
“சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்தபோது தேடிவந்த வாய்ப்பு தான் பான் பட்டர் ஜாம்” ; இயக்குநர் ராகவ் மிர்தத் நெகிழ்ச்சி
இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது,
“என்னுடைய முதல் படம் சரியாக போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டு போய்விடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர் நண்பன் சினிமாவாலா சதீஷ். என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி பார்ப்போர் இடமெல்லாம் சிலாகித்து பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே பணம் கொடுத்து உதவுவார். இந்த பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் அன்பான ஒரு மனிதர். வெளிநாட்டு பாணியில் படங்களை எடுக்கலாமே என கதை சொல்ல வந்தால் இங்கே இருக்கும் சினிமா வேற மாதிரி இருக்கும் தயாரிப்பாளர்களே கிடைக்க மாட்டார்கள். அவர் தயாரிப்பாளராக வரும்போதே கதையின் ஒன் லைன் வைத்திருந்தார். ஆனால் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். போட்டோ ஷூட் பண்ணாமல் டிசைன்களை வரைய வேண்டும் என்று சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். நான் கேட்ட எல்லாவற்றையும் மறுக்காமல் கொடுத்தார். நான் தனித்தன்மையாக என்னென்ன விஷயங்களை பண்ண வேண்டும் என நினைத்தேனோ அது எல்லாவற்றுக்குமே அனுமதி கொடுத்தார். அவருக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த படம் சாத்தியமில்லை. நடிகர் ராஜூ ஜெயமோகன் இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய கிப்ட். வாழ்க்கையே முடிந்தது, சினிமாவை விட்டு வேறு ஏதாவது வேலைக்கு போகலாம் என நினைத்தபோது இந்த படம் தான் எனக்கு நம்பிக்கை தந்தது” என்று கூறினார்