’ஹரி ஹர வீரமல்லு’ படம் எப்படி இருக்கு?

’ஹரி ஹர வீரமல்லு’

இயக்கம் – ஜோதி கிருஷ்ணா
நடிகர்கள் – பவன் கல்யாண், பாபி டியால், நிதி அகர்வால்
இசை – கீரவாணி
தயாரிப்பு – மெகா சூர்யா புரொடக்ஷன் – தயாகர் ராவ், ஏ எம் ரத்னம்

பணக்காரர்களிடம் இருந்து செல்வங்களை திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வேலையை ஒருவன் செய்து வருகிறான், முகலாய மன்னர் சிம்மாசனத்தில் பதித்து வைக்கப்பட்டுள்ள கோஹினூர் வைரத்தை திருடுவதற்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணம் வெற்றி பெற்றதா? இல்லையா ? என்பதை முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் வரலாற்று கதையோடு, பல கற்பனை சம்பவங்களையும் சேர்த்து சொல்லியிருப்பது தான் இந்த ‘ஹரி ஹர வீரமல்லு’.

ஹரி ஹர வீரமல்லு என்ற வீரனாக நடித்திருக்கும் பவன் கல்யாண், படம் முழுவதும் மாஸாக வலம் வருகிறார். இந்து மதத்தின் பெருமை பேசுவது, ஏழைகளுக்கு உதவுவது, இஸ்லாமிய மக்களுடன் நட்பு பாராட்டுவது என்று முழுக்க முழுக்க அரசியல்வாதியாகவே பயணித்திருப்பவர், தனது சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி அசத்துகிறார். நடிப்பு அரசியல் என இரண்டு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உள்ளார்,

இதில் நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை எனினும் தனக்கு கொடுத்த கதாபாத்திரதை அற்புதமாக செய்துள்ளார். முகலாய மன்னர் அவுரங்கசீப்பாக நடித்திருக்கும் பாபி தியோல் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். முகலாய மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பவர், தனது கண்கள் மூலமாகவே இந்துக்கள் மீதான தனது இனவெறியை வெளிக்காட்டி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

சத்யராஜ், நாசர், நர்கிஸ் ஃபக்ரி, நோரா ஃபடேஹி, ஈஸ்வரி ராவ், விக்ரமஜீத் விர்க், சச்சின் கடேகர், ரகு பாபு, சுனில், கபிர் பெடி, சுப்பராஜு, கபிர் துஹான் சிங், தணிகலபரணி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார், அவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. தாளம் போடும் வகையிலும், முனுமுனுக்கும் வகையிலும் பாடல்களை கொடுத்திருப்பவர், பின்னணி இசையின் மூலம் படத்தின் மாஸ் காட்சிகளுக்கே மாஸ் காட்டியிருக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் வி.எஸ் மற்றும் மனோஜ் பரமஹம்சா படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளில் குறை இருந்தாலும், அதை மறைக்கும் விதத்தில் ஒளிப்பதிவாளர்களின் பணி அமைந்திருக்கிறது.

முகலாய மன்னர்களின் வீரம், ஆட்சி, போர், கட்டிடக்கலை உள்ளிட்ட பெருமைகளை மட்டுமே அறிந்திருக்கும் இந்திய மக்களுக்கு அவர்களது ஆட்சிக்காலத்தில் இந்துக்கள் அனுபவித்த துன்பங்களை விவரிப்பதோடு, அதில் இருந்து அவர்களை காப்பாற்ற இந்து மதத்தில் இருந்து வீரன் ஒருவன் உருவெடுத்தான், என்ற கற்பனையை பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடனுடனும், மாஸ் காட்சிகளுடனும் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா. எழுதி இயக்கியிருக்கும் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா வரலாற்று கதையோடு தனது கற்பனை கதையையும் சேர்த்து, பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் சாகசங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படத்தை கொடுத்திருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் ஒரு சில மதம் சார்ந்த வசனங்கள் மற்றும் காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், சினிமா ரசிகர்களை திருப்திப்படுத்தும் முழுமையான பொழுதுபோக்கு படம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில், ‘ஹரி ஹர வீரமல்லு’ ஒரு பக்காவான கமர்ஷியல் ஹிட்.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *