
‘குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், “ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். ‘குற்றம் புதிது’ படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை” என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி, “நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை” என்றார்.
நடிகை பிரியதர்ஷினி, ” இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
‘கெவி’ பட இயக்குநர் தமிழ் தயாளன், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்”.
தயாரிப்பாளர் கணேஷ், ” எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்”.
நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், ” படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்”.
தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், ” சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு, ” வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது ‘குற்றம் புதிது’ படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்”.
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், ” கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி”.
இயக்குநர் ஹரி உத்ரா, ” இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்”.
உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா ” கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் ‘குற்றம் புதிது’ ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.