’யாதும் அறியான்’ படம் எப்படி இருக்கு?

’யாதும் அறியான்’

இயக்குனர் – என். கோபி
நடிகர்கள் – தினேஷ், ஆனந்த் பாண்டி , அப்பு குட்டி, ஷியாமல்
இசை – தர்ம பிரகாஷ்
தயாரிப்பு – பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்

வழக்கமான ஒரு காதல் ஜோடிகள் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வருகின்றனர், காதலியுடன் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்று காதலன் ஆசைப்படுகிறார். ஆனால், கண்ணத்தில் முத்தம் கொடுப்பதற்கே அனுமதி மறுக்கும் அந்தப் பெண், மற்ற விசயங்கள் திருமணத்திற்குப் பிறகு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். தனது வரட்சியான காதல் பற்றி நண்பரிடம் கவலைப்படும் அவனுக்கு அவரது நண்பர் ஒரு யோசனை சொல்கிறார். அவரது யோசனைப்படி, தனது காதலி மற்றும் நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடியினர் வனப்பகுதியில் இருக்கும் சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள். அந்த விடுதியின் பணியாளராக ஒருவர் இருக்கிறார்.நண்பரின் யோசனைப்படி தனது காதலியுடன் உடலுறவு கொள்ள காதலன் முயற்சிக்கிறார். அவரின் முயற்சிக்கு முதலில் முட்டுக்கட்டை போடும் அப்பெண், பிறகு அவரது தொடர் முயற்சிக்கு அடிப்பணிந்து அவருடன் இணைந்து விடுகிறார். அனைத்தையும் முடித்துவிட்டு, சாதித்த மனநிலையில் இருக்கும் அவருக்கு அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெண் பேரதிர்ச்சி கொடுக்கிறார். அதில் இருந்து மீள்வதற்காக உதவிக்கு தனது நண்பரை அழைக்கும் காதலன் அவரது நண்பரும், காதலியும் அதைவிட பேரதிர்ச்சியை கொடுக்கிறார்கள். இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியாக அவர் பயணித்த 2024 ஆம் ஆண்டு, 2026 ஆக மாறுகிறது. இந்நிலையில் அவனுக்கு எதிராக நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களின் பின்னணி என்ன? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘யாதும் அறியான்’.

இப்படத்தில் அறிமுக நாயகன் தினேஷ்,தனக்கான கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு காதலியிடம் அவர் செய்யும் சில்மிஷங்கள் திரையரங்கை அதிர வைக்கிறது. முதல் பாதியில் அப்பாவியாக நடிப்பவர், இரண்டாம் பாதியில் அவரா இவர்!, என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு நடிப்பில் மிரட்டியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரானா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக நடித்திருக்கும் ஷ்யாமல், விடுதி பணியாளராக நடித்திருக்கும் அப்புக்குட்டி என அனைவரும் அளவாக நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை திரில்லர் காட்சிகளில் இருக்கும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் எல்.டி வனப்பகுதியில் இருக்கும் பழைய சொகுசு சொகுசு விடுதியை பார்வையாளர்களுக்கு பீதி ஏற்படும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஒரு அறையில் நடக்கும் சம்பவங்களையும் நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

ஒரு எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு, பல திருப்பங்கள் மூலம் வித்தியாசமான சைக்கோ திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் எம்.கோபி, 2024 ம் வருடம் நடக்கும் கதையை, 2026 -ம் ஆண்டில் பயணிப்பது போன்று திரைக்கதை அமைத்திருப்பதோடு, அதில் தமிழக அரசியலில் ஏற்பட இருக்கும் மாற்றத்தினை தனது கற்பனையாக காட்சிப்படுத்திய விதம், என பல விசயங்களை எளிமையாக சொல்லியிருந்தாலும், அதன் மூலம் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நாயகனை சுற்றி நடக்கும் அனைத்து மர்மங்களுக்குப் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது, என்று எதிர்பார்ப்பை கொடுக்கும் இயக்குநர் கோபி, படத்தின் ஆரம்பத்தில் நாயகன் மருத்துவரிடம் தன் கதையை சொல்லும் காட்சியை வைத்து, படத்தின் இறுதியில் என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸை அவரே உடைத்திருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்தாலும், அந்த பலவீனத்தை பலமாக மாற்றும் வகையில், நாயகனின் நண்பர்கள் விசயத்தில் இருக்கும் மற்றொரு சஸ்பென்ஸுடன் படத்தை முடித்து இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ படத்தை கண்டிப்பாக பார்து அறிந்து கொள்ளுங்கள்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *