
’பூக்கி’ திரைப்பட விமர்சனம்
நடிப்பு: Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir, Vivek Prasanna, Black Pandi, Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi, Priyanka
இயக்கம்: Ganesh Chandra
இசை: Vijay Antony
தயாரிப்பு: Vijay Antony Film Corporation – Fatima Vijay Antony, Meera Vijay Antony
சமூக ஊடகங்களில் அன்பை வெளிப்படுத்தும் இனிய சொல்லாக பிரபலமான “பூக்கி”, இந்த படத்தில் காதல் பிரிவு வலியின் சின்னமாக மாறுகிறது. டிக்டாக் தலைமுறையின் மொழியையே தலைப்பாக எடுத்துக் கொண்டு, நவீன இளைஞர்களின் உறவுகளை பேச முயற்சிக்கிறது இந்த படம்.
அஜய் திஷன் – ஆர்.கே. தனுஷா ஜோடி, சிறிய கருத்து மோதலால் பிரிகிறது. ஆனால் பிரிவு எளிதல்ல. நினைவுகள், பழக்கங்கள், எதிர்பார்ப்புகள் – எல்லாம் சேர்ந்து அவர்களை துரத்துகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இறுதியில் “பழைய காதலை மறக்க புதிய காதல் தான் தீர்வு” என்ற மனநிலைக்கு வருகிறார்கள். புதிய உறவுகள் அவர்களின் வலியை ஆற்றுகிறதா? அல்லது காயத்தை மேலும் ஆழப்படுத்துகிறதா? என்பதே படத்தின் மையம்.
இன்றைய இளைஞர்களின் காதல், பிரிவு, மன உளைச்சல்… ஆனால் அதே நேரத்தில் அந்த உணர்வுகள் காலம் கடந்தாலும் மாறுவதில்லை என்பதைக் கலகலப்பாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‘பூக்கி’.
ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கணேஷ் சந்திரா, காதல் கதையைச் சொல்லவில்லை… காதல் பிரிவு கதையைச் சொல்ல முயற்சித்திருக்கிறார். அது தான் இந்த படத்தின் முக்கிய பலம்.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் திஷன், துடிப்பு மிக்க நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
காதல் பிரிவு வலியில் தத்தளிக்கும் காட்சிகள்
தந்தையை தரக்குறைவாக பேசும் காட்சியில் வெளிப்படும் கோபம்
அப்பாவின் கனவை நிறைவேற்றி அவரின் முகத்தில் மகிழ்ச்சி காணும் தருணம்
இவை அனைத்திலும் அளவான நடிப்பு. குரல் கம்பீரம், உடல் மொழி நம்பிக்கை – ஒரு முழுமையான நடிகராகத் தன்னை நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆர்.கே. தனுஷா, எளிமையான அழகோடு கவர்கிறார்.
ஹீரோவுக்கு நிகராக நடிப்பில் அசத்தியிருப்பவர், நடனத்திலும் தனி முத்திரை பதிக்கிறார். சில அழுத்தமான காட்சிகளில் “யாருப்பா இந்த பொண்ணு?” என்று வியக்க வைக்கும் வகையில் நடித்துள்ளார்.
பாண்டியராஜன், சுனில், லக்ஷ்மி மஞ்சு, இந்துமதி மணிகண்டன், ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, பிக் பாஸ் சத்யா, எம்.ஜெ. ஸ்ரீராம், ராதா, அஷ்வின் ராம், ஷியாரா சர்மி, பிரியங்கா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நிறைவை வழங்கியிருக்கிறார்கள்.
இசையமைத்து படத்தொகுப்பையும் கவனித்திருக்கும் விஜய் ஆண்டனி, இரண்டிலும் தனக்கான ஸ்டைலை காட்டியிருக்கிறார்.
காதல் உணர்வுகளை மையமாக கொண்ட கதை என்பதால் பாடல்களில் இன்னும் கொஞ்சம் ஆழம் இருந்திருக்கலாம். ஆனால் இரண்டாம் பாதியில் எடிட்டிங் தெளிவாக அமைந்து கதையோடு பார்வையாளர்களை இணைக்கிறது.
காதல் பிரிவின் வலியை ஜாலியாக சொல்லி, இறுதியில் அதன் ஆழத்தை உணர வைக்கும் விதத்தில் எழுத்து அமைந்துள்ளது. தற்போதைய இளைஞர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும் உரையாடல்கள் இந்த படத்தின் முக்கிய பலம்.
‘பூக்கி’ ஒரு கனமான காதல் தோல்வி கதை அல்ல…
இது இன்றைய தலைமுறை காதலை, பிரிவை, அதிலிருந்து மீளும் முயற்சிகளை பேசும் படம்.
சில பழக்கமான காட்சிகள் இருந்தாலும், உணர்வுகளை எளிதாக கொண்டு சேர்க்கும் முயற்சி பாராட்டத்தக்கது.
⭐ ரேட்டிங்: 3/5
காதல் பிரிவை லைட் & ரியலிஸ்டிக் டச்-ஆக பார்க்க விரும்புவோருக்கு இந்த படம் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்!