‘நேசிப்பாயா’
இயக்கம் – விஷ்ணு வர்தன்
நடிகர்கள் – ஆகாஷ் முரளி , அதிதி ஷங்கர் , குஷ்பூ , சரத்குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு – எக்ஸ் பி ஃபிலிம் கிரியேஷன் – சேவியர் பிரிட்டோ
நாயகன் , நாயகியை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார். காதலர்களுக்கு இடையே திடீரென்று பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட, நாயகி போர்ச்சுக்கல் நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார். நாயகன் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார். இதற்கிடையே, போர்ச்சுக்கல் சென்ற நாயகியை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். தகவல் நாயகன், காதலியை காப்பாற்றுவதற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அவர் நாயகியை காப்பாற்றினரா?, கொலைக்கான பின்னணி, அதில் நாயகி சிக்கியது எப்படி? என்பதை காதலும், மோதலும் கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’.
ஆக்ஷன், வயதுக்கு ஏற்ப சுறுசுறுப்பு என தனது முழு திறமையையும் வெளிக்காட்டக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் நாயகன் ஆகாஷ் முரளி சரியாக பயன்படுத்தியிருக்கிறார். ஆறடி உயரத்தில் ஆக்ஷன் நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட ஆகாஷ் முரளி நிச்சயம் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நாயகனாக உருவெடுப்பார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும் வாழ்க்கையை உணர்ந்த முதிர்ச்சியான பெண் என ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறது. சேசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களின் பாணியில் படமாக்கப்பட்டிருக்கிறது.
வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் நாயகிக்கு பிரச்சனை, அதில் இருந்து அவரை காப்பாற்றும் நாயகன், என்ற ஒன்லைனை வைத்துக்கொண்டு, காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் மென்மையான காதல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.
மொத்தத்தில், இந்த ‘நேசிப்பாயா’ அனைவரையும் நேசிக்க வைக்கும்.
Rating 3.3 / 5