன்று சின்ன படங்கள் ஓடுகின்றன. இந்த ஆண்டு நல்ல கதை உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எடுக்கப்படுவது எல்லாம் ஓடுவதில்லை. சின்ன படம் வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

படத்துக்கு விமர்சனம் தேவைதான். நல்லது நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள் .குறை இருந்தால் குறைவாக எழுதுங்கள். சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள்.

ஒரு கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம் பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதாது என்று இன்றைக்கு இந்திக்கு நடிக்கச் சென்று விட்டார். இப்படி இருக்கிறது நிலைமை.

இந்தப் படத்திற்கு மூன்று கதாநாயகிகளும் படத்தை விளம்பரப்படுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.மகிழ்ச்சி. இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து நல்லதை எழுதுங்கள், உள்ளதை எழுதுங்கள், குறைகளை குறைத்து எழுதுங்கள்” என்றார்.

இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேசும்போது,

” திரைப்படமே ஒரு கூட்டு முயற்சி தான். இங்கே ஒரு வேடிக்கையான அனுபவத்தைக் கண்டேன். தயாரிப்பாளர் என்னைச் சகித்துக் கொண்டிருப்பது சிரமம் என்றார். ஆனால் இயக்குநரோ தயாரிப்பாளரின் நல்ல குணங்களை எடுத்துக் கூறினார். நாங்கள் தாய்நாடு படம் எடுத்த போது சத்யராஜ் சார் நடித்தார். அப்படி அவர் நடித்த போது நாங்கள் படக்குழுவினர் பழகுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்,பாராட்டினார். ஏனென்றால் நான் கேமரா மேன் எல்லாம் வாடா போடா என்று பேசிக் கொண்டிருப்போம்.இது சரியாக வரும், வராது என்று எங்களுக்குள் கருத்து மோதல் வரும். இருந்தாலும் அப்படி ஒரு நட்பாக இருந்தோம்.
அதேபோல் இந்தப் படத்தின் குழுவினரைப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் அசோக்குமார் அடைய வேண்டிய உயரத்தை இன்னமும் அடையவில்லை. அடைய வேண்டிய வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும். ஒரு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு, சாப்பாடு சரி இல்லை என்றால் கூட வாசலில் நின்று அந்த இந்த ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூற முடியாது.விடமாட்டார்கள். ஆனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு இந்தப் படம் நல்லா இல்லை போகாதீர்கள் என்று சொல்கிற நிலை இப்போது உள்ளது. சினிமாவுக்கு மட்டும் தான் இந்த அவல நிலை இருக்கிறது. இது ஏன் ?ஒரு படத்திற்குப் பலரும் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். அது அவர்களுக்கு புரிவதில்லை ” என்றார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் பேசும்போது,

“ஒரு நல்ல படத்திற்குக் கதை வேண்டும், நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை என்பேன். ஏனென்றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கலைஞானி கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு லொள்ளு வேண்டும்?
சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. கதைக்கான காட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்துகொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும் வருவார்கள் .எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு.அவர்களை
எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் .

ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார்.என்னால் முடியவில்லை.அவர் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்தபோது நான் வாய்ப்பு கேட்டு வந்தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்,நான் சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று கூறினார். அப்போது அவரைச் சந்தித்தபோது அவர் 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருந்தார். நல்ல வேளை அவருக்கு நான் வாய்ப்பு தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் படத்திற்காக ஒரு குடும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.
இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் தயார்.

என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன், யாரும் தருவதில்லை.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தைப் பார்த்து விட்டேன்.உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித்தான் வரவேண்டும் .இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது.

இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்றுகிறார்கள். அவர்கள் உண்மையான விமர்சகர்களா ?நானும் 40 ஆண்டுகளாக கத்திரிகையாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை உயர்த்தி வைத்தார்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிப் புண்படுத்தும் படியோ, இழிவாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை.
விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

” இந்தத் தயாரிப்பாளரின் நட்பு பலத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் ” என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் இயக்குநர்கள்
காளி ரங்கசாமி, வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடகர் முகமது ரிஸ்வான்.
கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷினி வெங்கட், ஒளிப்பதிவாளர்
ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன்,
எடிட்டர் வளர் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கங்குவா விமர்சனம் பத்தி பேச மாட்டேன்😂 ! K Rajan Speech about Negative Review | LARA Audio Launch –

தியேட்டர் வாசலில் எடுக்கும் விமர்சனம் தேவையா!🔥 Director R. Aravindraj Angry at LARA Audio Launch

மொக்க சினிமா ஓடும்! 😂 Director R V Udhayakumar Spech at at LARA Audio Launch

🤣😂குழந்தை குஷ்புக்கு ஜட்டி போட்டு இருப்பார்! R V Udhayakumar ஐ மரண கலாய் கலாய்த்த பேரரசு – LARA

🔴 FULL VIDEO : LARA Audio Launch – Manimoorthi | Raghu sravan kumar | Karthikesan | Ashok Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *