
‘கெவி’
இயக்கம் – தமிழ் தயாளன்
நடிகர்கள் – ஆதவன் , ஷீலா , ஜேக்குலின், சார்லஸ் வினோத் , காயத்ரி
இசை – பாலசுப்ரமணியன்
தயாரிப்பு – மணி கண்ணன், பெருமாள் கோவிந்தசாமி , ஜகன் சூர்யா – காமன் மேன்
ஒரு மலை கிராமத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை , சாலை வசதி, மருத்துவ வசதி என மக்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட இல்லாத அந்தப் பகுதியில் ஒருவர் அங்குள்ள வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார், ஐபி இருக்கும் நிலையில் தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களை சந்திக்க வரும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பதோடு, அவர்களுடன் வந்த வனத்துறை காவலர்களுடன் மோதலில் ஈடுபடுகிறார். இதனால், அவர் மீது கோபமடையும் வனத்துறை அதிகாரி அவரை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நிறைமாத கர்ப்பிணி மனைவியை தனியாக விட்டு விட்டு, மலையை விட்டு கீழே இறங்கும் போது, வனத்துறை அதிகாரியும், காவலர்களும் சேர்ந்து அவனை கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட, போக்குவரத்து வசதியில்லாத அந்த கிராமத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் தாய் மற்றும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. வனத்துறை காவலர்களிடம் சிக்கி நாயகன் உயிருக்கு போராட, மறுபக்கம் அவரது கர்ப்பிணி மனைவியையும், கருவில் இருக்கும் குழந்தையையும் காப்பாற்ற கிராம மக்கள் போராடுகிறார்கள், இறுதியில் இவர்களது போராட்டம் என்ன ஆனது? என்பதே இந்த ‘கெவி’.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக மலையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தனக்கு கொடுத்த கதாபாத்திரதை சிறப்பாகவும் நடித்திருக்கிறார். வனத்துறை காவலர்களிடம் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் காட்சியில் விசாரணை பட அட்டகத்தி தினேஷ் நியாபகம் வருகிறது. அவர் ஒவ்வொரு முறையும் தப்பித்து மீண்டும் அவர்களிடம் சிக்கும் போது, பார்வையாளர்கள் மனம் பதபதைக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருக்கும் ஷீலா, எப்போதும் போல் இயல்பாகவும், பாவமாகவும் நடித்து பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். பிரசவ வலியால் தவிப்பவர், டோலியில் பயணித்தாலும், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் கண்கலங்க வைத்துவிடுகிறார். பயிற்சி மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலின், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத், முதன்மை மருத்துவராக நடித்திருக்கும் காயத்ரி, கடுக்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விவேக் மோகன், தர்மதுரை ஜீவா, போஸ்ட் மேனாக நடித்திருக்கும் உமர் ஃபரூக் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பாலசுப்ரமணியன்.ஜி-ன் இசையமைத்துள்ளார் , வைரமுத்து, யுகபாரதி, வினையன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதைக்களத்தில் இருக்கும் ஆபத்தை பார்வையாளர்கள் உணரச் செய்து, இறுதி வரை பதற்றத்துடன் பயணிக்க வைக்கிறது. மேலும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா, ஆபத்தான மலை கிராமங்களையும், அதில் வாழும் மக்களின் வலியையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
நகரங்களில் தொழில்நுட்பம் நம்ப முடியாத அளவில் வளர்ச்சியடைந்திருக்கும் தற்போதைய நவீன காலக்கட்டத்திலும், மருத்துவ வசதி மற்றும் சாலை வசதி இல்லாத கிராமங்களில் வாழும் மக்களின் வலியையும், அவர்கள் அன்றாட சந்திக்கும் உயிர் பலியையும் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் தமிழ் தயாளன், அவர்களை தேர்தல் நேரத்தில் மட்டுமே சந்திக்கும் ஆட்சியாளர்கள் பற்றியும் தைரியமாக சொல்லியிருக்கிறார். கண்டிப்பாக இயக்குனருக்கு பாராட்டு கொடுத்தே ஆக வேண்டும்.
மொத்தத்தில், ‘கெவி’ மலைக்கிராம மக்கள் அன்றாட சந்திக்கும் வலியின் ஒரு தொகுப்பு.
Rating 3.3/5