குடும்பஸ்தன்
இயக்கம் – ராஜேஸ்வர் காளிசாமி
நடிகர்கள் – மணிகண்டன் , சான்வே மேகனா , குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன்
இசை – வைசாக்
தயாரிப்பு – சினிமாகாரன் – எஸ் வினோத் குமார்
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு இரு தரப்பு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிப்பதால், வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணமாகி குடும்பஸ்தனாகிவிட்ட பின் பொருளாதார தேவை அதிகரிக்கிறது. எப்படியாவது தனது வேலையில் முன்னேற்றம் அடைந்து குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நாயகன் ஒரு சமயத்தில் வேலையை இழந்துவிடுகிறார். குடும்பத்திற்கு தெரிந்தால் சிக்கலாகிவிடும் என்பதால், வீட்டில் சொல்லாமலேயே வேறு வேலை தேடுகிறான், மேலும் குடும்ப செலவுகளை சமாளிக்க கடன் வாங்குகிறார். எதிர்பார்த்தது போல் வேலை கிடைக்காமல் போக, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் ஓடுவதும் அதே சமயம் தனது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும் என்று பொருளாதார ரீதியான சிக்கல்களில் சிக்கித் தவித்தாலும், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற மனநிலையுடன் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் நாயகன், தனது குடும்பத்தாரின் நடவடிக்கையால் பணம் தான் வாழ்க்கை, என்ற மனநிலைக்கு மாறுகிறார். அவரது மனமாற்றத்தால் அவரது பிரச்சனைகள் தீர்ந்ததா? இல்லையா?, அவரது மனமாற்றம் சரியா ? தவறா?, என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘குடும்பஸ்தன்’.
தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக எதார்த்தமாக கையாண்டு அதை மக்களிடம் சேர்ப்பதில் கெட்டிக்காரரான மணிகண்டன், கதையின் நாயகனாக நடித்தாலும், அதே பாணியிலான கதைக்களம் மற்றும் கதாபாத்திர தேர்வு என்று கதை தேர்வில் மிக தெளிவாக இருக்கிறார். காதல் திருமணம், அதை தொடர்ந்து குடும்பத்தில் எழும் பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகள், அதை சமாளிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், அதில் ஏற்படும் தோல்விகள் என பல இளைஞர்கள் கடந்திருக்கும் அல்லது கடக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை காட்சிகளாக வடிவமைத்து, அதை தனது உடல் மொழி மற்றும் இயல்பான நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும் மணிகண்டன், சில இடங்களில் தான் அடுத்து என்ன செய்யப் போகிறேன், என்பதை படம் பார்ப்பவர்கள் புரிந்துக்க்ண்டு முன் கூட்டியே சிரிக்கும் அளவுக்கு தனது கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் அழுத்தமாக பதிய வைத்து அவர்களின் முழு கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, புதுவரவு என்ற தடம் தெரியாமல் புகுந்து விளையாடியிருக்கிறார். வேறு சாதியைச் சேர்ந்த பெண் என்பதால் கணவரின் உறவினர்கள் ஏலனம் பேச, அதை மிக சாதாரணமாக கையாண்டு பதில் கொடுக்கும் காட்சிகள் முதல், பிரசவ வலியிலும் தனது மாமியார் மீது குற்றச்சாட்டு வைத்து தன் கோபத்தை வெளிப்படுத்துவது என சிறப்பாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
மணிகண்டன் ஒரு பக்கம் தனது நடிப்பால் படத்தை தாங்கிப் பிடிக்க மறுபக்கம் குரு சோமசுந்தரம் தாங்கிப் பிடித்திருக்கிறார். பணம் தான் முக்கியம் என்ற மனநிலையுடன் வாழும் அவர், தனது சீன பயணத்திற்காக தயாராகும் காட்சிகளும், அதில் அவர் செய்யும் அலப்பறைகளும், சிரிக்காதவர்களையும் வாய்விட்டு சிரிக்க வைத்துவிடுகிறது. மணிகண்டனின் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.சுந்தரராஜன், தனது வழக்கமான கோயம்பத்தூர் குசும்புத்தனத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு கொட்டி தீர்த்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் குடசனத் கனகம், தமிழ் தெரியாதவர் என்றாலும், தனது பார்வை மற்றும் உடல்மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்துவிடுகிறார். நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் நிவேதிதா ராஜப்பன், மணிகண்டனின் முதலாளியாக நடித்திருக்கும் இயக்குநர் பாலாஜி சக்திவேல், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், அனிருத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் ஏதோ ஒரு வகையில் பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் கூட நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் என்ற இசையமைப்பாளரின் மெனக்கெடல் தனி கவனம் ஈர்க்கிறது. ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் கேமரா கதாபாத்திரங்களை இயல்புத்தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, அவர்களின் உடல் மொழியை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி, அதில் இருக்கும் நகைச்சுவை உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.
குடும்பத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆணும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக கொண்டு கதை, திரைக்கதை எழுதியிருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ராஜேஷ்வர் காளிசாமி, அதை அளவாக கையாண்டு ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்கள். பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருந்தாலும், சாதி பாகுபாடு பற்றிய சில வசனங்கள் இந்த கதைக்கு தேவையில்லாத ஒன்றாக இருப்பதால், திணிப்பது போல் இருக்கிறது. இருந்தாலும் அதையும் நாகரீகமாக கையாண்டு தற்போதைய காலக்கட்டத்தின் உண்மை தன்மையை வசனங்கள் மூலம் வெளிக்காட்டியதற்கு பாராட்டுகள்.
பலர் கடந்து வந்த வாழ்க்கை, பலர் கடக்க முயற்சித்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை, என பார்வையாளர்களை படத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, குடும்பஸ்தன்களின் கஷ்ட்டங்களை காமெடியாக சொல்லி சிரிக்க வைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கிறார். குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சம்பவங்கள், பல படங்களில் பார்த்த காமெடி கான்சப்ட் என்று படம் ரெகுலர் பார்மெட்டில் இருந்தாலும், சூழல்களை இயல்பாக படமாக்கியிருப்பதோடு, அதில் நடிகர்களை இயல்பாக நடிக்க வைத்து சிரிக்க வைத்திருப்பதால், படத்தின் குறைகளை மறந்து பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக படத்தை ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘குடும்பஸ்தன்’ கலகலப்பான படம்
Rating 3.3/5