மார்க்’ திரைப்பட விமர்சனம்

’மார்க்’ திரைப்பட விமர்சனம்

🎬 நடிப்பு (Casting)
சுதீப், நவீன் சந்திரா, குரு சோமசுந்தரம், யோகி பாபு, விதார்த், தீப்ஷிகா, ரோஷிணி பிரகாஷ், டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ்

🎥 இயக்கம் (Directed by)
விஜய் கார்த்திகேயா

🎶 இசை (Music by)
பி. அஜனீஷ் லோக்நாத்

🎞️ தயாரிப்பு (Produced by)
சத்ய ஜோதிஸ் ஃபிலிம்ஸ் & கிச்சா கிரியேஷன்ஸ்
டி.ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன்

ஒரே நாளில் 16 சிறுவர்கள் மாயமாகிறார்கள். அந்த வழக்கை மீட்க களத்தில் இறங்குவது, இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சுதீப். ஆனால் அவருக்கு கொடுக்கப்படும் வேலை அதோடு முடிவல்ல. கொலை செய்யப்பட்ட முதல்வரின் வீடியோ ஆதாரத்தையும் கைப்பற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அவர்மேல் சுமத்தப்படுகிறது.

ஒரு பக்கம் கடத்தப்பட்ட சிறுவர்களின் தடயங்களை தேடும் சுதீப், மறுபக்கம் அந்த மர்ம வீடியோவை துரத்தும் வேட்டையில் இறங்குகிறார். விசாரணை ஆழமாக செல்லச் செல்ல, இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே இருக்கும் ஆபத்தான தொடர்பு வெளிச்சத்துக்கு வருகிறது. அந்த இணைப்பை உடைத்த பிறகு என்ன நடக்கிறது என்பதையே வேகம், பதட்டம், மாஸ் மூன்றையும் கலந்து சொல்லும் படம்தான் ‘மார்க்’.

காக்கி சட்டை இல்லையென்றாலும், போலீஸ் மனசோடே முழு படத்தையும் ஆக்கிரமிக்கிறார் சுதீப். சில நிமிடங்களில் 50 பேரை சாய்க்கும் அதிரடி காட்சிகளையே நம்பும்படி மாற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸ். போதையில் காவல் நிலையத்தில் அறிமுகமாகும் காட்சி முதல், கடைசியில் “சிகரெட் பிடிப்பதை குறைக்கணும்” என்று அமைதியாக முடிக்கும் வசனம் வரை, ஒரே மனிதராக முழு படத்தையும் தன் தோளில் தூக்கி செல்லும் மாஸ் பெர்ஃபார்மன்ஸ்.

சுருக்கமா சொன்னா – சுதீப் ரசிகர்களுக்கான பக்கா மாஸ் திரில்லர். 💥

வில்லனாக நவீன் சந்திரா தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், அவரது கண்களிலேயே கொடூரம் பேசுகிறது. கடும் கோபமும், குளிர்ச்சியான வன்முறையும் கலந்த நடிப்பு, படம் முழுவதும் ஒரு மிரட்டலான நிழலாக வலம் வருகிறது.

மற்றொரு வில்லனாக குரு சோமசுந்தரம், பெரிய ஸ்கோப் இல்லாத கதாபாத்திரமென்றாலும், கொடுத்த இடத்தை கனமாக நிரப்புகிறார். குறைந்த நேரத்தில் தேவையான தாக்கத்தை உருவாக்குகிறார்.

சிறிய வேடத்தில் வந்தாலும், விக்ராந்த் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக இருந்து திரைக்கதையின் பரபரப்பை உயர்த்துகிறார். யோகி பாபு வரும் இடங்களில் காமெடி பெரிதாக வெடிக்காத போதும், படத்தின் அடையாளமாக பயணிக்கிறார்.

ரோஷிணி பிரகாஷ், தீப்ஷிகா, டிராகன் மஞ்சு, கோபாலகிருஷ்ணன் தேஷ்பாண்டே, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அர்ச்சனா கோட்டி உள்ளிட்டோர், தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற அளவில் பங்களிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சேகர் சந்துரு, படத்தில் செலவழிக்கப்பட்ட பணம் திரையில் தெரியும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இரவு காட்சிகள் அதிகமாக இருந்தாலும், வெளிச்சம் குறைந்த உணர்வு வராத அளவுக்கு லைட்டிங் பணி படத்தின் தரத்தை உயர்த்துகிறது.

பி.அஜனீஷ் லோக்நாதின் இசையில், பாடல்களிலும் பின்னணி இசையிலும் மாஸ் மற்றும் ஹீரோயிசம் தெறிக்கிறது. குறிப்பாக “அண்ணன் யார் தெரிமா…” பாடல் தியேட்டரில் நிச்சயம் முனுமுனுக்க வைக்கும்.

எஸ்.ஆர். கணேஷ் பாபுவின் எடிட்டிங், திரைக்கதையை தொய்வின்றி வேகமாக நகர்த்துகிறது. காட்சிகள் சுறுசுறுப்பாக நகர்ந்தாலும், “அடுத்தது என்ன?” என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து உயிருடன் வைத்திருக்கிறது.

எழுதி இயக்கிய விஜய் கார்த்திகேயா, சாதாரண மையக்கருவை எடுத்துக்கொண்டு, அதை முழுமையான சுதீப் மாஸ் ஆக்‌ஷன் படமாக மாற்றியிருக்கிறார். இரண்டாம் பாதியில் சில சண்டைக்காட்சிகள் சற்று நீளமாக சோர்வடைய செய்தாலும், கடத்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற நேரம் குறைந்து வரும் பதட்டமான காட்சிகள், அந்த சோர்வை மறக்கடித்து விடுகிறது.

துவக்கம் முதல் முடிவு வரை திருப்பங்களும் ஆக்‌ஷனும் கலந்த ஒரு பொழுதுபோக்கு பயணம்.
மொத்தத்தில் – ‘மார்க்’ பாஸ் மார்க் வாங்கிய மாஸ் படம். 💥🎬

ரேட்டிங்: ⭐⭐⭐⭐☆ 3.8 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *