கட்ஸ் படம் எப்படி இருக்கு?

‘கட்ஸ்’

இயக்கம் – ரங்கராஜ்
நடிகர்கள் – ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன் , நான்சி, டெல்லி கணேஷ்
இசை – மனோஜ்
தயாரிப்பு – OPRP புரொடக்ஷன் – பிரிதால், ஜெயபாரதி ரங்கராஜ்

ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தையின் தந்தை சில மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். குழந்தை வளரும் பருவத்தில் அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார். சிறு வயதில் தாய், தந்தையை இழந்தவன் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். மனைவி, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு தன்னை
வருத்திக் கொண்டு இருக்கிறார், இந்நிலையில் அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலை செய்தது யார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை சொல்வது தான் ‘கட்ஸ்’.

விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரங்கராஜ், காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என அனைத்து எமோஷன்களையும் அற்புதமாக வெளிக்காட்டியுள்ளார்,

அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்,

மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் வயதானாலும் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார், மேலும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளனர்,

இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் தனது பணியை கையாண்டுள்ளார் .

அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் படத்தொகுப்பாளர் ரஞ்சித் தொகுத்திருந்தாலும், திரைக்கதையை சற்று வேகமாக பயணிக்க வைத்திருக்கலாம்.

நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கவும் செய்திருக்கிறார். சினிமாவின் பல்வேறு காலக்கட்டங்களில் நாம் பார்த்த வழக்கமான பழிவாங்கும் கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் தான் என்றாலும், சில மாற்றங்களோடும், பல திருப்பங்களோடும் விறுவிறுப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார். முதல் படத்திலேயே இயக்குநர், நாயகன் என்று இரட்டை குதிரை சவாரி செய்திருக்கும் ரங்கராஜ், ஒரு நடிகராக தனது திறமையை நிரூபிப்பதற்காகவே காட்சிகளை வடிவமைத்து, பல கெட்டப்புகளில் நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘கட்ஸ்’ சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா.

Rating 3.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *