
இயக்குநர் லிங்குசாமியின் ஹைக்கூ கவிதை 3-வது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள் நூல் வெளியீட்டு விழா’
“ரத்தத்தை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளுக்கு கூட ரத்த தானம் செய்கிறவர் தான் லிங்குசாமி” ; பிருந்தா சாரதி
“லிங்குசாமி என் நண்பன்.. அன்பன்” ; நூல் வெளியீட்டு விழா’வில் நெகிழ்ந்த கௌதம் வாசுதேவ் மேனன்
“கமல் சாருடன் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யுங்கள்” ; நூல் வெளியீட்டு விழாவில் பகிரங்கமாகவே கோரிக்கை வைத்த இயக்குநர் லிங்குசாமி
தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநர்களில மிக முக்கியமானவர் இயக்குநர் லிங்குசாமி. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி, தன் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இவருக்கு இயக்குநர் என்பதையும் தாண்டி கவிஞர் என்கிற இன்னொரு முகமும் உண்டு. சொல்லப்போனால் அவருக்குள் இருந்த கவிஞர்தான் அவரை சினிமாவுக்காக சென்னைக்கு அழைத்து வந்ததே என்று சொல்லலாம். அப்படி தனக்குள் இருந்த கவிதைக்கு ஹைக்கூ வடிவம் கொடுத்து ஏற்கனவே இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. தற்போது அவரது ஹைக்கூ கவிதைகளின் மூன்றாவது தொகுப்பாக ‘பெயரிடப்படாத ஆறுகள்’ என்கிற பெயரில் லிங்கூ-3 புத்தகத்தை தொகுத்து எழுதியுள்ளார் இயக்குநர் லிங்குசாமி.
இந்த கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகை அபிராமி, வசனகர்த்தா பிருந்தா சாரதி, பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா, படைப்புக்குழுமம் ஜின்னா, விஷ்ணு அசோசியேட்ஸ் சிவகுமார், கவிஞர் ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த நூலை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட நடிகை அபிராமி பெற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும்போது,
“இயக்குநர் லிங்குசாமி விடியற்காலை 4 மணிக்கு என்னை எழுப்பி தனக்கு தோன்றிய கவிதையை சொல்லுவார். அவர் எழுப்பும்போது ஒரு பக்கம் கோபமாக இருந்தாலும் கூட, அவர் கவிதையை கேட்டதும் அந்த கோபம் பறந்து ஒரு மணி நேரம் பேசுவோம். இன்று ஆறுகளே காணாமல் போய்விட்ட நிலையில் கண்ணாடி ஜன்னலில் வழிந்தோடும் மழை நீருக்கு என்ன பெயர் வைப்பது என்கிற ஒரு அழகியலான விஷயத்தை தான் இந்த புத்தகத்திற்கு தலைப்பாக வைத்துள்ளார். ஹைக்கூ ஜப்பானிய வடிவம் என்று சொன்னாலும் கூட நம் இலக்கியங்களில் குறைந்தபட்சம் மூன்று வரிகளில் இருந்து அதிகபட்சமாக கவிஞரின் கற்பனை எல்லை வரை பாடக்கூடிய குறும்பா என்கிற வடிவம் இருந்துள்ளது. இந்த காலத்திற்கு ஏற்ற சூழலில் அனைவரையும் கவரும் விதமான படைப்பாக இயக்குநர் லிங்குசாமி இதை கொடுத்துள்ளார். லிங்குசாமியின் இந்த ஹைக்கூ கவிதைகளுக்கு தனது அற்புதமான ஓவியத்தால் இன்னும் உயிரூட்டி உள்ளார் ஓவியர் தமிழ் பித்தன்” என்று பேசினார்.
கவிஞர் ஜின்னா பேசும்போது,
“யார் யாரை ஆட்டி வைப்பது.. நடராஜர் முன் எரியும் சுடர்.. என்கிற ஒரு கவிதையை எழுதிவிட்டு என்னை அழைத்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்த நூலுக்கான முதல் கவிதை இப்படித்தான் ஆரம்பித்தது. ஏற்கனவே அவரது இரண்டு ஹைக்கூ புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில் இந்த மூன்றாவது புத்தகத்தை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டு வர தீர்மானித்தோம். அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து இயக்குநர் லிங்குசாமியின் நண்பர் அவருக்கு ஓசோ எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியிருந்தார். 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டிருந்த விதமே வித்தியாசமாக இருந்தது. அதேபோன்ற ஒரு அமைப்பில் இந்த புத்தகத்தை உருவாக்க தீர்மானித்தோம். தமிழ்நாட்டில் இந்த வடிவமைப்பில் உருவாகும் முதல் புத்தகம் இதுதான். எங்களது இந்த படைப்பு குழுமம் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 485 நூல்களை பிரசுரம் செய்துள்ளோம். லிங்குசாமியின் இந்த ஹைக்கூ கவிதை புத்தக வெளியீடு எங்களது பத்தாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக இப்போது நடைபெறுகிறது. இப்படி நூல்கள் மூலம் கிடைக்கும் தொகை கவிஞர் காப்பீட்டு திட்டம் மூலமாக வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள கவிஞர்களை அரவணைத்து செல்வதற்காகவே செலவிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள 178 சிறைச்சாலைகளில் தமிழக அரசு அமைந்துள்ள நூலகங்களுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்களை இலவசமாக வழங்க இருக்கிறோம்” என்று பேசினார்.
வசனகர்த்தா பிருந்தா சாரதி பேசும்போது,
“இயக்குநர் லிங்குசாமியை பொறுத்தவரை சினிமாவில் பாடல்களுக்கும் வசனங்களுக்கும் கூட கவிதைகளால் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். நாங்கள் இருவரும் அறிமுகமானது இந்த ஹைக்கூ கவிதை மூலமாக தான் எங்களுடைய கல்லூரி பேராசிரியரை நான் பார்க்க சென்றிருந்தபோது, அப்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த லிங்குசாமி அந்த ஆண்டு கல்லூரி மலரில் இடம் பெறுவதற்காக தனது ஹைக்கூ கவிதையை பேராசிரியரிடம் கொடுத்தார். கணவனுக்கு தெரியுமா கற்பூர வாசனை என்கிற அந்த தலைப்பை பார்த்ததுமே எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. அப்போது முதல் லிங்குசாமிக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது.
அதன் பிறகு சென்னையில் நடக்கும் ஒரு கவிதை போட்டிக்கு கவிதை அனுப்புவதற்கான நடைமுறைகளை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு கவிதையை அனுப்பினார். அதற்கு முந்தைய வருடம் நான் அப்படி அனுப்பி பரிசு வாங்கியிருந்தேன். அடுத்த வருடமே லிங்குசாமி அந்த பரிசை வாங்கினார். லிங்குசாமியின் ஒவ்வொரு ஹைக்கூவிலும் ஒரு காட்சி இருக்கணும், ஒரு வாழ்வியல் இருக்கணும், அது இந்த உலகத்தில் அழியாத ஒரு பேருண்மை இருக்க வேண்டும் என நினைப்பவர். இந்த அடிப்படை அம்சங்களை தனது முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து வருகிறார் லிங்குசாமி.. உதவி என்று யாராவது கேட்டு வந்து விட்டால் அதற்காக உயிரை பணயம் வைக்கக் கூடியவர் லிங்குசாமி. கொரோனா காலகட்டத்தில் இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சமயத்தில் யாருமே அருகில் செல்ல கூட அஞ்சிய அந்த நேரத்தில் துணிச்சலாக அருகில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லியவர் லிங்குசாமி. வசதியாக இருந்த நேரத்தில் சிலருக்கு தொடர்ந்து கல்லூரி படிப்பு கட்டணம் கட்டியவர், சற்று சரிவை சந்தித்த நிலையில் கூட கடன் வாங்கி அவர்களுக்கு அந்த படிப்பு கட்டணத்தை தொடர்ந்து செலுத்தினார். ரத்தத்தை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளுக்கு கூட ரத்த தானம் செய்கிறவர் தான் லிங்குசாமி. இதுதான் அவரை ஒரு அற்புத மனிதராக நல்ல கவிஞராக ஒரு இயக்குனராக ஆக்கி இருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசும்போது,
“இயக்குநர் லிங்குசாமியின் வட்டத்திலேயே எவ்வளவோ பேர் இருக்க எதற்கு இந்த நிகழ்விற்கு என்னை அழைத்து இந்த நூலை வெளியிட சொல்கிறார் என்றெல்லாம் நான் சொல்லப்போவதில்லை. ஏனென்றால் என்னுடைய நண்பன், அன்பன் லிங்குசாமி. இந்த பெயரிடப்படாத ஆறுகள் நூலை நான் தான் வெளியிட வேண்டும். இதற்கான காரணம் எனக்கும் லிங்குசாமிக்கும் மட்டும்தான் தெரியும். நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்று என் நண்பனுக்கு நன்றாக தெரியும். உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கலைஞன் என் நண்பன் என்பது எனக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் இந்த விழாவில் நான் இருக்கிறேன்.
ஒவ்வொருவருக்கும் நான்கு மணி பிரண்டு என்று ஒருவர் இருப்பார்கள். லிங்குசாமியின் நாலு மணி நண்பன் நான் தான். என்னுடைய ஏழு மணி நண்பன் லிங்குசாமி தான். லிங்குசாமி நிறைய பேச நான் கேட்டுக் கொண்டிருப்பேன். சீரியஸான சமயங்களில் கூட என்னை சிரிக்க வைத்து விடுவார், அவரது பேச்சில் பஞ்ச் லைவ் புளோவாக வந்து கொண்டே இருக்கும். என்னுடைய நலனில் மிகவும் அக்கறை உள்ளவர். என்னுடைய திரைக்கு வராத ஒரு படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு பல பேரிடம் பேசி அதை திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நூலைப் படித்ததும் என்ன ஒரு சிந்தனை, இப்படி ஒரு கற்பனை என எனக்கு தோன்றியது. என்னுடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமான கவிதைகள் இதில் இருந்தது. சிறிய வட்டம் நிலா.. பெரிய வட்டம் வானம்.. கிணற்றுத் தவளைக்கு என்கிற ஹைக்கூவை என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயமாக நான் பார்த்தேன். அந்த கிணற்றுத் தவளை என்பது நான் தான். சிறிய வட்டம் நிலா என்பது என்னுடைய ரிலீஸ் ஆகாத அந்த படம். பெரிய வட்டம் என்பது சினிமா, என்னுடைய வாழ்க்கை எல்லாமே. அதற்குள் போவதற்கு இந்த சிறிய வட்டத்தை தாண்டித்தான் நான் செல்ல வேண்டும். பயமாக இருக்கிறது. அந்த சிறிய வட்டத்திற்குள் செல்வதற்கே எனக்கு ஒரு ஆர்ம்ஸ்ட்ராங் தேவைப்படுகிறது. தீக்குச்சி உரசிய அதே கணத்தில் வானில் மின்னல் என்கிற ஹைக்கூவை படித்ததும் ரன் படம் பார்த்த எபெக்ட் கிடைத்தது. இந்த புத்தகத்தைப் படித்தபோது இன்னும் 20 ஹைக்கூக்கள் இதில் இருந்திருக்கலாமோ என தோன்றியது” என்று பேசினார்.
நடிகை அபிராமி பேசும்போது,
எனக்கு மொழியின் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கிறது. நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து இருந்தாலுமே, தமிழ் அழகாக பேச வேண்டும் என்பதற்காக நிறைய முயற்சி எடுத்தேன். இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள லிங்குசாமி சார் எனக்கு அழைப்பு விடுத்ததுபோது என்னை ஏன் அழைக்கிறார் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது ஆசை ஆசையாய் வாங்கினேன் புத்தர் சிலை என்கிற ஒரு ஹைக்கூவை சொன்னார். அவர் சொன்னதுமே நான் சிரித்து விட்டேன். உடனே இந்த கவிதையை நீ புரிந்து கொண்டாய் இல்லையா அதனால் தான் உன்னை அழைத்தேன் என்றார். இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள தகுதியானவள் என என்னை நினைத்து அழைத்ததற்கு நன்றி. நான் எப்போதோ பாடிய ஒரு பாரதியார் பாடல் மூலமாக என்னுடைய திரையுலக பயணத்தில் மிகச்சிறந்த படமான விருமாண்டியில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்கிற புதிய தகவலை இன்று பேராசிரியர் ஞானசம்பந்தன் மூலமாக அறிந்து கொண்டது இன்னொரு மகிழ்ச்சி. எனது இசை குரு சாரதா கல்யாணசுந்தரத்தை நான் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இந்த குறுங்கவிதை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே நானும் ஒரு குறுங்கவிதை ஒன்றை பாராட்டாக எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். “உன் ‘பென்’னிலிருந்து பிறந்த படைப்பை பெற்றுக்கொள்ள வந்தேன் இந்தப்பெண்.. என் நண்பனின் முனைப்பு என் பெண் முனையை திருத்த வைத்தது.. சிலந்தி வலைகளில் உள்ளுக்குள் சிக்கிக்கிடந்த என் கற்பனையை பிரித்தெழுப்பிய உங்களுடைய இந்த நூலுக்கு நன்றி” என்று பேசினார்
விஷ்ணு அசோசியேட்ஸ் சிவகுமார் பேசும்போது,
“ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரை விமானத்தில் செல்லும்போது லிங்குசாமியை சந்தித்தேன். அதற்கு முன்பு தான் லிங்குசாமி எழுதிய ஒரு புத்தகத்தை படித்து, ஒரு இயக்குநர் கவிதை புத்தகம் எழுதுகிறாரா, சினிமாவில் இருப்பவர்கள் இப்படி கவிதை, புத்தகம் என எழுத மாட்டார்களே என்று ஆச்சரியப்பட்டு இருந்தேன். இந்த புத்தகத்தைப் படிக்க படிக்க அவ்வளவு சந்தோஷம் ஏற்பட்டது. கவிதை என்கிற உலகத்தில் ஒரு ஓரமாக நான் அமர்ந்திருந்தேன். என்னை இழுத்து வந்து நடுவில் அமர வைத்தவர் லிங்குசாமி. ஹைக்கூவாக இருந்தாலும் கவிதையாக இருந்தாலும் இன்னும் நிறைய வெளியிட செய்ய வேண்டும் என்பது என் விருப்பம். ஐபிஎல் போட்டி போல தமிழ்நாடு முழுவதும் ஹைக்கூ போட்டி வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய ஆசை.
இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அந்த பகுதியைச் சேர்ந்த கவிதை எழுதுபவர்களை பரிசு கொடுத்து ஊக்கப்படுத்த முடியும். அதேபோல பெண்கள் நிறைய எழுத வேண்டும். படிக்க வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு ரசனை அதிகம். நடிகை அபிராமி சிறு வயதிலேயே சங்கீதம் கற்று பாட தெரிந்தவர். அதனால் அபிராமி பாடுகிறாரே என யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அவர் இன்னும் நிறைய பாட வேண்டும். லிங்குசாமியுடன் இணைந்ததால் இயக்குநர் சரண் தற்போது கவிஞர் சரணாக மாறிவிட்டார். கௌதம் மேனனும் ஹைக்கூ எழுதத் தொடங்கினால் அது எங்கேயோ போகும். ரசனை தான் வாழ்க்கை. ரசனை இல்லாத வாழ்க்கை வாழ்க்கை அல்ல. பிருந்தா பாரதியின் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் புத்தகத்தை பலமுறை படித்திருக்கிறேன். அவரும் இன்னும் எழுத வேண்டும். வாசிப்பை அதிகப்படுத்தினால் வாழ்க்கை முறை மாறும். பேச்சு சிந்தனை செயல் எல்லாமே மாறும்” என்று பேசினார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் பேசும்போது,
“லிங்குசாமியை ஒரு இயக்குநராக எல்லோருக்குமே தெரியும் ஆனால் இங்கே அவர் கோடம்பாக்கத்தில் இயக்குனராக ஆவதற்கு முன்பே அவர் கும்பகோணத்தில் கவிஞராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக தான் இங்கே இயக்குனராக மாறினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேற்பட்டது அவருடைய இந்த இலக்கிய பயணம். அவருக்குள் ஹைக்கூ கவிதை ஆற்றல் மலைமலையாக குவிந்து இருக்கிறது. பேசுவதே கூட அவர் அப்படித்தான் பேசுவார்.
அவர் கவிதைகளை படித்தவர்களையும் அது அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். மலையாளத்தில் ரகுராமன் என்பவர் லிங்குசாமியின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். லிங்குசாமி எழுதிய இந்த மூன்று நூல்களிலும் ஒரு கவிஞனின் பரிணாம வளர்ச்சி எப்படி மாறுகிறது என்பதை நான் கவனித்து பார்க்கிறேன். முதல் தொகுப்பு கவிதைகள் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் ஊட்டக் கூடிய அழகியல் கவிதைகளாக இருந்தது. அடுத்து சமூகம் சார்ந்த கவிதைகள். தற்போது வெளியாகி உள்ள கவிதை தொகுப்பு ஞானம் சார்ந்தது” என்று பேசினார்.
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா பேசும்போது,
“இயக்குனர் லிங்குசாமி கவிதையை கடத்த தெரிந்த ஒரு கலைஞன். என்னுடைய அப்பாவும் ஒரு கவிஞர். அவருக்கு நல்ல கவிதைகள் கேட்கும் போது கண்கள் சிவந்து நீர் கோர்க்கும். அப்படியான கண்களை நான் மறுபடியும் லிங்குசாமியின் கண்களில் பார்க்கிறேன். இப்போது கவிதை நூல் போடுகிறார்கள் என்றாலும் பெரும்பாலானோர் யார் அதை படிக்கிறார்கள் ? அவர்களை படிக்க வைக்க வேண்டும் இல்லையா ? ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20,000 பேரை கவிதை எழுத, வாசிக்க வைத்தவர் இயக்குனர் லிங்குசாமி. வருடந்தோறும் கவிதை போட்டி நடத்துகிறார் 8000 கவிதைகள் வந்துள்ளது. அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து பரிசளித்து ஊக்கப்படுத்தியுள்ளார்” என்று லிங்குசாமி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் அழகாக மேற்கோள் காட்டி அதன் சுவையான பொருளையும் எடுத்துக்காட்டி பேசினார்.
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸ்டைலாக ஒரு இயக்குநர், ஏசி திருலோக சந்தர், ஸ்ரீதர், மணிரத்னம் போல வந்து இளைஞர்கள் மத்தியில் இருப்பார்கள், எனக்கும் கௌதம் மேதனுக்கும் இயக்குநர் மணிரத்தினம் தான் ஆதர்சம் என்றாலும் என்னிடம் 40 சதவீதம் பாக்யராஜ் இருப்பார் வெளியாகாமல் இருக்கும் என்னுடைய படத்தைப் பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் சார். அதற்கான ஆட்கள் இதோ நம்மிடையே எதிரே அமர்ந்திருக்கிறார்கள். இங்கே வந்து புத்தகத்தை பெற்றுக்கொண்ட அபிராமி, ஏதாவது எழுதி கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று கூறினார். நான் அபிராமி அபிராமி அபிராமி என மூன்று முறை எழுதி கையெழுத்து போட்டேன். அதற்கு மேல் அபிராமி பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் இந்த விழாவை அற்புதமாக நடத்திச் சென்றார். உத்தம வில்லன் படத்தில் பணியாற்றிய போது நாங்கள் நெருங்கி பழகினோம். சார் கமல் சாருடன் ஒரு மீட்டிங் இருக்கு ஏற்பாடு செய்யுங்கள். அது உங்களால் தான் முடியும். லிங்குசாமி எந்நேரமும் உங்களைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் என நீங்கள் தான் அவரிடம் சொல்ல வேண்டும் என்று பேசினார்.
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஓவியர் தமிழ்ப்பித்தன் வரைந்த ஓவியங்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டன.
- johnson pro
📧 johnmyson@gmail.com
📞 +91 94449 00048
X: @johnsoncinepro
Insta: @johnsoncinepro
FB: Johnson Pro