போகி படம் எப்படி இருக்கு?

‘போகி’

இயக்குனர் – விஜயசேகரன். எஸ்
நடிகர்கள் – நபி நந்தி , சரத், ஷ்வாசிகா, பூனம் கவுர்
இசை – மரியா மனோகர்
தயாரிப்பு – வி சினிமாஸ் குளோபல் நெட்வொர்க் & லைக் பிரெசென்ட்

ஒரு கும்பல் ரகசிய கேமாராக்கள் மூலம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலையை செய்கிறது, அவர்களை தகுந்த ஆதாரங்களுடன் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபடுகிறது. மறுபக்கம் அந்த கும்பலை சேர்ந்தவர்களை தேடிப்பிடித்து இருவர் கொலை செய்கிறார்கள். இதற்கிடையே, சிறுவயதில் பிரிந்து சென்ற தோழியை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நாயகன் அவள் மீதான தனது காதலை வெளிப்படுத்த முடியாமல், தனது கொலை வெறிப் பயணத்தை தொடர்கிறார். அவனுக்கும் இந்த கும்பலுக்கும் என்ன தொடர்பு ? என்பதை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான முக்கிய காரணத்தை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த சொல்வதே ‘போகி’.

இதில் நாயகனாக நடித்திருக்கும் நபி நந்தி, அறிமுக நடிகர் என்றாலும் முதல் படம் போல் தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தங்கை மீது பாசம் வைத்திருக்கும் அண்ணனாக அளவாக நடித்திருப்பவர், தனது தங்கைக்கு ஏற்பட்ட கொடூரத்திற்காக பழி தீர்க்கும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார். இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்தால் தன்னை நிரூபிப்பார்,

நாயகனின் தங்கையாக, கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, இளமையாக இருக்கிறார். பல போராட்டங்களை கடந்து படித்து முன்னேறும் பழங்குடி இன பெண்களை பிரதிபலித்திருப்பவர், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டு சிதைக்கப்படும் பெண்களின் உடல் ரீதியான மற்றும் மன போராட்டங்களை தனது நடிப்பு மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார். நாயகனின் பழி தீர்க்கும் பயணத்தில் அவருடன் பயணிக்கும் சரத், ஒரு பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விக்கும் பூனம் காவுர், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, வில்லன் கதாபாத்திரத்தில், வித்தியாசமான லுக்கில் நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன், ஒரு காட்சியில் வந்தாலும் தனது சில்மிஷ நடிப்பால் சிரிக்க வைக்கும் எம்.எஸ்.பாஸ்கர், மூத்த நடிகர் சங்கிலி முருகன், ‘பிச்சைசக்காரன்’ கார்த்தி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் மரியா மனோகர் இசையில், சினேகனின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை அதை விட சிறப்பு .

ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர் வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் கதையை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மலை கிராம மக்களின் வேதனைகளையும், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களினால் பாதிக்கப்படும் அப்பாவி பெண்களின் வலிகளையும் பார்வையாளர்களிடம் கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியிருப்பதோடு, பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி படத்தை கமர்ஷியலாக முன்னிறுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் விஜயசேகரன்.எஸ்- சமூக பிரச்சனையையும், பழங்குடி இன மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையையும், நாட்டில் நடந்த சில உண்மை சம்பவங்களையும் மையமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதை வெறும் சோகமாக மட்டும் சொல்லாமல், நகைச்சுவையாகவும், காதல், ஆக்‌ஷன், பாடல் என்று கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார். பாலியல் ரீதியிலான குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் இறந்த பிறகும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையையும், சமூக ஊடக மோகம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு ஆகியவற்றால் அவர்களுக்கே தெரியாமல், அவர்களது அந்தரங்க வீடியோக்களை வைத்து வியாபாரம் செய்யும் கும்பல், என்று பல முக்கிய பிரச்சனைகளை பேசியிருக்கிறார் இயக்குநர் விஜயசேகரன். குறைகள் இருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்க கூடிய பிரச்சனைகள் மற்றும் அதை பிரச்சாரம் போல் அல்லாமல், ஜனரஞ்சகமான முறையில் சொல்லியிருப்பது படத்தை பார்க்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘போகி’ சமூகத்தில் கொளுத்த வேண்டிய ஒரு பிரச்சினையின் பிரதிபலிப்பு.

Rating 3.3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *