
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!
இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான ‘Unaccustomed Earth’-ல் நடிக்கவுள்ளார்.
நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த ‘சித்தா’ மற்றும் ‘3BHK’ ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான ‘Unaccustomed Earth’ தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் இந்திய-அமெரிக்க சமூகத்திற்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், எதிர்பார்ப்பு, கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளை நெருக்கமாகவும், நுணுக்கமாகவும் சொல்கிறது.
பொறுப்பான மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பருல் சவுத்ரி (ஃப்ரீடா பிண்டோ) தனது முன்னாள் காதலன் அமித் முகர்ஜியை (சித்தார்த்) நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது அவள் வாழ்க்கை தடுமாறுகிறது. கேம்பிரிட்ஜைச் சேர்ந்த அன்பான பெங்காலி-அமெரிக்கரான அமித் தன் நண்பர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், வேலை – காதல் இரண்டையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறார். இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கதை.
தொழில்நுட்பக் குழு விவரம்:
தயாரிப்பு: ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷனுடன் இணைந்து தயாரிக்கிறது,
திரைக்கதை ஆசிரியர்: மாதுரி ஷேகர் (3 பாடி பிராப்ளம், தி நெவர்ஸ்),
இயக்கம், நிர்வாகத் தயாரிப்பு (முதல் இரண்டு எபிசோட்): ரித்தேஷ் பத்ரா (தி லஞ்ச்பாக்ஸ்),
மற்ற நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: ஜான் வெல்ஸ், ஜும்பா லஹிரி, நிஷா கணத்ரா, எரிகா சலே, எரின் ஜோன்டோவ் மற்றும் செலியா கோஸ்டாஸ் ஆகியோர்.
எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் ஸ்ட்ரீம் ஆகும்.