



கேமரா பத்திரிகையாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேமரா பத்திரிகையாளர் சங்கம் (Camera Journalist Sangam) சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மிகச் சிறப்பாகவும், ஊடக உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நடைபெற்றது.
கேமரா பத்திரிகையாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு, தொழில்முறை முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த சங்கத்தின் நிர்வாகிகள் அறிமுக விழா, 25.02.2026 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிர்வாகிகள் அறிமுக விழாவில், தமிழ் திரையுலகமும் ஊடக உலகமும் சார்ந்த பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அதில்,
நடிகர்கள் விஜய் சேதுபதி, SV சேகர், பிரஜின், காளி வெங்கட்,
நடிகை பிரணா,
மேலும் சமூக ஊடக மற்றும் மீடியா பிரபலங்களான
வீ ஜெனிஷ் – Action Reaction,
UTHRAA PRODUCTIONS – S. ஹரி உத்ரா,
ஸ்டூடியோ மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்கிய
SIVAANI STUDIOS – Sivaani Senthil,
TIGER CHAKRAVARTHY,
Prasad Lab
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கேமரா பத்திரிகையாளர்களின் பணி சமூகத்திற்கு இன்றியமையாதது என்றும், அவர்களின் உழைப்பை மதிக்கும் வகையில், சங்க உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி, இந்த சங்கம் ஒரு வலுவான மேடையாக உருவாகும் என்றும் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வினில்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,
இன்றைய தினம் கேமரா பத்திரிகையாளர் சங்கம் ஒன்று கூடி, உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் ஒற்றுமையுடனும், உங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கவும், உறுதி செய்யவும் முன்வந்துள்ளது என்பதே மிக முக்கியமான விஷயம்.
ஒரு சங்கம் தொடங்குவது என்பது எப்போதும் நமக்கான பாதுகாப்பின் அடையாளம். அது நம் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது. அது வேலை சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும், நம்முடைய அடிப்படை உரிமைகளாக இருந்தாலும் அவற்றுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்கவும், கோரிக்கைகளை முன்வைக்கவும், தேவையெனில் போராடவும் ஒரு வலுவான மேடையாக அமைகிறது. இந்த சங்கம், உங்களுக்காக எப்போதும் தோழர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை தருகிறது.
நாம் தனியாக இல்லை, ஒன்றாக இருக்கிறோம் என்ற உறுதியை கொடுக்கிறது. அதனால், இந்த சங்கத்தின் தொடக்கத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது..,
சினிமா என்றால் அதன் ஆரம்ப ஆதாரமாக இருப்பது கேமராதான். அத்தகைய பெருமைமிக்க துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் கேமரா பத்திரிகையாளர் சங்கம் உருவாகியிருப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையே நான் மிகுந்த பெருமையாகக் கருதுகிறேன். உங்கள் அனைவருடனும் இங்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கிறது. நன்றி.
நடிகர் கூல் சுரேஷ் பேசியதாவது..,
இந்த சங்கத்தின் அறிமுக விழாவிற்கு என்னை அழைத்ததற்கு என் நன்றிகள். இந்த கேமராக்கள் இல்லையென்றால் இந்த கூல் சுரேஷ் இல்லை. பத்திரிக்கையாளர்கள் தான் திரை ஆளுமைகளை வளர்க்கிறார்கள். எங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் தான் காரணம். இந்நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
நடிகர் S V சேகர் பேசியதாவது…,
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு என் வாழ்த்துக்கள். எந்த சங்கத்திலும் அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டுமென்பதில்லை, எவ்வளவு வலிமையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நல்ல எண்ணத்துடன் உழையுங்கள். நல்ல எண்ணத்துடன் வளருங்கள். இந்த சங்கம் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
நடிகர் பிரஜின் பேசியதாவது..,
முதலில் என்னை அழைத்த மீடியா நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இன்று நாம் ஒரு சங்கம் ஆரம்பிக்கிறோம்.
அந்த சங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறோம் என்பதல்ல முக்கியம், என்ன செய்யப் போகிறோம் என்பதே முக்கியம்.
ஆயிரம் பேர் தேவையில்லை. ஐம்பது பேர் ஒற்றுமையாக இருந்தால்,
அந்த சங்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஒரு படம் மக்களிடம் போய் சேர்வதற்கு நீங்கள் தான் முக்கியமான பாலம். காலை முதல் இரவு வரை முகம் சலிக்காமல் நியாயமாகவும், சரியாகவும் நீங்கள் வேலை செய்கிறீர்கள். அதற்காக என் மனமார்ந்த மரியாதையும் நன்றியும். உங்களுடைய சங்கம் நன்றாக வளர வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னால் முடிந்த முழு ஆதரவும் உங்களுக்குக் கண்டிப்பாக இருக்கும். எல்லாருக்கும் நன்றி.
இந்த நிகழ்வில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதில்,
தலைவராக – G. மணிவண்ணன் (Chennai Express),
செயலாளராக – K. பாலமுருகன் (I Tamil News),
பொருளாளராக – R. மனோகர் (Non Stop News Tamil)
ஆகியோர் பொறுப்பேற்றனர்.
மேலும்,
துணைத் தலைவர்களாக
அசோக் சிவா (JSK Prime Media)
M. ரஞ்சித் (Cinema 5D)
E. பிரபு (70 MM)
செயற்குழு உறுப்பினர்களாக
M. மோகன் ராஜ் (Kural TV)
G. பாலாஜி (Mobile Journalist)
C. ஜெகன் (Kalakkal Cinema)
R. ராஜாராம் (BingooBox)
G. லக்ஷ்மணன் (Tamil Star)
M. வெங்கடேஷ் (Non Stop News Tamil)
J. கார்த்தி (Lee Cinema)
விக்னேஷ் (Media Verse)
PRO ஆலோசக குழு உறுப்பினர்களாக
கிளாமர் சத்யா
கோவிந்தராஜ்
மணிமதன்
சட்ட ஆலோசகராக
GB சாம்சன் (Advocate – Legal Advisory)
ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊடக நண்பர்கள், கேமரா பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்முறை அங்கீகாரம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சங்கம் எதிர்காலத்தில் கேமரா பத்திரிகையாளர்களின் உரிமைகளை காக்கும் வலுவான அமைப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது.
ஒற்றுமை, நட்பு மற்றும் ஊடக சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.