ஜென்ம நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு?

‘ஜென்ம நட்சத்திரம்’

இயக்கம் – மணி வர்மன்
நடிகர்கள் – தமன் ஆக்சன், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா ஷெரின்
இசை – சஞ்சய் மாணிக்கம்
தயாரிப்பு – சுபாஷிணி கே – அமோகம் ஸ்டுடியோ

கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான எளிமை வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள், மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதோடு, சில பயங்கரமான உருவங்களும் கனவில் வந்து போகிறது. பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் கோடிக்கணக்கான பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஒருவர், அந்த தகவலை தமனின் நண்பர்களிடம் தெரிவித்துவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு உயிருக்கு போராடும் தனது பெண் குழந்தையை காப்பாற்றுமாறு கூறிவிட்டு இறந்து போகிறார். பணத்தை எடுப்பதற்காக கணவன் , மனைவி மற்றும் அவர்களது நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்ல, அந்தப் பெண் தன் கனவில் பார்க்கும் பயங்கரமான உருவங்களை அந்த இடத்தில் பார்க்கிறார். அதே சமயம்,  பணத்தை தேடும் நாயகன் அந்த இடத்தில் சாத்தான் வழிபாட்டு முறைகளுக்கான தடயங்களை கண்டுபிடிக்க, பணத்தை தேடும் அவரது நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள். அவர்களை நாயகம் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு?, இவை அனைத்தும் எதனால் நடக்கிறது?, என்பதை விவரிப்பதே இந்த ’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் தமன், அவரது மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கெட்ட கனவுகளால் எப்போதும் பயந்தபடியே காணும் மால்வி மல்ஹோத்ராவும், அமானுஷ்ய சம்பவங்களை தைரியமாக எதிர்கொண்டு உண்மையை கண்டுபிடிக்கும் தமனும், மொத்த படத்தை தோளில் சுமந்திருக்கிறார்கள்.

மேலும் தமனின் நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலியாக நடித்திருக்கும் ரக்‌ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி ஆகியோர் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மற்றும் திரை இருப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள். தலைவாசல் விஜய், சந்தான பாரதி, நக்கலைட்ஸ் நிவேதிதா, யாசர் என ஒரு சில காட்சிகளில் முகம் காட்டியிருப்பவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார், பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் கதைக்கு ஏற்ப கொடுத்திருக்கிறார். திகில் காட்சிகளில் பார்வையாளர்களின் பயத்தை பின்னணி இசை அதிகரிக்கச் செய்கிறது. ஒளிப்பதிவாளர் கே.ஜி, பாழடைந்த தொழிற்சாலையையும், அதில் நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்கள் மிரளும் வகையில் படமாக்கியிருக்கிறார். அமானுஷ்ய காட்சிகளில் கிராபிக் காட்சிகள் நன்றாக இருந்தது,

சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக இயக்குநர் பி.மணிவர்மன் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார். மனிதர்கள் உருவத்தில் கடவுளை பார்ப்பது போல், சாத்தானையும், அதன் செயலையும், மனிதர்கள் உருவத்திலும், அவர்களது செயலிலும் வெளிக்காட்டியுள்ளார் இயக்குநர் பி.மணிவர்மன்.

மொத்தத்தில், ‘ஜென்ம நட்சத்திரம்’ அமானுஷ்யம் நிறைந்த ஒரு திகில் அனுபவம்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *