
கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!
இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.
விளம்பரத் துறையில் முன்னணி எடிட்டராக பெயர் பெற்ற அபின் ஹரிஹரன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது கேரியரை மலையாள சேட்டிலைட் தொலைக்காட்சியில் 3D அனிமேட்டராக தொடங்கிய அவர், பின்னர் துபாயில் திரைப்பட விளம்பர எடிட்டராக சிறந்து விளங்கினார். கார்ப்பரேட் துறையிலும், பிரபலங்களின் போட்டோஷூட் நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர். எடிட்டிங், அனிமேஷன், போட்டோஷூட் ஆகிய துறைகளில் பல்துறை திறமையுடன் தன் தனித்துவத்தை நிரூபித்து, தற்போது இயக்குநராக வளர்ந்துள்ளார். இவரது கதை சொல்லும் திறனும் மற்றும் செட்டில் வேகமாக பணியாற்றும் திறனும், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படத்திற்கு டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான், பாடல்களும், பின்னணி இசையும் அமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர், லப்பர் பந்து போன்ற ஹிட் ஆல்பங்களைத் தந்த மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அசுரன், விடுதலை போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எடிட்டர் ராமர், இந்தப் படத்தை எடிட் செய்துள்ளார். உமா சங்கர் வடிவமைத்த செட் டிசைன்கள், படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது.
தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) முரளி தயாரிப்பிலும், கார்த்திக் G இணைத் தயாரிப்பிலும், முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.
நடிப்பு, கதை, தொழில்நுட்பம் என எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் “அதர்ஸ்“ திரைப்படம் பார்வையாளர்களை கவரத் தயாராகவுள்ளது.